சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (4)
ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
~~~~~~~~
உரையாடல் 322.
ஒரு பண்பட்ட பெண்மணி, சென்னையின் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரின் மகள், இவ்வாறு கேட்டாள் : நீங்கள் அறிவுரை கூறியபடி எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “நான் யார்” என்ற சுய விசாரண மட்டுமே தானா?
மகரிஷி.: மன அசைவின்றி இருக்க வேண்டும், அவ்வளவு தான். செய்துப் பாருங்கள்.
பக்தர்.: அது இயலாதது. சாத்தியமற்றது.
மகரிஷி.: ஆமாம். அந்த காரணத்துக்காக தான், “நான் யார்” என்ற சுய விசாரணை அறிவுறுத்தப்படுகிறது.
பக்தர்.: இந்த கேள்வியைக் கேட்டால், உள்ளுக்குள்ளிருந்து ஒரு பதிலும் வருவதில்லை.
மகரிஷி.: எந்த விதமான பதிலை எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் இல்லையா? இன்னும் என்ன?
பக்தர்.: எண்ணங்கள் மேலும் மேலும் எழுகின்றன.
மகரிஷி.: அப்போதே உடனே இதே கேள்வியை கேளுங்கள், “நான் யார்?”
~~~~~~~~
உரையாடல் 392.
பல்வேறு நிலையங்கள் பின்பற்றும் வேதாந்தத்தின் சிக்கலான புதிர்பாதைகள், விஷயங்களை தெளிவாக்கி, மெய்மையை வெளிப்படுத்தும் என்று சொல்லப் படுகிறது. ஆனால், உண்மையில், அவை குழப்பம் தேவையில்லாதபோது குழப்பத்தை உண்டாக்குகின்றன. எதையும் அறிந்துக் கொள்ள ஆன்ம சுய சொரூபம் இருக்கவேண்டும். சுய சொரூபம் வெளிப்படையானது. ஏன் சுய சொரூபமாகவே இருக்கக்கூடாது? சுய சொரூபம் இல்லாத விஷயங்களை விளக்க என்ன தேவை இருக்கிறது?
குழப்பம் ஏன் உண்டாக்கப்பட்டு, பின் விளக்கப்பட வேண்டும்? ஆஹா! இந்த புதிர்பாதையில் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் இருக்கும் மனிதர் அதிர்ஷ்டசாலி தான்!
நிச்சயமாக என் அதிர்ஷ்டம் தான், நான் இதில் ஈடுபடவே இல்லை. இதில் நான் ஈடுபட்டிருந்தால், ஒருவேளை நான் எங்கும் முன்னேறாமல் எப்போதும் குழப்பத்தில் இருந்திருப்பேன். என்னுடைய பூர்வ மனப்போக்குகள், வாசனைகள், என்னே நேரடியாக “நான் யார்” என்ற சுய விசாரணைக்கு எடுத்துச் சென்றன. இது நிச்சயமாக என் அதிர்ஷ்டம் தான்!
~~~~~~~~
உரையாடல் 429.
பங்களூரிலிருந்து சில பெண்மணிகள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி கேட்டார். எங்கள் நோக்கத்தில், உலகம் வித்தியாசங்கள் கொண்டு உள்ளது. இந்த வித்தியாசங்களையெல்லாம் கடந்து எல்லா பொருள்களிலும் உள்ள ஒரே சாராம்சத்தை எப்படி புரிந்துக் கொள்வது?
மகரிஷி.: “நான் செய்கிறேன்” என்ற “வினையாற்றும் உணர்வால்”, கர்த்திருத்துவத்தால், வித்தியாசங்கள் விளைகின்றன. வேர் அழிக்கப்பட்டால் விளைவுகளும் அழிக்கப்படுகின்றன. எனவே, “நான் செய்கிறேன்” என்ற உணர்வை விட்டு விடுங்கள். வித்தியாசங்கள் மறைந்து விடும், உண்மைத் தன்மையான மெய்மை தன்னை வெளிப்படுத்தும்.
ஒருவர் “நான் செய்கிறேன்” என்ற உணர்வை விடுவதற்கு, “யார் செய்கிறார்?”என்று தேடி கண்டுபிடிக்க வேண்டும். உள்ளுக்குள் விசாரியுங்கள். “நான் செய்கிறேன்” என்ற உணர்வு மறைந்து விடும். சுய விசாரணை தான் இதற்கு வழிமுறை.
~~~~~~~~
உரையாடல் 450.
போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பக்தை, தனக்கு ஏற்பட்ட கடவுள் சிவனின் தரிசனம் பிரத்தியக்ஷமாக மீண்டும் கிடைக்க வேண்டும் என்று வேண்டினாள்.
மகரிஷி சொன்னார்:
பிரக்ஞை உணர்வாக விளங்கும் ஆன்மா இல்லாத ஒரு நொடி கூட கிடையாது. காண்பவர் இந்த உணர்விலிருந்து அகன்றும் இருக்க முடியாது. இந்த பிரக்ஞை உணர்வு தான் நிலையான முடிவற்ற ஒரே ஒரு சொரூபம். காண்பவர் தன்னையே காண முடியாது. தன் கண்களால் தன்னை பிரத்தியக்ஷமாக, ஒரு தரிசனமாகக் காண முடியாததால், அவர் தனது சொரூபத்தையே மறுக்கிறாரா? இல்லை! எனவே, பிரத்தியக்ஷம் என்றால் காண்பது என்று அர்த்தமில்லை. உள்ளமை என்று தான் அர்த்தம்.
“இருப்பது” என்பது உள்ளமையை உணர்வதாகும். அதனால் தான், “நான் அந்த நான்” என்று சொல்லப்படுகிறது. நான் உள்ளேன் என்பது தான் சிவம். சிவம் இல்லாமல் எதுவுமே இருக்க முடியாது. எல்லாம் சிவத்தில் தான் உள்ளது, சிவத்தால் உள்ளது.
எனவே “நான் யார்?” என்று சுய விசாரணை செய்யுங்கள். மனதுள் ஆழ்ந்து மூழ்கி, ஆன்ம சொரூபமாக உறையுங்கள். அது தான் சிவமாக இருப்பதாகும்.
…
சிவனிடம் சரணடைந்து, அவரது இச்சைப்படி நடந்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்புவது போல செய்ய அவரைக் கேட்டால், அது சரணகதி இல்லை, அதற்கு மாறாக கட்டளை இடுவதாகும். அவரை உங்களுக்கு பணிய வைத்து, பிறகு அவரிடம் சரணடவதாக நீங்கள் நினைக்க முடியாது. எது சிறந்தது, அதை எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவரிடம் விட்டு விடுங்கள். சுமை அவருடையது. உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. உங்களுடைய எல்லா கவலைகளும் அவருடையது. இது தான் சரணகதி. இது தான் பக்தி.
அல்லது, யாருக்கு இந்த கேள்விகளெல்லாம் எழுகின்றன என்று விசாரியுங்கள். மனதுள் ஆழ்ந்து மூழ்கி, ஆன்ம சொரூபமாக விளங்குங்கள்.
சாதகருக்கு, இந்த இரண்டு முறைகளில் ஒன்று எப்போதும் உள்ளது.
~~~~~~~~
உரையாடல் 222.
மகரிஷி.: மனம் எண்ணங்களின் ஒரு மூட்டை தான். எண்ணங்களின் மூலம் “நான் – எண்ணத்தில்” உள்ளது. யார் “நான் – எண்ணத்தின்” மூலத்தை விசாரிக்கிறாரோ, அவருக்கு “தான்மை உணர்வு” அழிகிறது. இது தான் உண்மையான விசாரணை. பிறகு உண்மையான “நான்” தானாகவே பிரகாசிப்பது தெரிய வரும்.
பக்தர்.: இந்த “நான் – எண்ணம்” என்னுள்ளிருந்து எழுகிறது. ஆனாலும் ஆன்ம சொரூபம் எனக்கு தெரியவில்லை.
மகரிஷி.: இதெல்லாம் மன கருத்துக்கள் தான். இப்போது நீங்கள் “நான் – எண்ணம்” என்னும் ஒரு தவறான “நானுடன்” இணைந்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த “நான் – எண்ணம்”, எழுகிறது, பின் அமிழ்கிறது. ஆனால், “நான்” என்பதன் உண்மையான சிறப்பு இவை இரண்டிற்கும் அப்பால் உள்ளது. உங்களுடைய உள்ளமையில் ஒரு முறிவு இருக்க முடியாது. தூங்கிய நீங்களே தான் இப்போது விழித்து இருக்கிறீர்கள். உங்களுடைய ஆழ்ந்த தூக்கத்தில் துன்பம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் இப்போது அது உள்ளது. இந்த வித்தியாசத்தை அனுபவிக்க இப்போது என்ன நடந்துள்ளது? உங்களுடைய தூக்கத்தில் “நான் – எண்ணம்” இல்லை, ஆனால் இப்போது அது உள்ளது. “உண்மையான நான்” தெரியவில்லை, “பொய்யான நான்” உண்மை போல் பகட்டாக உலவிக்கொண்டிருக்கிறது. இந்த பொய்யான “நான்” தான் உங்களுடைய சரியான ஞானத்திற்கு தடங்கலாகும். இந்த “பொய்யான நான்” எங்கிருந்து எழுகிறது என்று கண்டுபிடியுங்கள். பிறகு அது மறைந்து விடும். நீங்கள் உண்மையில் என்னவாக இருக்கிறீர்களோ, அதுவாகவே நீங்கள் விளங்குவீர்கள், அதாவது வரையற்ற, பூர்த்தியான சுய சொரூபம்.
பக்தர்.: எப்படிச் செய்வது? இதுவரை நான் வெற்றியடைய வில்லையே.
மகரிஷி.: “நான் – எண்ணத்தின்” மூலாதாரத்தைத் தேடுங்கள். அது மட்டுமே தான் ஒருவர் செய்ய வேண்டும். பிரபஞ்சமே “நான் – எண்ணத்தால்” தான் உள்ளது. அது முடிவடைந்தால், துன்பத்திற்கும் ஒரு முடிவு வரும். பொய்யான “நான்”, அதன் மூலாதாரத்தைத் தேடினால் தான் முடிவடையும்.
~~~~~~~~
உரையாடல் 612.
மகரிஷி.: உறுதியின்மை, சந்தேகங்கள், பயங்கள் இவையெல்லாம் இருப்பது, ஆன்ம சொரூபத்தை உணரும் வரை, ஒருவருக்கு இயல்பானது தான். அவை தான்மையை விட்டு பிரிக்கமுடியாதவை. உண்மையில், அவை தான்மை தான்.
பக்தர்.: அவை எப்படி மறையும்?
மகரிஷி.: அவை தான்மை தான். தான்மை அகன்றால், அவை அதனுடன் அகலும். தான்மையே பொய்யானது. தான்மை என்றால் என்ன? விசாரியுங்கள். உடல் உணர்வற்றது; அதனால் “நான்” என்று சொல்ல முடியாது. ஆன்ம சொரூபம் பிரக்ஞை உணர்வு, இரண்டாக இல்லாதது. அதனால் “நான்” என்று சொல்ல முடியாது. யாரும் தூக்கத்தில் “நான்” என்று சொல்வதில்லை. அப்படியென்றால், தான்மை என்பது என்ன? அது உணர்வற்ற உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள ஒன்று. அதற்கு திடமாக வாதிட ஆதாரம் இல்லை. அதைத் தேடினால், அது பூதம் போல மறைந்து விடுகிறது. இதோ பாருங்கள், ஒரு மனிதர், தனக்கு பக்கத்தில், இருளில் ஏதோ இருப்பதாக கற்பனைச் செய்துக் கொள்கிறார். அது ஒருவேளை ஒரு இருண்ட பொருளாக இருக்கலாம். அவர் அதை நெருங்கிப் பார்த்தால், பூதம் காணப்படுவதில்லை; ஆனால் அது அவரால் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் ஒரு மரம், கம்பம் இவற்றைப் போல ஒரு இருண்ட பொருள் என்று தெரிகிறது. நெருங்கிச் சென்று பார்க்காவிட்டால், பூதம் மனிதருக்கு பயங்கர கிலியை உண்டாக்குகிறது. எனவே, நெருங்கிச் சென்று பார்ப்பது ஒன்று மட்டுமே தான் தேவை; அப்படி செய்தால், பூதம் மறைந்துவிடுகிறது. பூதம் உண்மையில் இருக்கவே இல்லை. தான்மையும் அதே போலத் தான். அது உடலுக்கும் தூய பிரக்ஞை உணர்வுக்கும் இடையே உள்ள புலனாகாத ஒரு இணைப்பு. அது மெய்யானது இல்லை. ஒருவர் நெருங்கி பார்க்காதவரை அது தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு அதை நாடி தேடி பார்க்கும்போது, அது இல்லவே இல்லை என்று கண்டுபிடிக்கப் படுகிறது.
ஒரு உதாரணம். இந்து மத திருமண வைபவத்தில், கொண்டாட்டங்கள் 5, 6 நாட்களுக்கு தொடர்கின்றன. ஒரு முறை, ஒரு அந்நியன் மணமகனின் சிறந்த நண்பனாக, மணமகளின் குழுவினால் தவறாக கருதப்பட்டார். அதனால், அவர்கள் அந்நியனை மிகவும் சிறப்பான முறையில் நடத்தினார்கள். அவன் மணமகளின் குழுவினால் அவ்வாறு சிறப்பாக நடத்தப் படுவதைக் கண்ட மணமகனின் குழு, அவன் மணமகளைச் சார்ந்த ஒரு மிக பெரிய மனிதராகக் கருதி, அவர்களும் அவனுக்கு மிக சிறந்த மரியாதை அளித்தனர். அந்நியன் இந்த விதத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் முற்றிலும் அனுபவித்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில், அவன் உண்மை நிலவரத்தை எப்போதும் அறிந்திருந்தான். ஒரு சமயம், மணமகனின் குழு அவனிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி கேட்க விரும்புனார்கள். அதற்காக அவரை நாடினார்கள். அவன் உடனே வரப்போகும் தொல்லையை உணர்ந்தான், அங்கிருந்து அகன்றான். தான்மை விஷயமும் அதே தான். அது நாடி தேடப்பட்டால், அது மறைகிறது. இல்லையெனில், அது தொடர்ந்து தொல்லைப் படுத்துகிறது.
எப்படி அதை நாடி தேடுவது என்பது, ஏற்கனவே இப்படி செய்துள்ளவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளப் படுகிறது. அந்த காரணத்திற்காகத் தான், ஒரு குரு, ஆசான் அணுகப்படுகிறார்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
I would like to know how to do vicharanai?
Most of Ramana Maharshi’s Teachings presented here and in YouTube Videos are only about “Vicharanai”, Self-Enquiry. Read them, watch them, deeply contemplate on them and try to practice them.