விசார சங்கிரகம் – சுய விசாரணை (6)
(6)
பக்தர்:
உட்புற உறுப்புகளில் – மனம் (சிந்தனை), புத்தி (அறிவு), சித்தம் (நினைவு), அகங்காரம் (தான்மை) – இப்படி பல வித மாற்றங்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது, மனதின் நாசம் மட்டுமே முக்தி என்று எப்படி சொல்ல முடியும்?
மகரிஷி:
மனதைப் பற்றி விளக்கம் தரும் நூல்களில், இவ்வாறு சொல்லப்படுகிறது :
“நாம் உண்ணும் உணவின் நுண்ணிய பகுதி திடமாக திரண்டுக் கொண்டு மனமாக உருவாக்கப்படுகிறது;
அது, பற்றுதல், வெறுப்பு, ஆசை, சினம் போன்ற தீவிரமான உணர்ச்சிகளால் வளர்கிறது;
அது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் – இவற்றின் மொத்தத் திரளாக உள்ளதால், ‘மனம்’ என்னும் கூட்டான, ஒருமையான பெயரைப் பெறுகிறது;
அது, நினைப்பது, முடிவு செய்வது போன்ற குணங்களைக் கொள்கிறது;
அது, பிரக்ஞை உணர்வு (சுய தன்மை) காணும் பொருளானதால், அது பார்க்கப்படும் ஒரு ஜடப் பொருளாகும்;
அது, ஜடப் பொருளானாலும், செஞ்சூடான இரும்பைப் போல், உணர்வுடன் கொண்ட தொடர்பால், சுயமாக உணர்வுள்ளதாக தோற்றமளிக்கிறது;
அது, வரையறுக்கப்பட்டது, நிலையில்லாதது, பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; மெழுகு, பொன், மெழுகுவர்த்தி – இவற்றைப் போல் மாறிக்கொண்டே இருப்பது;
அது, புலன்களால் உணரப்பட்ட வாழ்வில் உள்ள தனிமங்களாலான தன்மை கொண்டது;
பார்வை இத்தியாதி புலன் உணர்வின் இருப்பிடம், கண்கள் இத்தியாதி புலனாக உள்ளது போல், மனதின் இருப்பிடம் இதயக் கமலமாகும்;
அது, ஒரு தனிப்பட்ட ஜீவன் ஒரு பொருளைப் பற்றி யோசிப்பது, பிறகு அது ஒரு செயல் வகையாக மாறுவது, பிறகு மூளையில் உள்ள அறிவுடன் ஐந்து புலன்களின் வாய்க்கால்கள் மூலமாக ஓடிச் செல்வது, மூளையின் அறிவுப் பகுதியின் தொடர்புடன் மூளையினால் பொருட்களுடன் இணைந்துக் கொள்வது, பிறகு பொருட்களை அறிந்துக் கொண்டு, அவற்றை அனுபவித்து, திருப்தி அடைவது – இவை எல்லாவற்றின் சேர்ப்பு;
அந்தப் பொருள் தான் ‘மனம்’.”
மனதைப் பற்றிய நூல்களில் மேற்சொன்னவாறு விளக்கம் தரப்படுகிறது.
ஒரு மனிதர், அவர் செய்யும் பல விதமான செயல்பாடுகளால், பல விதமானப் பெயர்களால் அழைக்கப் படுவது போல், ஒரே மனம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம் – என்ற பல விதப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் காரணம், அதன் செயல் வகைகளில் உள்ள வித்தியாசமாகும்; வேறு உண்மையான வித்தியாசம் ஏதுமில்லை.
ஜீவன், கடவுள், உலகம் என்ற எல்லாவற்றின் உருவகமும் மனமே தான். அது ஞானத்தின் மூலமாக சுய சொரூப ஆன்மாவின் உருவகமாக ஆகிவிடும் போது, ‘முக்தி’ உள்ளது. அது பிரம்மனின், சுய சொரூப ஆன்மாவின் தன்மையாகும்.
இது தான் அறிவுரை.
~~~~~~~~
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara
~~~~~~~~
குறிப்பு :
“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.
அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.