
ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்
நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன?
சுயநலமற்ற பணி புரிதலைப் பற்றிய நடைமுறை பாடங்கள்
ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
========
Talk 118.
வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மா, அதாவது தன்னலமற்ற பணி புரிதல், என்பதைப் பற்றி கேட்டார். பதில் ஒன்றும் அளிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, பகவான் மலையின் மீது சென்றார்; பண்டிதர் உள்பட சிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். வழியில் மிகுந்த முட்கள் கொண்ட ஒரு தடியை பகவான் எடுத்துக் கொண்டார். உட்கார்ந்து, மெதுவாக அதன் மீது வேலை செய்ய ஆரம்பித்தார். முட்கள் வெட்டப்பட்டன; முடிச்சுகள் வழுவழுப்பாக மாற்றப்பட்டன; தடி முழுதும் ஒரு கரகரப்பான இலையின் மூலம் மெருகேற்றி, பளபளக்கச் செய்யப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கு இந்த செயல் நடைபெற்றது. முள்செறிந்த தடியின் தற்போதைய அற்புத தோற்றத்தைக் கண்டு எல்லோரும் வியந்தனர். அப்போது அங்கு வந்த இடைய பையன், தனது தடியைத் தொலைத்து விட்டதாகச் சொல்லி கவலைப்பட்டான். பகவான் உடனே புதிய தடியை பையனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார்.
இந்த நிகழ்ச்சி தமது கேள்விக்கு, நடைமுறை-மெய்மையாக கிடைத்த பதில் என்று பண்டிதர் சொன்னார்.
========
Talk 581.
மகரிஷியிடம் கொடுப்பதற்காக ஒரு குழந்தையிடம் பெற்றோர்கள் ஒரு பொருளைக் கொடுத்தனர். அதை மகரிஷியிடம் கொடுக்கும்படி அவர்கள் குழந்தையைத் தூண்டி விட்டனர். குழந்தை சந்தோஷத்துடன் பொருளை மகரிஷியிடம் கொடுத்தது. மகரிஷி சொன்னார் : “பாருங்கள்! குழந்தை ஒரு பொருளை பகவானுக்கு அளித்தால், அது தான் தன்னலமற்ற தியாகம். குழந்தைகளிடம் கூட பகவானுக்கு எவ்வளவு தாக்கம் இருக்கிறது பாருங்கள். ஒவ்வொரு நன்கொடையும் தன்னலமற்ற தன்மையைக் குறிப்பிடுகிறது. இது தான் முழு நிஷ்காம கர்மா, தன்னலமற்ற பணியாகும். இதன் பொருள் மெய்யான துறவு, தியாகம். ஈகை அளிக்கும் தன்மை வளர்க்கப் பட்டால் அது தியாகமாக ஆகி விடுகிறது. ஒரு பொருள் விருப்பத்துடன் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால், அது கொடுப்பவருக்கும் பெற்றுக் கொள்பவருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அதே பொருள் திருடிக் கொள்ளப்பட்டால், அது இருவருக்கும் துயரத்தை அளிக்கிறது. தானம், தர்மம், நிஷ்காம கர்மம், இவை எல்லாம் தியாகம் தான். “என்னுடையது” என்ற எண்ணம் விட்டு விடப்பட்டால், அது சித்த சுத்தி, அதாவது தூய்மை அடைந்த மனம். “நான்” என்பது விட்டு விடப்பட்டால், அது சுய சொரூப ஞானம். பிறருக்கு தன்னலமின்றி கொடுக்கும் குணம் விருத்தியானால், அது ஞானத்தை விளைவிக்கிறது.
பிறகு சில நேரம் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு இள வயது பையன், பெற்றோர்களின் துணையில்லாமல், தனியாக வந்தான். அவன் செங்கம் என்ற நகரிலிருந்து பஸ்ஸில் ஏறி இங்கு வந்திருக்கிறான். பகவான் சொன்னார் : “இந்தப் பையன் பெற்றோர்களையும் விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறான். இதுவும் தியாகத்திற்கு ஒரு உதாரணமாகும்.”
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா