54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு 
53. இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? 

54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

ஜூன் 16, 1935

உரையாடல் 54.

தமிழாக்கம் : வசுந்தரா

ஒரு வயதான பண்டிதருக்கு, கணபதி முனி அத்வைதத்தின் மேல் அளித்த விளக்கவுரையைப் பற்றி சில சந்தேகங்கள் எழுந்தது. அவர் சில நூல்களில் இதைப் பற்றி முரண்பாடுகள் கண்டார்.

மகரிஷி சொன்னார் : தக்ஷிணாமூர்த்தி அந்த மாதிரி ஏதும் கற்பிக்கவில்லை. அவர் மௌனமாக இருந்தார். சீடர்களின் சந்தேகங்கள் தீர்ந்தன. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், கற்பதற்கோ, விவாதிப்பதற்கோ, தீர்மானங்கள் கொள்வதற்கோ எதுவும் இல்லை.

எல்லோருக்கும் “நான் இருக்கிறேன்” என்ற உணர்வு இருப்பது தெரியும். நான் என்பது உடல் தான் என்ற குழப்பம் இருக்கிறது. ஏனெனில் எல்லையற்ற சொரூபத்திலிருந்து “நான்” என்பது எழுகிறது, பின் அது புத்தியை எழச் செய்கிறது. புத்தியில், “நான்” என்பது உடலில் அளிவிலும் வடிவத்திலும் தெரிகிறது. பரப்பிரம்மத்தை புத்தியினால் அறிய முடியாது.

புத்தியானது “நான் நான்” என்பதன் ஆதரவில் உள்ளது. “நான் நான்” என்பது பரப்பிரம்மத்தின் ஆதரவில் உள்ளது. இத்தகைய புத்தியானது, “நான்” என்பதைக் கடந்து, பரப்பிரம்மத்தை எப்படி கண்டுபிடித்துக் கொள்ள முடியும்? அது முடியாத விஷயமாகும். “நான் உடல் தான்” என்ற கருத்திலிருந்து மீண்டுக் கொள்ளுங்கள், அவ்வளவு தான்.

யாருக்கு எண்ணங்கள் எழுகின்றன என்று கண்டுபிடியுங்கள். தற்போதைய “நான்” என்பது மறைந்து விட்டால், கண்டுபிடிப்பு முடிவடைகிறது. மிஞ்சியிருப்பது தூய ஆன்மா தான். 

ஆழ்ந்த தூக்கத்தையும் விழிப்பு நிலையையும் ஒப்பிட்டு பாருங்கள். விழிப்பு நிலையில் தான் பரவலான பலப் பொருட்களும், உடலும் காணப் படுகிறது. ஆழ்ந்த தூக்கத்தில், ஆன்மாவானது உடல், உலகம், இவற்றின் தோற்றங்கள் இல்லாமல் விளங்குகிறது. அங்கு பேரானாந்தம் ஆள்கிறது.

“நான் பரப்பிரம்மம்” என்ற மறை நூலின் வாக்கியம், அந்த நிலையைக் குறிப்பிடுகிறதே தவிர மனப் பாங்கை அல்ல.  ஒரு மந்திரத்தை ஜபிப்பதால் மட்டும் ஒருவர் பரப்பிரம்மமாக ஆகி விட முடியாது. அதன் பொருள் என்னவென்றால், பரம்பிரம்மம் வேறங்கும் இல்லை, அது உங்களது சுய சொரூப ஆன்மாவே தான், என்பதாகும். அந்த ஆன்மாவைக் கண்டுபிடியுங்கள், பரப்பிரம்மம் கண்டுபிடிக்கப் படுகிறது. பரப்பிரம்மம் வேறெங்கோ வெகு தூரத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதை அடைய முயற்சி செய்யாதீர்கள்.

இந்த சமயத்தில் பண்டிதர் சொன்னார். எண்ணங்கள் பிடிவாதமாக விடாப்பிடியா இருப்பதால், “நான்” என்பதை அடைய முடியவில்லை.

மகரிஷி சொன்னார் : பிரம்மாகார விருத்தி, அதாவது பரப்பிரம்மத்தை மட்டுமே நினைத்து சிந்திப்பது, மனதை மற்ற எண்ணங்களிலிருந்து திருப்ப உதவுகிறது. ஒன்று, இத்தகைய பயிற்சி தேவை, அல்லது, ஞானியர்களுடன் ஆன்மீகத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஞானியானவர், ஏற்கனவே மனதை வென்று, அமைதியில் ஆழ்ந்து விளங்குகிறார். ஞானியின் அருகாமை அல்லது மனத்தொடர்பு, மற்றவர்களில் இந்த நிலையைக் கொண்டு வர உதவி செய்கிறது. இல்லையெனில், ஒரு ஞானியின் சம்பந்தத்தை நாடுவதில் அர்த்தமேயில்லை. 

“நான் உடல் தான்” என்பது வரையரை உள்ள குறைபாடாகும்.  அது தான் எல்லா கொடிய செயல்களுக்கும் ஆசைகளுக்கும் அடிப்படையாகும். 

“நான் பரப்பிரம்மம்” என்பது குறைபாட்டைக் கடந்து போவதாகும். அது கருணை, தருமம் அல்லது ஈகை, அன்பு போன்ற தெய்வீக குணங்களைக் குறிப்பிடுகிறது.

பக்தர்: முக்தி அல்லது மோட்சம் அடைவதில், கிரகஸ்தர், அதாவது குடும்பஸ்தரின் பாங்கு அல்லது நிலைப்பாடு என்ன?

மகரிஷி: நீங்கள் ஒரு குடும்பஸ்தர் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு சந்நியாசியாகி போனால், இதே போல் நீங்கள் ஒரு சந்நியாசி என்ற எண்ணம் உங்களை பலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும். நீங்கள் குடும்பத்துடன் தொடர்ந்து இருந்தாலும், அல்லது அதை விட்டு விட்டு காட்டுக்குப் போனாலும், உங்கள் மனம் உங்களை வலிமையாக தொந்தரவு செய்கிறது. 

“தான்மை அல்லது நான் என்பது” எண்ணங்களின் மூலமாகும். அது உடலையும் உலகத்தையும் உண்டாக்கி, உங்களை ஒரு குடும்பஸ்தர் என்று  நினைத்துக் கொள்ள வைக்கிறது. நீங்கள் உலகத்தைத் துறந்தால், தான்மையானது குடும்பஸ்தர் என்ற எண்ணத்தை சந்நியாசி என்றும், குடும்பத்தின் சூழ்நிலைகளை காட்டின் சூழ்நிலைகளாகவும் மாற்றி விடும், அவ்வளவு தான். ஆனால், மனதின் தடங்கல்கள் எப்போதும் உள்ளன. மேலும், அவை புதுச்சூழ்நிலைகளின் இன்னும் அதிகரிக்கவும் செய்கின்றன.

சூழ்நிலைகளை மாற்றுவதால் ஒரு பயனும் இல்லை. தடங்கல் மனதில் உள்ளது. வீட்டிலிருந்தாலும் காட்டிலிருந்தாலும், மனதிலிருந்து மீள வேண்டும். அதைக் காட்டில் செய்ய முடிந்தால், வீட்டில் ஏன் செய்ய முடியாது? எனவே, சூழ்நிலையை ஏன் மாற்ற வேண்டும். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உங்களது முயற்சிகளும் எத்தனங்களும் இப்போதே செய்யப் படலாம்.

நீங்கள் விரும்புவது போல்,  உங்களது சூழ்நிலை உங்களை ஒரு போதும் விடுவதில்லை. என்னைப் பாருங்கள். நான் வீட்டை விட்டு வந்தேன். உங்களையெல்லாம் பாருங்கள். நீங்கள் வீட்டின் சூழ்நிலையை விட்டு இங்கு வந்திருக்கிறீர்கள். இங்கு நீங்கள் என்ன காண்கிறீர்கள்? நீங்கள் விட்டு விட்டு வந்த இடத்தில் இருந்த உங்கள் மனத்தை விட இங்கு உங்கள் மனம் வேறானதா?

ஒருவர் பல வருடங்களுக்குத் தொடர்ந்து நிர்விகல்ப சமாதியில், அதாவது ஆன்மாவில் மூழ்கி இருந்தாலும், அவர் அந்த நிலையிலிருந்து வெளியில் வரும்போது, அவர் முன்பு எந்த சூழ்நிலையில் இருந்தாரோ, அதே சூழ்நிலையில் தான் தம்மைக் காண்பார். இந்த காரணத்தால் தான், ஆதி சங்கரர், தமது மிகச் சிறந்த காணிக்கையான விவேக சூடாமணியில், சகஜ சமாதியை, அதாவது ஆன்மாவில் மனதை இழந்து ஒன்று சேர்ந் கலந்து விடுவதை வலியுறுத்துகிறார்.

ஒருவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும், எப்போதும், சுயமான இயல்பான சமாதியில், அதாவது தமது மாசற்ற தூய்மையான நிலையில், இருக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து, மகரிஷி சொன்னார் :

மூச்சுக் கட்டுப்பாடு உள்முகமாகவும் இருக்கலாம், வெளிப்புறமாகவும் இருக்கலாம்.

உள்முக பிராணாயாமம் அல்லது மூச்சுக் கட்டுப்பாடு என்பது பின்வருமாறு.

“நான் உடல் என்னும் கருத்து இல்லை” என்பது வெளிவிடும் மூச்சாகும். “நான் யார்?” என்பது உள்ளிழுக்கும் மூச்சாகும். “நான் அந்த ஆன்மாவே தான்” என்பது மூச்சை உள்ளடக்கி வைத்துக் கொள்வதாகும். இவ்வாறு செய்வதால், மூச்சு தானாகவே கட்டுப் படுகிறது.

வெளிப்புற பிராணாயாமம் அல்லது மூச்சுக் கட்டுப்பாடு என்பது பின்வருமாறு.

இந்த பிராணாயாமம், மனதில் வலிமையில்லாதவர்களுக்காகும். அவர்களுக்கு இதை விட நிச்சயமான வழிமுறை வேறில்லை. அல்லது, இன்னொரு நிச்சயமான வழிமுறை, ஒரு சாது, அதாவது ஞானியுடன் ஆன்மீக தொடர்பு கொள்வதாகும். விவேகமுள்ள ஒருவர், ஒரு ஞானியுடன் மனத் தொடர்பு வைத்துக் கொள்வதை விரும்பாவிட்டால், அவர் வெளிப்புற பிராணாயாமத்தைச் செய்யலாம்.

ஒருவர் ஒரு ஞானியுடன் ஆன்மீகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் போது, மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தாலும், ஞானி அவருக்குத் தேவையான மன வலிமையை அளித்தால், பிறகு பிராணாயாமம் செய்வது ஹத யோகத்திலும் விளக்கியிருப்பது போலவே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ஒருவர் ஜபத்திலோ, தியானத்திலோ, பக்தியிலோ ஈடுபட்டு இருக்கும்போது, மனதைக் கட்டுப் படுத்த, சிறிதளவே மூச்சுக் கட்டுப்பாடு போதுமானது. மூச்சு என்பது குதிரை. மனம் என்பது சவாரி செய்பவர். பிராணாயாமம் என்பது குதிரையைக் கட்டுப் படுத்தும் வழிமுறையாகும். இவ்வாறு குதிரையைக் கட்டுப் படுத்துவதால், சவாரி செய்பவர் கட்டுப் படுத்தப் படுகிறார்.

சிறிதளவே பிராணாயாமம் செய்யப் படலாம். மூச்சை கவனித்தவாறு இருப்பது ஒரு வழிமுறையாகும். மூச்சை கவனிப்பதால், மனமானது மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதிலிருந்து இங்கு கவர்ந்து இழுக்கப் படுகிறது. அது மூச்சைக் கட்டுப்படுத்துகிறது. முறையே, மனமும் கட்டுப்படுத்தப் படுகிறது.

வெளி விடும் மூச்சையும், உள்ளிழுக்கும் மூச்சையும், செய்ய முடியாவில்லால், செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜபம், தியானம், பக்தி போன்றவை செய்யப் படும்போது,  சிறிதளவு நேரமே மூச்சு உள்ளடக்கி வைக்கப் படலாம். இதனால் கூட நல்ல விளைவுகள் தொடர்ந்து வரும்.

 

53. இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? 
54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!