விசார சங்கிரகம் – சுய விசாரணை (4)
(4)
பக்தர்:
ஒருவர் “நான்” என்ற முறையில் எழும் ‘தான்மை அகங்காரத்தின்’ மூலத்தைப் பற்றி விசாரிக்கும்போது, எண்ணிலடங்காத பல வித எண்ணங்கள் எழுகின்றன; தனியாக “நான்” என்னும் எண்ணம் இல்லை.
மகரிஷி:
நான் என்னும் “தன்மை” தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், வாக்கியங்களில் தோன்றும் மற்றவை எல்லாம், தன்மையைத் தான் மூலாதாரமாகக் கொண்டுள்ளன. அதே போல் உள்ளத்தில் தோன்றும் எல்லா எண்ணங்களும், முதல் மன நிலையான “நான்” என்ற தான்மையை, ‘நான் உடல்’ என்ற முறையில் ஏற்படும் அறிவைத் தான் மூலாதாரமாகக் கொண்டுள்ளன. தான்மை எழுவது தான் மற்ற எல்லா எண்ணங்களும் எழுவதற்கு காரணமும் மூலமும் ஆகும். எனவே, சம்சாரமென்னும் மாய மரத்தின் வேரான தான்மையின் அகங்காரம் அழிக்கப்பட்டால், வேரோடு களையப் பட்ட மரம் போல் மற்ற எல்லா எண்ணங்களும் அழிந்து விடும்.
ஒருவரது ஆன்மீக சாதனைக்கு தடங்கலாக எந்த எண்ணங்கள் எழுந்தாலும், மனதை அந்த திசையில் போக விட அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக, மனதை ஆன்மாவான ஒருவரது சுய சொரூபத்தில் உறைய வைக்க வேண்டும். “என்ன வினோதமான நிகழ்வுகள் எல்லாம் நிகழ்கிறதோ, அவை நிகழட்டும்; நாம் பார்க்கலாம்”, என்ற மனப்பாங்குடன், ஒருவர் நடப்பதற்கெல்லாம் சாட்சியாக இருக்க வேண்டும். இது தான் ஒருவரது சாதனையாக இருக்க வேண்டும்.
வேறு விதத்தில் சொல்லப்போனால், ஒருவர் தோற்றங்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவர் எப்போதும் தனது சுய சொரூபத்தை விட்டு விடவே கூடாது. உடலை சுய சொரூபமாக நினக்கும் தன்மையைக் கொண்ட மனதை, மேற்சொன்ன தடங்கல்களுக்கு காரணமாக இருக்கும் மனதை, நாசம் செய்வதற்கு, இது தான் சரியான வழி முறை. தான்மையை எளிதாக அழிக்கும் இந்த வழிமுறைக்குத் தான், பக்தி, தியானம், யோகம், ஞானம் என்று அழைப்பதற்குரிய தகுதி உள்ளது.
‘நான்’ என்று உள்ளத்தில் பிரகாசித்தவாறு, சுய சொரூபத்தின் தன்மையில் கடவுள் உறைவதால், எண்ணமே தான் பிணைப்பு என்று மறை நூல்கள் அறிவிப்பதால், அந்தக் கடவுளை எப்போதும் மறக்காமல், எந்த விதத்திலாவது “நான்-எண்ணம்” என்ற முறையில் இருக்கும் மனதை அவரிடம் ஒப்படைத்து விட்டு, அமைதியாக இருப்பது தான் மிகவும் சிறந்த சாதனை, பயிற்சி, வழிமுறை. இது தான் மறை நூல்களின் முடிவான, உறுதியான அறிவுரை.
~~~~~~~~
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara
~~~~~~~~
குறிப்பு :
“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.
அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.