What is this Mind
26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி
25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

மனம் என்பது என்ன

ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி தொடர்ந்து கேட்டார்:

பக்தர்: மனமென்றால் என்ன?
மகரிஷி: மனம் என்பது உயிரின் ஒரு தோற்ற வெளிப்பாடு. ஒரு கட்டையோ அல்லது ஒரு நுண்மையான இயந்திரமோ மனம் என்று அழைக்கப்பட முடியாது. முக்கிய சக்தியானது, உயிர்-செயல்பாடுகளாகவும், மனமென்று அழைக்கப்படும் உணர்வு விழிப்புள்ள தோற்றப்பாடுகளாகவும், வெளிப்படுகிறது.

பக்தர்: மனதுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? தன்னை விட வித்தியாசமாக உள்ள உலகத்துடன் அது தொடர்பு கொள்கிறதா?
மகரிஷி: உலகம் என்பது, விழிப்பு நிலையிலும் கனவு நிலையிலும் உணரப்படுகிறது. அது மனதின் செயல்களான, பார்வையாலும் எண்ணத்தாலும் காணப்படும் பொருள். விழிப்பு, கனவு, இவற்றில் எண்ணம் என்னும் செயல்பாடு இல்லையெனில், உலகம் என்னும் உணர்வு அல்லது அனுமானம் இருக்காது. 

தூக்கத்தில் இத்தகைய செயல்பாடு இல்லை. அதனால், ‘பொருள்களும் உலகமும்’ தூக்கத்தில் நமக்கு இருப்பதில்லை. எனவே, தான்மை உணர்வு தூக்கத்திலிருந்து வெளியேறும் செயலின் மூலம் ‘உலகத்தின் உண்மைத் தன்மை’ ஏற்படுத்தப் படலாம்.  தூக்கத்தில், ஜீவன் தனது சுய நிலையை தொடர்வதால், அந்த ‘உலக உண்மைத் தன்மை’ மறைந்து விடலாம், அல்லது விழுங்கப்பட்டு விடலாம். உலகம் வெளிப்படுவதும், மறைந்து போவதும், ஒரு சிலந்தி தனது வலையை வெளிப்படுத்தி, பின்னர் பின்வாங்கி இழுத்துக்கொள்வது போலாகும்.   இந்தச் சிலந்தி, விழிப்பு, கனவு, தூக்கம் – இந்த எல்லா நிலைகளிலும் அடிப்படையாக இருக்கிறது. ஒரு ‘மனிதரினுள்’ உள்ள இத்தகைய சிலந்தி, ஜீவ ஆன்மா அல்லது ‘நான் என்னும் சுய நிலை’ என்று அழைக்கப் படுகிறது. அதுவே, சூரியனிலிருந்து வெளிப்படுவதாகச் சொல்லப்படும் ‘உலகம்’ என்ற சம்பந்தத்தில் பேசப்படும்போது, அது பிரம்மன் அல்லது மிகவும் உயர்வான ஸ்வரூபம் என்று அழைக்கப்படுகிறது. மனிதருள் உள்ள அவரே தான், சூரியனுள்ளும் உறைகிறார்.  

ஆன்மா அல்லது ஸ்வரூபம் வெளிப்படாமலும் செயல்பாடுகள் இல்லாமலும் உள்ள போது, நபர் – பொருள், பார்ப்பவர் – பார்க்கப்படுவது என்பது போன்ற இரட்டைகள் இருக்காது. மனதின் தோற்றத்தின் இறுதியான காரணத்தைப் பற்றிய விசாரணையை தீவிரமாக தொடர்ந்தால், மனம் என்பது, ஆத்மன் அல்லது பிரம்மன் என்று சொல்லப்படும் ஆன்ம ஸ்வரூபத்தின் வெளிப்பாடு தான் என்பது விளங்கும். மனம் “சூக்ஷ்ம சரீரம்” அல்லது ‘நுண்ணிய உடல்” என்று அழைக்கப் படுகிறது. ஜீவன் என்பது தனிப்பட்ட ஆன்மா. தனித்துவத்தின் வளர்ச்சியின் சாராம்சம் ஜீவன். ஒருவரின் தனிதன்மை தான் ஜீவன் என்று குறிப்பிடப்படுகிறது.  எண்ணம் அல்லது மனம் என்பது, ஜீவனின் நிலைப்படி என்றோ, அல்லது ஜீவன் தன்னை வெளிப்படுத்தும் விதங்களில் ஒன்று என்றோ சொல்லப்படுகிறது.  இந்த வெளிப்பாட்டின் முந்தைய நிலை தாவர நிலையாகும்.

இந்த மனம் என்பது எப்போதும்,  மனத்தைத் தவிர உள்ள ஏதாவது பொருளுடன் சம்பந்தப்பட்டே பார்க்கப்படுகிறது. மனம் என்பது தனியாக, தானாக, பார்க்கப்படுவதில்லை. எனவே, மனமும் பொருளும் ஒருங்கே, ஒன்று சேர்ந்தே உய்கின்றன.  

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 25.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி
25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
25 B. மனம் என்பது என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!