Talk 41. Are there heaven and hell
42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர் ஒளிகளைப் பெறுவது எப்படி?
34 - 40. ஆன்ம ஞானம், கர்மா, செயல்கள், இறந்தவரைக் காண்பது

41.சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 41.

பக்தர்: சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா?

மகரிஷி: அங்கு போவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவை கனவுகள் போன்றவை. கனவில் கூட நேரமும் இடமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் எது உண்மை, கனவா அல்லது விழிப்பா?

பக்தர்: எனவே நாம் நம்மிடம் உள்ள காமம், குரோதம் போன்றவற்றை நீக்கி விட வேண்டும். 

மகரிஷி: எண்ணங்களை விட்டு விடுங்கள். வேறு எதையும் விட வேண்டிய அவசியமில்லை. எதையும் காண்பதற்கு நீங்கள் இருக்க வேண்டும். அது தான் ஆன்மா. ஆன்மா எப்போதும் உள்ள பிரக்ஞை உணர்வு.

பக்தர்: புனித யாத்திரைகள் போன்றவை நல்லதா? 

மகரிஷி: ஆமாம்.

பக்தர்: ஆன்மாவை அடைய என்ன பயிற்சி தேவை?

மகரிஷி: ‘நான்-எண்ணம்’ அழிக்கப் பட வேண்டும்.  ஆன்மா அடையக்கூடிய ஒன்றில்லை. ஆன்மா இல்லாத ஒரு நொடி கூட இருக்கிறதா? அது புதிதானது இல்லை. நீங்கள் உள்ளது போலவே இருங்கள். புதிதானது நிலையானதாக இருக்க முடியாது. மெய்யாக இருப்பது எப்போதும் இருக்கும்.  

பக்தர்: ஞான யக்னம் அல்லது மற்ற யாகங்கள், யக்னங்கள் என்பவை எல்லாம் என்ன? 

மகரிஷி: அவற்றிற்கு வெவ்வேறு பயற்சிகள் உள்ளன. பயிற்சி செய்வது ஞானத்திற்காக.  

பக்தர்: ஜீவன் முக்தர்கள் வித விதமானவர்களா? 

மகரிஷி: வெளிப்புறத்தில் அவர்கள் வித்தியாசப்பட்டால் அதனால் என்ன? அவர்களது ஞானத்தில் வித்தியாசம் இல்லை.

பக்தர்: ஒரு ஆசானிடம் விசுவாசமாக இருக்கும்போது, மற்ற ஆசான்களை மதிக்கலாமா?

மகரிஷி: குரு ஒருவர் தான். அவர் உடல் சார்ந்தவர் இல்லை. பலவீனம் இருக்கும் வரையில், வலிமையின் ஆதரவு தேவைப்படுகிறது. 

பக்தர்: குரு தேவையில்லை என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். 

மகரிஷி: அதை அப்படி அவர் எப்படி தெரிந்துக் கொண்டார்? ஆன்ம ஞானம் பெற்ற பிறகு ஒருவர் அப்படி சொல்லலாமே தவிர அதற்கு முன்னால் சொல்ல முடியாது. 

பக்தர்: பெரும் எத்தனத்தால் நீங்கள் இந்த நிலையைப் பெற்றிருக்கிறீர்கள். பேதைகளான நாங்கள் என்ன செய்வது?

மகரிஷி: நாம் நமது ஆன்மாவில் உள்ளோம். நாம் உலகத்தில் இல்லை. 

பக்தர்: சொர்க்கம், நரகம், இவை என்ன ? 

மகரிஷி: சொர்க்கத்தையும் நரகத்தையும் நீங்கள் உங்களுடன் கொண்டு செல்கிறீர்கள். உங்கள் காமம், குரோதம் போன்றவை இந்தப் பிரதேசங்களை உண்டாக்குகின்றன.  அவை கனவுகள் போன்றவை. 

பக்தர்: ஒரு மனிதர் தமது கவனத்தை புருவங்களுக்கு நடுவில் செலுத்தி, மூச்சைப் பிடித்து வைத்துக் கொண்டால், அவர் மிக உயர்ந்த நிலையை அடைவார் என்று பகவத் கீதை சொல்கிறது. அதை எப்படி செய்வது? 

மகரிஷி: நீங்கள் எப்போதும் ஆன்மாவில் தான் இருக்கிறீர்கள்; அதனால் அதை அடைவது என்பது கிடையாது. புருவங்களுக்கு நடுவில் என்பது கவனத்தைப் பொருத்துவதற்காக ஒரு இடம் தான்.  

பக்தர்: நீங்கள் இதயத்தை தியானத்தைப் பொருத்துவதற்கு ஓர் ஆசனம் என்று சொல்லியிருக்கிறீர்கள், இல்லையா?

மகரிஷி: ஆமாம், அதுவும் கூட.

பக்தர்: இதயம் என்றால் என்ன? 

மகரிஷி: அது ஆன்மாவின் நடு மையம். ஆன்மா மையங்களுக்கெல்லாம் மையம். இதயம் உள்ளத்தின் மையத்திற்கு பிரதிநிதியாகும்; உடல் சார்ந்த மையத்திற்கு அல்ல.

பக்தர்: ஞானம் என்ற சொல், அடைந்து உணர்ந்த ஞானத்தைக் குறிப்பிடுகிறது. அதே சொல்,  வழிமுறைக்கும் உபயோகப்படுத்தப் படுகிறது.   அது ஏன்? 

மகரிஷி: ‘ஞானம்’ என்பது வழிமுறையுமாகும். ஏனெனில் அது இறுதியில் ஆன்ம ஞானத்தை விளைவிக்கிறது. 

பக்தர்: ஒருவரது அறிவு, அதாவது அவருக்குத் தெரிந்த விஷயம் எவ்வளவு குறையுள்ளதாக இருந்தாலும், அதை அவர் கற்பிப்பதில் ஈடுபடுவது சரியா?

மகரிஷி: அவரது பிராரப்தம் அந்த விதமாக இருந்தால். 

பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், “கர்மா, அதாவது செயல்கள் செய்வது ஒரு ஆன்மீக பயிற்சியா என்று அர்ஜுனர் கேட்கிறார். ‘நான் செய்கிறேன்’ என்ற தான்மை உணர்வு இல்லாமல் செயல்கள் செய்யப்பட்டால், அது பயிற்சி தான் என்று கிருஷ்ணர் பதில் சொல்கிறார். 

அதே போல் சாதாரணமாக கர்மாவை மறுக்கும் மறை நூல்களால் அதே சமயம் அங்கீகரிக்கப்பட்ட கர்மாவும் அதே போல தான். மறைநூல்களால் மறுக்கப் படும் கர்மங்கள், ‘நான் செய்கிறேன்’ என்ற தான்மை உணர்வுடன் செய்யப்படுவதாகும். 

கர்மாவை, செயல்களை, விட்டு விட வேண்டாம். உங்களால் அப்படி செய்யவும் முடியாது. ‘நான் செய்கிறேன்’ என்ற தான்மை உணர்வை மட்டும் விட்டு விடுங்கள். செயல்கள் தானாகவே நடைபெறும். அல்லது செயல்கள் செய்வது உங்களிடமிருந்து அகன்று விழுந்து விடும். செயல்கள், பணிகள், தொழில் இவை உங்களது பிராரப்தத்தினால் செய்ய வேண்டும் என்றிருந்தால், நீங்கள் அதை செய்ய மனத்திட்பம் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், அது நடந்தே தீரும். உங்களது பிராரப்தத்தில் அவை இல்லையென்றால், நீங்கள் வேண்டுமென்றே அதில் ஈடுபட்டாலும், அது நடைபெறாது. ஜனகர், சுகர் போன்ற முனிகள் அகங்காரம் இல்லாமல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கர்மங்கள் புகழுக்காக செய்யப் படலாம், அல்லது தன்னலமில்லாமல், பொது ஜனங்களின் நன்மைக்காக செய்யப் படலாம். அப்போது கூட அவர்கள் மெச்சுதலை வேண்டுகின்றனர். எனவே அது உண்மையில் தன்னலம் தான்.

பக்தர்: ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அறிவதால் எல்லா சந்தேகங்களும் தீருமென்றால், அந்த விஷயம் என்ன? 

மகரிஷி: சந்தேகப்படுவரை அறிந்துக் கொள்ளுங்கள். சந்தேகப்படுபவரை விடாமல் பிடித்துக் கொண்டால், சந்தேகங்கள் எழாது. இங்கு குறிப்பிடப்படுபவர் கடந்த நிலையில் இருப்பவர். மேலும்,  சந்தேகப்படுபவர் இருப்பது நின்று விட்டால், சந்தேகங்களே எழாது.  எங்கிருந்து அவை எழுகின்றன?  எல்லோரும் ஞானிகள் தான், ஜீவன் முக்தர்கள் தான். ஆனால் அவர்கள் அதை அறிவதில்லை, அவ்வளவு தான். சந்தேகங்கள் அடியோடு நீக்கப் பட வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், சந்தேகப்படுபவர் அடியோடு நீக்கப் பட வேண்டும். இங்கு சந்தேகப்படுபவர் என்பது மனமாகும்.  

பக்தர்: இதற்கு வழி முறை என்ன?

மகரிஷி: ‘நான் யார்?’ என்ற விசாரணை. 

பக்தர்: நாங்கள் ஜபம் செய்யலாமா?

மகரிஷி: நான் இது என்று ஏன் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்? விசாரணை செய்யுங்கள்; எண்ணங்கள் நின்று விடும்.  பிறகு எது உள்ளதோ அது, அதாவது ஆன்மா, தப்பிக்க முடியாமல் மிஞ்சி இருக்கும் ஒன்றாக வெளிப்படுத்தப் படும்.

பக்தர்: ஹத யோகம் தேவையா?

மகரிஷி: அது சகாயங்களில் ஒன்று. ஆனால் அதைச் செய்யத்தான் வேண்டும் என்று அவசியமில்லை.  அது ஒரு மனிதரைப் பொருத்திருக்கிறது. விசாரணை பிராணாயாமத்தை விட மேம்பட்டதா. யோக வசிஷ்டத்தில், மகாராணி சூடலா,  மகாராஜா சிகித்வஜருக்கு, தான்மை அகங்காரத்தைக் கொல்வதற்கு, சுய விசாரணையை அறிவுறுத்துகிறாள். 

மெய்மை, மூச்சுக் கட்டுப்பாட்டினாலோ அல்லது புத்தியினாலோ அடையப் படலாம். ஹத யோகம் முதலாவது. விசாரணை இரண்டாவது.

பக்தர்: ஆன்ம ஞானம் பெற்ற பிறகு, ஞானிக்கு தனித்தன்மை உள்ளதா? 

மகரிஷி: அவர் தனித்தன்மையை எப்படி வைத்துக் கொள்ள முடியும்? 

சதாரணமாகக் கூட, உலகத்தைச் சார்ந்ததானாலும், உலகத்தைக் கடந்ததைச் சார்ந்ததானாலும், எந்த பணியையும் எடுத்துக் கொள்வதற்கு முன்னால், ஆசமனம், அதாவது மனதைத் தூய்மையாக்கும் சடங்கு, பிராணாயாமம், அதாவது மூச்சுக் கட்டுப்பாடு, இவற்றைச் செய்யும்படி பெரியோர் அறிவுறுத்துகின்றனர்.  இதன் பொருள் என்னவென்றால், மனதை ஒருமுக கவனம் செலுத்த வைப்பது, பணியை சாதித்து விடுகிறது என்பதா.

பக்தர்: நான், ‘நேதி-நேதி’, அதாவது, ‘இது இல்லை, இது இல்லை’ என்றவாறு ஆழ்நிலை தியானம் செய்கிறேன்.  

மகரிஷி: இல்லை. அது ஆழ்நிலை தியானம் இல்லை. மூலாதாரத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் தவறாமல் மூலாதாரத்தை அடைய வேண்டும். பிறகு ‘பொய்யான நான்’ மறைந்து விடும்; ‘மெய்யான நான்’ உணரப்படும். ‘மெய்யான நான்’ இல்லாமல், ‘பொய்யான நான்’ இருக்க முடியாது.

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1

செப்டம்பர் 22, 1936

உரையாடல் 41.

 

 

பக்தர்:

42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர் ஒளிகளைப் பெறுவது எப்படி?
34 - 40. ஆன்ம ஞானம், கர்மா, செயல்கள், இறந்தவரைக் காண்பது
41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!