53. இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? 
54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு 
52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்திற்கு பிறகு ஜீவன், தியானம் என்றால் என்ன

53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

ஜூன் 15, 1935

உரையாடல் 53.

தமிழாக்கம் : வசுந்தரா

ஒரு வாலிபர், திரு நோல்ஸ் என்பவர், மகரிஷியின் தர்சனம் பெற வந்தார். அவர் திரு பால் ப்ரண்ட்டனின் இரண்டு புத்தகங்களைப் படித்திருக்கிறார். அவர் கேட்டார் : “புத்த மதத்தினர் “நான்” என்பது பொய்யானது என்கிறர்கள். ஆனால், பால் ப்ரண்ட்டன் தமது “ரகசிய பாதை” என்ற நூலில், “நான் – எண்ணத்தை” கடந்து உண்மையான “நான்” என்ற நிலையை அடையும்படி சொல்கிறார். இதில் எது உண்மை?

மகரிஷி: சாராரணமாக இரண்டு “நான்”கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஒன்று கீழ்பட்ட நிலையில் உள்ளது, பொய்யானது, இது எல்லோரும் அறிந்தது தான். மற்றது உயர்வானது, உண்மையானது; இதுதான் உணர வேண்டிய “நான்”. 

தூங்கும்போது உங்களை நீங்கள் அறிவதில்லை; விழித்திருக்கும் போது, நீங்கள் உங்களை அறிகிறீர்கள். விழித்த பிறகு, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்ததாக சொல்கிறீர்கள். ஆனால், ஆழ்ந்த தூக்கத்தில் இதை நீங்கள் அறியவில்லை. அப்படியென்றால், பலப் பல பொருட்கள் பரவி தோன்றும் கருத்து அல்லது அபிப்ராயம், உங்களது உடல் உணர்வுடன் கூடவே எழுந்துள்ளது.  இந்த உடல்-உணர்வு ஏதோ ஒரு குறிப்பிட்ட கணத்தில் எழுந்தது.  அதற்கு ஆரம்பமும் முடிவும் உள்ளது. எது எழுகிறதோ அது ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும். அந்த ஏதாவது ஒன்று என்ன? அது தா “நான்” என்னும் உணர்வு. இந்த “நான்” யார்? எங்கிருந்து “நான்” வந்துள்ளேன்? இப்படி அதன் மூலாதாரத்தைக் கண்டு பிடித்து விட்டால், நீங்கள் வரையற்ற நிபந்தனையற்ற நிறைவான உணர்வு நிலையை உணர்வீர்கள்.

பக்தர்: இந்த “நான்” யார்? அது புலன் சார்ந்த உணர்வுக தொடர்ச்சி தான் என்று தோன்றுகிறது. புத்த கருத்தும் இப்படித் தான் இருப்பதாகத் தெரிகிறது.   

மகரிஷி: உலகம் வெளிப்புறத்தில் இல்லை. புலன் சார்ந்த உணர்வுகள் வெளியிலிருந்து வர முடியாது; ஏனெனில் உலகத்தை பிரக்ஞை உணர்வால் தான் உணர முடியும். உலகம் தான் இருப்பதாகச் சொல்வதில்லை. அது உங்களது கருத்து அல்லது அபிப்ராயமாகும். மேலும் இந்த கருத்து மாறாமல் ஒரே விதமாக இருப்பதில்லை, இடையறாததும் இல்லை.  ஆழ்ந்த தூக்கத்தில், உலகம் அறியப்படுவதில்லை. எனவே உலகம் தூங்குபவருக்கு இருப்பதில்லை. எனவே, உலகம் “தான்மை” அகங்காரத்தின் கருத்து வரிசை தான். “தான்மையை” கண்டு பிடியுங்கள். அது எங்கிருந்து எழுகிறது என்று கண்டு பிடிப்பது தான் இறுதியான குறிக்கோள் அல்லது லட்சியம். 

பக்தர்: மற்ற உயிர்களுக்கு வேதனை தரக் கூடாது என்று நான் நம்புகிறேன். அப்படியென்றால், கொசுக் கடியையும் நாம் தாங்கிக் கொண்டு  பேசாமல் இருக்க வேண்டுமா? 

மகரிஷி: நீங்கள் வேதனைப் படவோ துன்பப்படவோ விரும்புவதில்லை. பின் மற்றவர்கள் மீது எப்படி துயரம் அல்லது வேதனை அளிக்கலாம்? கொசுக்கடிகளால் நீங்கள் வேதனைப் படுவதால், அவற்றிலிருந்து அகன்று இருங்கள், அவ்வளவு தான். 

பக்தர்: கொசுக்கள், பூச்சிகள் போன்ற மற்ற உயிர்களை கொல்வது சரியா?  

மகரிஷி: ஒவ்வொரும் ஒரு தற்கொலை தான். இந்த அறியாமை கொண்ட வாழ்க்கையால், நிரந்தரமான, பேரானந்தமான, இயல்பான நிலையானது மூச்சு திணருவது போல் திணரடிக்கப் படுகிறது. இந்த விதத்தில், நிரந்தரமான, மாசற்ற, தூய்மையான சொரூபத்தைக் கொல்வதால், தற்போதைய வாழ்க்கையானது ஏற்பட்டுள்ளது. இது ஒரு தற்கொலை இல்லையா? எனவே, ஒவ்வொருவரும் ஒரு தற்கொலை தான். அப்படி இருக்கும்போது, கொலைகள், கொல்வது என்பதைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப் பட வேண்டும்?

பிற்பாடு ஒரு உரையாடலின் போது, இந்த வருகையாளர் சொன்னார் : “உலகம் உணர்வுகளை அனுப்புகிறது; பிறகு நான் விழித்துக் கொள்கிறேன்!”

மகரிஷி: பார்ப்பதற்கு யாராவது ஒருவர் இல்லாமல் உலகம் இருக்க முடியுமா? யார் முதலில் வந்தது? நிரந்தரமாக உள்ள சுய உணர்வா, அல்லது எழுகின்ற உணர்வா? சுய சொரூப உணர்வு எப்போதும் உள்ளது, நிரந்தரமானது, தூய்மையானது. எழுகின்ற உணர்வு எழுகிறது, பிறகு மறைகிறது. அது வந்து போய்க் கொண்டிருக்கிறது.

பக்தர்: நான் தூங்கும் போது கூட மற்றவர்களுக்கு உலகம் இருக்கிறதில்லையா?

மகரிஷி: இத்தகைய உலகம், நீங்கள் உங்களையே அறிந்துக் கொள்ளாமல் அதை அறிவதைப் பற்றி உங்களை கேலியும் செய்கிறது! உலகம் உங்களது மனதின் விளைவாகும். உங்கள் மனதை அறிந்துக் கொள்ளுங்கள். பிறகு உலகத்தைப் பாருங்கள். அது ஆன்ம சுய சொருபத்திலிருந் வேறுபட்டதில்லை என்று உணர்ந்து கொள்வீர்கள்.

பக்தர்: நான் எவ்வளவு தெளிவாக அறிகிறேனோ, அவ்வளவு தெளிவாக மகரிஷி தம்மையும் தமது சூழ்நிலைகளையும் அறியவில்லையா?

மகரிஷி: யாருக்கு இந்த சந்தேகம்? சந்தேகங்கள் உண்மையை உணர்ந்தவர்களுக்கு எழுவதில்லை. அது அறியாமை உள்ளவர்களுக்குத் தான் எழுகிறது. 

54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு 
52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்திற்கு பிறகு ஜீவன், தியானம் என்றால் என்ன
53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!