நான் யார்? (1 – 8)
ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி
(வினா-விடை வடிவம்)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
நான் யார்?
சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா னறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.
1 நான் யார்?
ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தமெனும் பஞ்ச விஷயங்களையும் தனித் தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்ஷஸ், ஜிஹ்வை, கிராணமென்கிற ஞானேந்திரியங்க ளைந்தும் நானன்று. வசனம், கமனம், தானம், மல விஸர்ஜ்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்க ளைந்தும் நானன்று. சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. நினைக்கின்ற மனமும் நானன்று. சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களு மற்று, விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று.
2 இவையெல்லாம் நானல்லாவிடில் பின்னர் நான் யார்?
மேற்சொல்லிய யாவும் நானல்ல வென்று ‘நேதி’ செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.
3 அறிவின் சொரூப மென்ன?
அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.
4 சொரூப தரிசனம் எப்போது கிடைக்கும்?
திருசியமாகிய ஜகம் நீங்கிய விடத்துத் திருக்காகிய சொரூப தரிசன முண்டாகும்.
5 ஜகமுள்ள (தோன்றுகின்ற போதே சொரூப தரிசன முண்டாகாதா?
உண்டாகாது.
6 ஏன்?
திருக்கும் திருசியமும், ரஜ்ஜுவும் சர்ப்பமும் போன்றவை. கற்பித சர்ப்பஞானம் போனா லொழிய அதிஷ்டான ரஜ்ஜுஞானம் உண்டாகாதது போல, கற்பிதமான ஜகதிருஷ்டி நீங்கினாலொழிய அதிஷ்டான சொரூப தரிசன முண்டாகாது.
7 திருசிய மாகிய ஜகம் எப்போது நீங்கும்?
சர்வ அறிவிற்கும் சர்வ தொழிற்கும் காரண மாகிய மனம் அடங்கினால் ஜகம் மறையும்.
8 மனதின் சொரூப மென்ன?
மனம் என்பது ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி. அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது. நினைவுகளை யெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மன மென்றோர் பொருளில்லை; ஆகையால் நினைவே மனதின் சொரூபம்.
நினைவுகளைத் தவிர்த்து ஜகமென்றோர் பொருள் அன்னியமா யில்லை; தூக்கத்தில் நினைவுகளில்லை, ஜகமுமில்லை; ஜாக்ர சொப்பனங்களில் நினைவுகளுள, ஜகமும் உண்டு. சிலந்திப் பூச்சி எப்படித் தன்னிடமிருந்து, வெளியில் நூலைநூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்ளுகிறதோ, அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து ஜகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்ளுகிறது.
மனம் ஆத்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும். ஆகையால், ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது; சொரூபம் தோன்றும் (பிரகாசிக்கும் போது ஜகம் தோன்றாது; மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியும். தான் என்பது ஆத்மசொரூபமே. மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை அனுசரித்தே நிற்கும்; தனியாய் நிற்காது. மனமே சூஷ்ம சரீர மென்றும் ஜீவ னென்றும் சொல்லப்படுகிறது.