What is family bondage? How to get release from it?
33. உலகம் மாயையா அல்லது மெய்மையா
32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள்

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

~~~~~~~~

உரையாடல் 524

ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி?

மகரிஷி: சரி,  குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்? இந்த கேள்விகளுக்கு பதில்கள் கண்டுபிடிக்கப் பட்டால், மற்ற கேள்விகளும் தாமாகவே தீர்க்கப் பட்டுவிடும்.

சொல்லுங்கள், நீங்கள் குடும்பத்தில் இருக்கிறீர்களா, அல்லது குடும்பம் உங்களுக்குள் இருக்கிறதா?

யாத்ரீகர் பதில் சொல்லவில்லை.

பிறகு மகரிஷி தமது பதிலைத் தொடர்ந்தார். நீங்கள் யார்? நீங்கள் வாழ்க்கையின் மூன்று அம்சங்களை, அதாவது, விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற நிலைகளைக் கொண்டவர். தூக்கத்தில் நீங்கள் குடும்பத்தையும் அதன் பந்தங்களையும் உணரவில்லை. எனவே இந்தக் கேள்விகள் எழவில்லை. இப்போது குடும்பத்தையும் அதன் பந்தங்களையும் உணர்கிறீர்கள். எனவே நீங்கள் அதிலிருந்து விடுபடுவதை நாடுகிறீர்கள். ஆனால் இந்த எல்லா நிலைகளிலும் நீங்கள் அதே மனிதர் தான்.

பக்தர்.: இப்போது நான் குடும்பத்தில் இருப்பதாக உணர்வதால் நான் அதிலிருந்து விடுபட விரும்புவது சரி தான்.

மகரிஷி.: நீங்கள் சொல்வது சரி தான்…ஆனால், யோசித்துச் சொல்லுங்கள் :  நீங்கள் குடும்பத்தில் இருக்கிறீர்களா, அல்லது குடும்பம் உங்களுக்குள் இருக்கிறதா?

அப்போது வேறொரு வருகையாளர் குறுக்கிட்டு சொன்னார்: குடும்பம் என்றால் என்ன?  

மகரிஷி.: அது தான் விஷயம். அது தெரிய வேண்டும்.

பக்தர்.: என் மனைவி இருக்கிறாள், எனது குழந்தைகளும் இருக்கின்றன. அவர்கள் என்னைச் சார்ந்து இருக்கின்றனர். அது தான் குடும்பம். 

மகரிஷி.: உங்களது குடும்ப நபர்கள் உங்கள் மனதைப் பிணைக்கிறார்களா? அல்லது நீங்கள் உங்களை அவர்களுடன் பிணைத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களிடம் வந்து, “நாங்கள் உங்கள் குடும்பமாக அமைகிறோம். எங்களுடன் இருங்கள்?” என்று சொல்கிறார்களா? அல்லது நீங்கள் அவர்களை உங்களது குடும்பமாகக் கருதி, அவர்களுடன் நீங்கள் பந்தப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா? 

பக்தர்.: நான் அவர்களை என் குடும்பமாகக் கருதி அவர்களுடன் பந்தப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். 

மகரிஷி.: ஆமாம், அது தான்.  நீங்கள் இன்னார் உங்கள் மனைவி, இன்னார் உங்கள் குழந்தைகள் என்று நினைப்பதால், நீங்கள் அவர்களுடன் பிணைந்து உள்ளதாகவும் நினைக்கிறீர்கள்.  

இந்த எண்ணங்கள் உங்களுடையவை தான். அவை தமது உள்ளமைக்கே உங்களை தான் ஆதாரமாகக் கொண்டுள்ளன.  ஒன்று, நீங்கள் இந்த எண்ணங்களை அனுசரிக்கலாம். அல்லது நீங்கள் அவற்றை விட்டு விடலாம். முதலாவது பந்தம் அல்லது பிணைப்பாகும். இரண்டாவது விடுவிப்பாகும்  

பக்தர்.: எனக்கு இன்னும் தெளிவாகப் புரியவில்லை. 

மகரிஷி.: யோசிப்பதற்காக நீங்கள் இருக்க வேண்டும். நீங்கள் இந்த எண்ணங்களை யோசிக்கலாம், அல்லது வேறு எண்ணங்களை யோசிக்கலாம். எண்ணங்கள் மாறுகின்றன, ஆனால் நீங்கள் மாறுவதில்லை. கடந்துச் செல்லும் எண்ணங்களை போக விட்டு விட்டு, மாறாமல் நிலையாக இருக்கும் ஆன்ம சுய சொரூபத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். எண்ணங்கள் தான் உங்களது பந்தமாக அமைகின்றன. அவற்றை விட்டு விட்டால், விடுவிப்பு ஏற்படுகிறது. பந்தம் வெளிப்புறம் இல்லை. எனவே விடுவிப்புக்காக வெளிப்புற தீர்வு நாடப்பட வேண்டியதில்லை. இவ்வாறு யோசித்தபடி பந்தத்தில் பிணைக்கப்படுவதும், அல்லது யோசிப்பதை நிறுத்திவிட்டு விடுவித்து இருப்பதும், உங்களது திறன் அல்லது ஆற்றலில் தான் உள்ளது.

பக்தர்.: ஆனால், யோசிக்காமல் இருப்பது எளிதில்லையே.

மகரிஷி.: நீங்கள் யோசிப்பதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணங்களின் மூலத்தை மட்டும் தேடுங்கள். அதைத் தேடி கண்டுபிடியுங்கள். ஆன்மா சுய சொரூபம் தானாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது கண்டுபிடிக்கப் பட்டதும், எண்ணங்கள் தாமாகவே நின்று விடும். அது தான் பந்தத்திலிருந்து விடுவிப்பு. 

பக்தர்.: சரி. நான் இப்போது புரிந்துக் கொண்டேன். நான் இப்போது கற்றுக் கொண்டேன். எனக்கு ஒரு குரு தேவையா?

மகரிஷி.: நீங்கள் உங்களை ஒரு நபர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வரையில், நீங்கள் குறைபாடுகளினால் பிணைக்கப் படவில்லை என்றும், உங்களுடைய உண்மைத் தன்மையானது பந்தமும் குறைபாடுகளும் இல்லாதது என்றும், உங்களுக்கு அறிவுறுத்திக் காட்டுவதற்கு, ஒரு குரு தேவை.  

~~~~~~~~

உரையாடல் 43.

திரு டி. ராகவையா, புதுக்கோட்டை மாநிலத்தின் திவான் மகரிஷியிடம் கேட்டார்.

இந்த உலகத்தின் மீது  மனிதர்களான எங்களுக்கு ஏதாவது ஒரு துயரம் அல்லது கவலை இருந்துக்கொண்டே உள்ளது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரிவதில்லை. கடவுளைப் பிரார்த்திக்கிறோம். ஆனாலும் திருப்தி அடைவதில்லை. நாங்கள் என்ன செய்வது?

மகரிஷி.: கடவுளை நம்புங்கள்.

பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம்; ஆனால் உதவி கிடைப்பதில்லை. 

மகரிஷி.: ஆமாம். நீங்கள் சரணடைந்திருந்தால், கடவுளின் சித்தப்படி உங்களால் நடந்துக் கொள்ள முடிய வேண்டும். அதோடு, நீங்கள் விரும்பாதது நிகழ்ந்தால், அதைப் பற்றி குறை சொல்லக்கூடாது. விஷயங்கள் தற்போது தெரியும் விதத்திலிருந்து வேறு விதமாக மாறக்கூடும். துயரம் பல சமயங்களில் மனிதர்களை கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வழிகாட்டும்.  

பக்தர்.: ஆனால் நாங்கள் உலகப் பற்றுள்ளவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், இவர்கள் எல்லோரும் உள்ளனர்.  இவர்கள் இருப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், சிறிதளவு எங்களது தனித்தன்மையை வைத்துக் கொள்ளாமல்,  நாங்கள் கடவுளின் சித்தத்திற்கு உட்பட முடியாது.  

மகரிஷி.: அப்படியானால் நீங்கள் அறிவிப்பது போல் நீங்கள் சரணடையவில்லை. நீங்கள் கடவுளைத் தான் நம்ப வேண்டும்.  

~~~~~~~~

உரையாடல் 251.

மிகவும் புத்திசாலியாகவும், அதே சமயத்தில் ஆழ்ந்து சிந்திப்பராகவும் தோன்றிய ஒரு உயர்குடி இயல்புள்ள பெண்மணி கேட்டார் : 
பக்தர்.: மஹராஜ் ஜி, மன அமைதி அடைவது எப்படி என்று தெரிந்துக் கொள்ள நான் விரும்புகிறேன். தயவு கூர்ந்து, அருள் செய்து எனக்கு அறிவுரை வழங்க வேண்டும். 
மகரிஷி.: ஆமாம் – பக்தியும் சரணாகதியும்.

பக்தர்.: ஒரு பக்தராக இருக்க எனக்கு தகுதி இருக்கிறதா? 
மகரிஷி.: எல்லொரும் ஒரு பக்தராக இருக்க முடியும். ஆன்மீக வழிகள் எல்லோருக்கும் பொதுவானது. வயதானவரானாலும், இளைஞரானாலும், ஆண் ஆனாலும், பெண் ஆனாலும், அவை யாருக்கும் மறுக்கப் படுவதில்லை.  

பக்தர்.: அதைத் தான் தெரிந்துக் கொள்ள நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நான் ஒரு இளம் வயதுள்ள ஒரு இல்லாள், குடும்ப நிர்வாகி. எனக்கு குடும்ப சம்பந்தமான, கிரகஸ்த தர்மத்தைச் சார்ந்த கடமைகள் உள்ளன. இத்தகைய நிலைப்பாட்டுடன் பக்தி முரண்படாமல் இசைவாக இருக்குமா? 
மகரிஷி.: நிச்சயமாக. நீங்கள் என்ன? நீங்கள் உடல் இல்லை. நீங்கள் சுத்த சைதன்யம். கிரகஸ்த தர்மம், உலகம், இவையெல்லாம் அந்த சுத்த சைதன்யத்தில் தோன்றும் தோற்றப்பாடுகள் தான்.  இவற்றால் சுத்த சைதன்யம் பாதிக்கப்படாமல் இருக்கிறது. நீங்கள் உங்களது சுய சொரூபமாக இருப்பதை தடை செய்வது என்ன?
….
கவலைப் படுவதற்குக் காரணம் ஏதும் இல்லை.

பக்தர்.: அப்படியானால் நான் உலக வாழ்வில் இருந்துக் கொண்டே ஆன்மீக சாதனையில் ஈடுபடவேண்டும். சரி, நான் இந்த ஜன்மத்தில் ஆன்ம ஞானம் பெற முடியுமா? 

மகரிஷி.: இதற்கு ஏற்கனவே பதில் சொல்லப்பட்டது. நீங்கள் தான் ஆன்மா. உண்மையான, தீவிரமான எத்தனங்கள் எப்போதும் தோல்வி அடையாது. வெற்றி நிச்சயமாக விளையும். 

 

தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா




33. உலகம் மாயையா அல்லது மெய்மையா
32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள்

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!