Talks with Ramana Maharshi (32)
குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?
தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன்

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள்

ஒரு வருகையாளருடன் உரையாடல்.

பக்தர்: புனிதர்களான திரு சைதன்யரும், திரு ராமகிருஷ்ணரும் கடவுளுக்கு முன்னால் கண்ணீர் சிந்தி வெற்றி அடைந்தனர். இந்த பாதை தான் பின்பற்றப் பட வேண்டும், இல்லையா?

மகரிஷி: ஆமாம். அவர்களை அந்த அனுபவங்களில் எல்லாம் ஒரு மிகவும்  பலமான சக்தி இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது. உங்களுடைய குறிக்கோளை அடைய அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள். சாதாரணமாக, கண்ணீர் பலவீனத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த மாபெரும் மகான்கள் நிச்சயமாக பலவீனமாக இல்லை. இந்த வெளிப்பாடுகள் எல்லாம், அவர்களை தூக்கிச் சென்ற மாபெரும் சக்தியோட்டத்தின் கடந்து செல்லும் சின்னங்கள் தான்.  நாம் அடைய வேண்டிய முடிவைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.

பக்தர்.: இந்த ஜட உடலை சூனியத்தில் மறைந்துப் போகச் செய்ய முடியுமா? 

மகரிஷி.: ஏன் இந்த கேள்வி? நீங்கள் உடலா இல்லையா என்று நீங்கள் கண்டுபிடிக்கக் கூடாதா?

பக்தர்.: யோகிகளான வசிஷ்டர், விஸ்வாமித்திரரைப் போல, கண் பார்வையிலிருந்து நாம் மறைந்து போக முடியுமா?  

மகரிஷி.: இதெல்லாம் உடல் சார்ந்த விஷயங்கள். இதுவா நமது முக்கியமான விஷயம்? நீங்கள் சுய சொரூப ஆன்மா இல்லையா? ஏன் மற்ற விஷயங்களைப் பற்றி தொல்லைப் பட வேண்டும்? முக்கிய சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற கற்றறிந்த தத்துவத்தை எல்லாம் உபயோகமற்றதாக விலக்கி விடுங்கள். 

முக்தி பெறுவதற்கு உடல் மறைவது முக்கியம் என்று எண்ணுபவர்கள் தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். அதெல்லாம் தேவையில்லை.  நீங்கள் உடல் இல்லை.  அது எந்த விதத்தில் மறைந்தால் என்ன? இத்தகைய நிகழ்வுகளில் ஒரு பலனும் கிடையாது. உயர்வும் தாழ்வும் எங்கே எதில் உள்ளது? 

மெய்மையான சுய தன்மையை அடைவது மட்டும் தான் முக்கியம். “நான்” எண்ணத்தின் இழப்பு தான் முக்கியான அம்சமே தவிர, உடலின் இழப்பு இல்லை. உடலை ஆன்மாவுடன் இணைத்து வைத்துக் கொண்டிருப்பது தான் உண்மையான பிணைப்பு. பொய்யான கருத்துக்களை விலக்கி விட்டு, உள்ளுணர்வாக மெய்மையை உணருங்கள். அது மட்டும் தான் முக்கியம். 

ஒரு பொன் நகையை, அது பொன் தானா என்று பரிசோதனை செய்வதற்காக உருக்கும் போது, அது எப்படி உருக்கப் படுகிறது, முழுதாகவா, பல பகுதிகளாகவா என்பதெல்லாம் என்ன முக்கியம்? நீங்கள் விரும்புவதெல்லாம் அது பொன்னா இல்லையா என்று தெரிந்துக் கொள்வது தான்.

இறந்து போன மனிதர் தனது உடலைக் காண்பதில்லை.  மிஞ்சி வாழ்பவர் தான், எந்த விதத்தில் உடல் பிரிந்துக் செல்கிறது என்பதைப் பற்றி யோசிக்கிறார். ஆன்மாவை உணர்ந்த ஞானியருக்கு, உடலுடனோ, அல்லது உடல் இல்லாமலோ இறப்பே கிடையாது. ஒரு ஞானி எல்லாவற்றையும் ஒரே விதமாக காண்கிறார்; அவர் ஒரு வித்தியாசத்தையும் காண்பதில்லை. அவருக்கு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலை உயர்வாகத் தெரிவதில்லை. வெளியில் உள்ளவருக்கும் கூட ஒரு முக்தியடைந்த ஞானியின் உடலின் நிலையைப் பற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் விவகாரத்தைக் கவனியுங்கள். ஆன்ம சுய சொரூபத்தை அறிந்து உணருங்கள். ஆன்ம ஞானம் அடைந்த பிறகு, எந்த விதமான இறப்பை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி யோசிக்க நிறைய நேரம் இருக்கும்.

ஆன்மாவை உடலுடன் இணைத்து வைத்துக் கொண்டிருப்பது தான், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது போன்ற கருத்துக்களை உண்டாக்குகிறது. நீங்கள் என்ன உடலா?   நேற்றிரவு, ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, இதை நீங்கள் உணர்ந்தீர்களா? இல்லை! இப்போது இருந்துக் கொண்டு உங்களுக்கு தொல்லை கொடுப்பது என்ன? அது “நான்” எண்ணம். அதை அகற்றிவிட்டு சந்தோஷமாக இருங்கள்.  

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1

பிப்ரவரி 4, 1935

உரையாடல் 32.

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?
தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன்

32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!