நான் யார் ? (23)
ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி
(வினா-விடை வடிவம்)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
நான் யார்? (தொடர்ச்சி)
23. முமுக்ஷ க்களுக்கு நூற்படிப்பால் பிரயோஜன முண்டா ?
எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால், மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதால் பயனில்லை. மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள் விசாரிக்க வேண்டுமே யல்லாமல், எப்படி நூல்களில் விசாரிப்பது?
தன்னைத் தன்னுடைய ஞானக்கண்ணாற் றானே யறிய வேண்டும். ‘தான்’ பஞ்ச கோசங்களுக்குள் இருப்பது ; நூல்களோ அவற்றிற்கு வெளியி லிருப்பவை. ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை நூல்களில் விசாரிப்பது வீணே. கற்றவை யனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.
நான் யார் ? (23)