What is Self-Enquiry? How to do it? 3 (Tamil)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்

~~~~~~~~

உரையாடல்  532.

பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா?
மகரிஷி.: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது,  எந்த சூழ்நிலைகளிலும் ஆன்மாவின் சொரூபத்துடன் விடாமல் தொடர்பு கொண்டு இருப்பது தான்.  

“நான் யார்?” என்ற விசாரணை ஒன்று தான் உலகத்தின் எல்லா இன்னல்களுக்கும் பரிகாரமாகும். அதுவே பரிபூரண பேரானந்தமும் ஆகும்.

உரையாடல் 197.

மகரிஷி.: “நான் இது இல்லை” அல்லது “நான் அது தான்” என்று சொல்வதற்கு “நான்” என்று ஒன்று இருக்க வேண்டும். இந்த நான் தான்மை தான், அல்லது “நான்-எண்ணம்” தான்.  “நான் எண்ணம்” எழுந்த பிறகு தான், மற்ற எல்லா எண்ணங்களும் எழுகின்றன. எனவே, “நான்-எண்ணம்” தான் வேர்-எண்ணம். வேர் பிடுங்கப்பட்டால், மற்ற எல்லாமும் அதே சமயத்தில் வேரோடு  பிடுங்கப்படுகிறது. எனவே, வேரான “நான்” என்பதை நாடி தேடுங்கள்; “நான் யார்” என்று உங்களையே கேளுங்கள்; அதன் மூலத்தைக் கண்டுபிடியுங்கள்.  பிறகு இவை எல்லாம் மறைந்து விடும், தூய சொரூபம் மட்டும் நிலைத்து நிற்கும்.

பக்தர்.: இதை எப்படி செய்வது?
மகரிஷி.: “நான்” என்பது எப்போதும் உள்ளது – ஆழ்ந்த தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும். தூக்கத்தில் இருந்தவரே தான் இப்போது பேசுகிறார். எப்போதும் “நான்” என்ற உணர்வு இருக்கிறது. அப்படி இல்லையென்றால், நீங்கள் உங்கள் உள்ளமையையே மறுக்கிறீர்களா? நீங்கள் மறுப்பதில்லை. “நான்” என்று சொல்கிறீர்கள். யார் அது என்று கண்டு பிடியுங்கள். 

~~~~~~~~

உரையாடல் 202.

மகரிஷி.: யோசிக்காமல் இருங்கள். எண்ணம் இருக்கும் வரை பயமும் இருக்கும். 

மறதியும் எண்ணமும் “நான்-எண்ணத்திற்கு” தான். அதை பிடித்துக் கொள்ளுங்கள்; அது பூதம் போல் மறைந்து விடும். அதற்குப் பின் மிஞ்சி இருப்பது தான் உண்மையான “நான்”. அது தான் சொரூபம், ஆன்மா. “நான் பிரம்ம சொரூபம்” என்று நினைப்பது ஒருமுக சிந்தனைக்கு சகாயமாகும். அது மற்ற எண்ணங்களை அகற்றி வைக்கிறது.   அந்த ஒரு எண்ணம் மட்டுமே விடாப்பிடியாக இருக்கிறது. யாருக்கு அந்த எண்ணம் என்று பாருங்கள். அது “நானிலிருந்து” எழுகிறது என்று தெரிய வரும். எங்கிருந்து இந்த “நான்-எண்ணம்” எழுகிறது? கூர்ந்து பரிசோதனை செய்யுங்கள். “நான்-எண்ணம்” மறைந்து விடும். உயர்வான சொரூபம் தானாகவே பிரகாசிக்கும். அதற்குப் பிறகு வேறு முயற்சி ஒன்றும் தேவையில்லை. 

~~~~~~~~

உரையாடல் 195.

மகரிஷி.: மனதை நாடி தேடுங்கள். நாடி தேடப்பட்டால், அது மறைந்து விடும். 
பக்தர்.: எனக்குப் புரியவில்லை.
மகரிஷி.: மனம் என்பது எண்ணங்களாலான ஒரு மூட்டை தான். நினைப்பவர் இருப்பதால், எண்ணங்கள் எழுகின்றன. நினைப்பவர் தான் தான்மை. தான்மையை நாடி தேடினால், அது தானாகவே மறைந்துவிடும். தான்மையும் மனமும் ஒன்றே தான். தான்மை என்பது “வேர்-எண்ணமாகும்”; அதிலிருந்து மற்ற எல்லா எண்ணங்களும் எழுகின்றன.  
பக்தர்.: மனதை நாடி தேடுவது எப்படி?
மகரிஷி.: உள்ளுக்குள் மூழ்குங்கள். மனம் உள்ளுக்குள்ளிருந்து தான் எழுகிறது என்று உங்களுக்குத் தெரியும். எனவே உள்ளுக்குள் மூழ்கி, தேடுங்கள். 
பக்தர்.:  எப்படி இதைச் செய்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
மகரிஷி.: நீங்கள் பிராணாயாமம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இயந்திரம் போல மூச்சுக் கட்டுப்பாடு செய்வது இலட்சியத்திற்கு வழி வகுக்காது.  அது ஒரு சகாயம் தான். அதை பயிற்சி செய்யும் போது, அதே சமயத்தில், மனதை கூர்ந்து கவனித்து, “நான்” எண்ணத்தை நினைவில் வைத்துக்கொண்டு, அதன் மூலத்தை தேடுங்கள்.  பிறகு, மூச்சு அமிழும் அதே இடத்தில், “நான்” எண்ணம் எழுவதை அறிவீர்கள். அவை இரண்டும் ஒன்றாக அமிழ்கின்றன, எழுகின்றன. “நான்” எண்ணமும் மூச்சுடன் அமிழும். அதே சமயத்தில், இன்னொரு பிரகாசமான, வரையறையில்லாத “நான் – நான்” வெளிப்படும். அது உடையாமல், தொடர்ந்து விளங்கும். அது தான் இலட்சியம், குறிக்கோள். அது பல பெயர்களால் அழைக்கப் படுகிறது – கடவுள், ஆன்மா, குண்டலினி சக்தி, உயிர் உணர்வு, யோகம், பக்தி, ஞானம், இத்தியாதி.  

~~~~~~~~

உரையாடல் 196.

மகரிஷி.: சாதகரின் நிலைக்கும், அவரது முந்தைய மனப்போக்குகளுக்கும் தகுந்தவாறு, பல வித வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன.  உண்மையில், இரண்டு முறைகள் தான் உள்ளன : சுய விசாரணை, பக்தி. ஒன்று மற்றொன்றிற்கு வழி வகுக்கிறது.

பக்தர்.: “நான்” என்பதைத் தேடினால், காண்பதற்கு ஒன்றுமில்லை. 

மகரிஷி.: உங்களை உடலுடனும், பார்வையை கண்களுடனும் இணைத்து வைத்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டிருப்பதால்,  எதையும் காணவில்லை என்று சொல்கிறீர்கள். காண்பதற்கு என்ன இருக்கிறது? யார் காண்பது? எப்படிக் காண்பது?  ஒரே ஒரு உணர்வு தான், “நான் – எண்ணமாக” வெளிப்பட்டு, உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு, கண்கள் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, சுற்றிலும் உள்ள பொருள்களைக் காண்கிறது. தனிப்பட்ட நபர், விழிப்பு நிலைக்கு வரையறுக்கப் பட்டிருப்பதால், வேறு வித்தியாசமான ஒன்றைக் காண எதிர்பார்க்கிறார். அவரது புலன்களின் சாட்சி தான் அதற்கு அதிகார முத்திரையாக அமைகிறது. ஆனால், “காண்பவர், காணப்படுவது, பார்வை”, இவையெல்லாம் “நான் நான்” என்னும் ஒரே உணர்வின் வெளிப்பாடுகள் தான் என்று அவர் ஒத்துகொள்வதில்லை. ஆழ்ந்த சிந்தனையானது, சுய சொரூபம் கண்ணுக்குத் தெரியவேண்டும் என்ற மாயையை அகற்ற உதவுகிறது.  இப்போது எப்படி “நான்” என்று உணர்கிறீர்கள்? நீங்கள் இருப்பதை அறிய உங்களுக்கு முன்னால் ஒரு நிலைக்கண்ணாடியைப் பிடித்துக் கொள்கிறீர்களா?  உணர்வு தான் “நான்”. அதை உணர்ந்துக் கொள்ளுங்கள்; அது தான் உண்மை. 

பக்தர்.: எண்ணங்களின் மூலத்தை விசாரிப்பதில், “நான்” என்று ஒரு உணர்வு இருக்கிறது, ஆனால் அதில் எனக்கு திருப்தியில்லை. 

மகரிஷி.: உண்மை தான். “நான்” என்ற உணர்வு ஒரு உருவத்துடன், ஒருவேளை உடலுடன், சம்பந்தப்பட்டிருக்கலாம். சுய சொரூபத்துடன் ஒன்றும் சம்பந்தப்பட்டு இருக்கக் கூடாது. சொரூபமானது, எதனுடமும் சம்பந்தப்படாமல் இருக்கும் தூய மெய்மை. அதன் பிரகாசத்தில் தான், உடல், தான்மை போன்றவைகள் பிரகாசிக்கின்றன. எண்ணங்களை அறவே நீக்கிய அமைதியில், தூய உணர்வு மட்டுமே மிஞ்சி நிற்கும். 

தூக்கத்திலிருந்து விழித்த உடனேயே, உலகத்தை உணர்வதற்கு முன்னால், அந்த தூய “நான் நான்” உள்ளது. தூங்காமலும், எண்ணங்கள் உங்களை ஆழ்த்துவதற்கு முன்னாலும், அதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.  அது உறுதியாக பிடித்துக் கொள்ளப்பட்டால், உலகம் காட்சியளித்தாலும் பரவாயில்லை. காண்பவர், வெளிப்பாடுகளால் பாதிக்கப்படாமல் இருப்பார். 

~~~~~~~~

உரையாடல் 290.

பக்தர்.: தியானத்தில் மனம் நிலையாக இருப்பதில்லை.  
மகரிஷி.: எப்போது அது அலைந்தாலும், மீண்டும் மீண்டும் உட்புறம் திருப்புங்கள். 

பக்தர்.: துயரம் என்னை ஆட்கொள்ளும்போது, சுய விசாரணை செய்ய முடிவதில்லை. 
மகரிஷி.: ஏனெனில், மனம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதை வலிமையாக்குங்கள். 

பக்தர்.: எந்த விதத்தில்?
மகரிஷி.: சத்சங்கம் (ஞானியரின் அறிவுரைகளுடன் தொடர்பு), ஈஸ்வர ஆராதனை (கடவுள் வழிபாடு), பிராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு).

பக்தர்.: இதனால் என்ன விளைகிறது?
மகரிஷி.: துயரம் நீக்கப்படுகிறது. துயரத்தை அகற்றுவது தான் நமது குறிக்கோள்.  நீங்கள் சந்தோஷத்தைப் புதிதாகப் பெறுவதில்லை. உங்களுடைய சுய தன்மையே சந்தோஷம் தான். பேரானந்தம் புதிதாக சம்பாதிக்கப் படுவதில்லை. செய்யப்படுவதெல்லாம், துன்பத்தை அகற்றுவதற்கு தான். முன்பு சொன்ன வழிமுறைகள்  இதை செய்கின்றன. 

பக்தர்.: அப்பியாசம் (பயிற்சி) அதற்கான சக்தியை எனக்குத் தர வேண்டும். 
மகரிஷி.: பயிற்சி தான் சக்தி.  

பக்தர்.: அந்த பயிற்சி என்ன? 
மகரிஷி.: சுய சொரூபத்தை விசாரணை செய்வது.  அவ்வளவு தான். “ஆத்மன்யேவ வஸம் நயேத்”. மனதை ஆன்மாவின் மேல் பொருத்த வேண்டும். 

 

 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!