43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி; மனக் கட்டுப்பாடு; மெய்யான “நான்”, பொய்யான “நான்”
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்.
உரையாடல் 43.
சில பக்தர்கள் ஆஸ்ரமத்திற்கு வந்தார்கள். அவர்கள் ரங்கநாதன், ராமமூர்த்தி, ராகவைய்யா.
திரு ரங்கநாதன் கேட்டார். மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தயவுசெய்து அறிவுரை தர வேண்டும்.
மகரிஷி: அதற்கு இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று, மனமென்றால் என்ன என்று பார்ப்பது. அப்படி பார்த்தால், மனம் தணிந்து அடங்கும். இரண்டாவது, உங்கள் கவனத்தை ஒன்றின் மீது பதிய வைக்க வேண்டும். அப்படி செய்தால், மனம் அமைதியாக இருக்கும்.
கேள்வியாளர் இன்னும் அதிகமான விளக்கத்திற்காக அதே கேள்வியை மீண்டும் கேட்டார். ஏற்கனவே அளிக்கப்பட்ட பதில் இன்னும் கொஞ்சம் சேர்க்கப்பட்டு தரப்பட்டது.
இப்போது ராகவைய்யா கேட்டார். இந்த உலகத்தைச் சார்ந்த மனிதர்களாகிய எங்களுக்கு, ஏதாவது ஒரு இன்னல் அல்லது துயரம் ஏற்படுகிறது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று எங்களுக்குத் தெரிவதில்லை. நாங்கள் என்ன செய்வது?
மகரிஷி: கடவுளை நம்புங்கள்.
பக்தர்: நாங்கள் சரணடைகிறோம்; ஆனாலும் உதவி கிடைப்பதில்லை.
மகரிஷி: ஆமாம். நீங்கள் சரணடைந்திருந்தால், நீங்கள் கடவுளின் சித்தப்படி நடந்துக் கொள்ள உங்களால் முடிய வேண்டும். மேலும், நீங்கள் விரும்பாததைப் பற்றி குற்றம் குறை சொல்லக் கூடாது. விஷயங்கள் இப்போது காட்சியளிக்கும் விதத்திலிருந்து வேறு விதமாக மாறக் கூடும். இன்னல் பல சமயங்கல் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வழி காட்டுகிறது.
பக்தர்: ஆனால் நாங்கள் உலக வாழ்வில் உள்ளவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் இருப்பதைப் புறக்கணித்து விட்டு, எங்களது தனித்தன்மையை சிறிதளவாவது வைத்துக் கொள்ளாமல் கடவுளின் சித்தத்திற்கு விட்டு விட முடியாது.
மகரிஷி: அப்படியானால், நீங்கள் சொன்னது போல் நீங்கள் சரணடையவில்லை. நீங்கள் கடவுளைத் தான் நம்ப வேண்டும்.
இந்த சமயத்தில், திரு ராமமூர்த்தி கேட்டார்.
சுவாமிஜி, நான் பால் பிரன்ட்டனின், ரகசிய இந்தியாவில் தேடுதல் என்ற புத்தகத்தைப் படித்தேன். அதன் கடைசி அத்தியாயம் மனதில் பதிந்தது. அதில் அவர் யோசனை செய்யாமல் உணர்வு விழிப்புடன் இருக்க முடியும் என்று சொல்கிறார்.
உடலை மறந்து போய் விட்டு, ஒருவர் யோசனை செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். ஆனால், ஒருவர் மனமில்லாமல் யோசனை செய்ய முடியுமா? எண்ணங்களுக்கு அப்பால் உள்ள அந்த பிரக்ஞை உணர்வை பெறுவது முடியுமா?
மகரிஷி: ஆமாம். இருப்பது ஒரே ஒரு உணர்வு தான். அது விழிப்பு, கனவு, தூக்கம், இந்த மூன்று நிலைகளிலும் விளங்குகிறது. தூக்கத்தில் “நான்” என்பது இல்லை. விழித்த பிறகு தான் “நான் – எண்ணம்” எழுகிறது; உலகமும் தோன்றுகிறது. தூக்கத்தில் இந்த “நான்” எங்கே இருந்தது? அது இருந்ததா இல்லையா? அது இருந்திருக்க வேண்டும், ஆனால் இப்போது நீங்கள் உணரும் விதத்தில் இல்லை.
இப்போதுள்ள “நான்” “நான் – எண்ணம்” தான். ஆனால் தூக்கத்தில் இருக்கும் “நான்” தான் உண்மையான “நான்”. அது எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது தான் பிரக்ஞை உணர்வு. அது அறிந்துக் கொள்ளப் பட்டால், அது எண்ணங்களுக்கு அப்பால் உள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள்.
பக்தர்: மனமில்லாமல் யோசனை செய்ய முடியுமா?
மகரிஷி: எண்ணங்களும் மற்ற எந்த நடவடிக்கையையும் போல், மிக்க உயர்வான பிரக்ஞை உணர்வை பாதிக்காமல் இருக்கலாம்.
பக்தர்: ஒருவர் மற்றவரது மனதைப் படிக்க முடியுமா?
இதற்கு மகரிஷி வழக்கம் போல், மற்றவர்களைப் பற்றி கவலைப் படுவதற்கு முன்னால் முதலில் உங்கள் ஆன்ம சொரூபத்தை அறிந்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். மேலும், “ஆன்ம சொரூபத்தை விட்டு அகன்று மற்றவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.
இப்போது திரு ராகவைய்யா தொடர்ந்து பேசினார்.
மிக உயர்ந்த ஆன்மீக அனுபவத்தையும், தாழ்ந்த லௌகீக உலக விவகாரங்களையும் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தி தொடர்புடையதாக்குவது?
மகரிஷி: இருப்பது ஒரே ஒரு அனுபவம் தான். பொய்யான “நான்” என்பதன் மேல் கட்டப்பட்டதில்லாமல் உள்ள உலக அனுபவங்கள் வேறேன்ன? உலகத்தில் இருப்பதற்குள் மிகவும் வெற்றிகரமாக உள்ள மனிதரிடம், அவர் தமது சொரூபத்தை அறிகிறாரா என்று கேளுங்கள்.
அவர் “இல்லை!” என்று சொல்வார். தமது ஆன்ம சொரூபத்தை அறியாமல் ஒருவர் வேறு எதை அறிய முடியும்? எல்லா உலகம் சார்ந்த அறிவும் இத்தகைய அற்பமான நிலையற்ற அஸ்திவாரத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது.
பிறகு திரு ராமமூர்த்தி கேட்டார்.
பொய்யான நானிலிருந்து வேறுபடுத்தி உண்மையான நானை எப்படி அறிவது?
தன்னை உணராதவர் யாராவது இருக்கிறாரா? சொரூபத்தை ஒவ்வொருவரும் அறிகிறார், ஆனால் அறிவதில்லை. வினோதமான முரண்பாடு தான்.
பிற்பாடு மகரிஷி மேலும் சொன்னார்.
மனம் இருக்கிறதா என்று விசாரணை செய்யப்பட்டால், மனம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெரிய வரும். அது தான் மனக் கட்டுப்பாடு. அதற்கு மாறாக, மனம் இருப்பதாக வைத்துக் கொண்டு அதைக் கட்டுப்படுத்த ஒருவர் நாடினால், அது மனம் மனதைக் கட்டுப்படுத்துவதற்கு சமமானது. அது, ஒரு திருடன், திருடனைப் பிடிக்க, அதாவது தன்னையே பிடிக்க, போலீஸ்காரனாக ஆவது போலாகும். இந்த விதத்தில் தான் மனம் விடாப்பிடியாக , ஆனால் தன்னிடமிருந்தே பிடிகொடாமல் நழுவி விடுகிறது.