52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்திற்கு பிறகு ஜீவன், தியானம் என்றால் என்ன
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
ஜூன் 9, 1935
உரையாடல் 52.
ஒரு வருகையாளர் கேட்டார் : என் மனம் இரண்டு மூன்று நாட்களுக்குத் தெளிவாக இருக்கிறது. பிறகு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மந்தமாக இருக்கிறது. இப்படியே அது மாறி மாறி வருகிறது. அது எதனால்?
மகரிஷி: அவ்வாறு இருப்பது சாதாரணமாக நடப்பது தான். அதன் காரணம், பிரகாசமும், தெளிவும், தூய்மையுமான சத்வ குணம், செயல்களில் ஈடுபடுவதும் அதீத உணர்ச்சியுமான ரஜோ குணம், இருட்டும் மந்தமுமான தமோ குணம், இவை மாறி மாறி வந்துக் கொண்டிருப்பது தான். மந்தம் என்னும் தமோ குணம் வரும் போது அதற்காக வருந்தாதீர்கள். ஆனால் பிரகாசம் அல்லது தெளிவு என்னும் சத்வ குணம் வரும் போது, அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அதிலிருந்து சிறந்த பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
பக்தர்: ஆன்மீக இதயம் அல்லது உள்ளம் என்றால் என்ன?
மகரிஷி: அது ஆன்மாவின் இருப்பிடமாகும், அதாவது அப்படி ஒரு இருப்பிடம் இருக்கிறது என்று சொல்ல முடிந்தால்.
பக்தர்: அது உடல் சார்ந்த இதயமா?
மகரிஷி: இல்லை. அது “நான் – நான்” எழும் இருப்பிடமாகும்.
பக்தர்: மரணத்திற்குப் பிறகு தனிப்பட்ட ஜீவனுக்கு என்ன ஆகிறது?
மகரிஷி: இப்போது இருக்கும் ஜீவனுக்கு இந்தக் கேள்வி சரியானது இல்லை. சௌகரியப்படும் சமயத்தில், உடலை விட்டு அகன்று போன ஒரு ஜீவன் என்னைக் கேட்கட்டும். அது வரையில், இப்போது உடலில் வசிக்கும் ஜீவன், தான் யார் என்று தேடி கண்டுபிடித்து, தற்போதைய பிரச்சனையைத் தீர்க்கட்டும். பிறகு இத்தகைய சந்தேகங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வந்து விடும்.
பக்தர்: தியானம் என்றால் என்ன?
மகரிஷி: சாதாரணமாக, தியானம் என்ற சொல் ஒரு பொருளின் மீது ஆழ்ந்த தியானம் செய்வதைக் குறிப்பிடுகிறது. ஆனால், நிதித்யாஸனம் என்பது ஆன்ம சொரூபத்தை விசாரண செய்வதாகும். ஆன்ம ஞானம் அடையும் வரையில், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மும்மை, அதாவது மூன்று வித நிலைப்பாடுகள் விளங்கி வருகின்றன. ஆன்மீக பக்தரைப் பொறுத்த வரையில், தியானமும் நிதித்யாஸனமும் ஒன்றே தான். ஏனெனில், இந்த இரண்டு முறைகளும் மும்மையைச் சார்ந்து இருக்கின்றன; பக்தியுடன் ஒத்ததாக உள்ளன.
பக்தர்: தியானத்தை எப்படி பயிற்சி செய்வது?
மகரிஷி: தியானம் மனதை ஆழ்ந்து சிந்திக்க உதவுகிறது. ஒரே ஒரு மிகுந்த வலிமையான கருத்து மற்ற கருத்துக்களையெல்லாம் அகற்றி வைக்கிறது. ஒரு நபருக்குத் தகுந்த படி, தியானம் வேறு படுகிறது. தியானம் கடவுளின் ஒரு அம்சத்தின் மீது இருக்கலாம், அல்லது ஒரு மந்திரம் அல்லது புனிதச் சொல்லின் மீது இருக்கலாம், அல்லது ஆன்மாவின் மீது இருக்கலாம், இத்தியாதி, இத்தியாதி.
தமிழாக்கம் : வசுந்தரா