34 – 40. ஆன்ம ஞானம், கர்மா, செயல்கள், இறந்தவரைக் காண்பது
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
~~~~~~~~
பிப்ரவர் 4, 1935
~~~~~~~~
உரையாடல் 34.
ஒரு பக்தர், யோகி ராமய்யா, மகரிஷியின் அறிவுரைகளைப் பின்பற்றியதால் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்னார் :
மகரிஷியின் முன்னிலையில் உட்கார்ந்து இருப்பது மனதுக்கு அமைதி கொண்டு வருகிறது. நான் இடைவிடாமல் மூன்று, நான்கு மணி நேரத்திற்கு, பூரண அமைதியில் அமர்ந்திருப்பேன். பிறகு என் மனம் ஒரு உருவத்தை அமைத்துக் கொண்டு உள்ளிலிருந்து வெளியே வந்தது. இடையறாத பயிற்சியும் ஆழ்நிலை தியானமும் செய்ததன் மூலமாக அது இதயத்தினுள் உட்புகுந்து அதனுள் ஒன்று சேர்ந்துக் கொண்டது. நான் இதயம் தான் மனதின் இருப்பிடம் என்று முடிவு செய்கிறேன். இதன் விளைவு மன அமைதி. மனம் இதயத்தில் அமிழ்வுறும் போது, ஆன்மா உணரப்படுகிறது. இது ஆழ்ந்து சிந்தனை செய்யும் நிலையில் கூட உணரப்படுகிறது. நான் மகரிஷியை ஆழ்ந்த சிந்தனையைப் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பின்வருமா கற்றுக் கொடுத்தார் :
ஒரு மனிதர் இறக்கும் போது, அவரது உடல் போய் விட்ட பின், அதற்குப் பிறகு என்ன மிஞ்சி இருக்கிறது? மனம் தான். பிறகு கேள்வி எழுகிறது, “உடலில் எத்தனை உள்ளன – ஒன்றா, இரண்டா? இரண்டு இருந்தால், பின் ஏன் ஜனங்கள் ‘நாங்கள்’ என்று சொல்வதில்லை, ஆனால் ‘நான்’ என்று சொல்கிறார்கள்? எனவே இருப்பது ஒன்றே ஒன்று தான்.
அது எங்கிருந்து பிறக்கிறது? அதன் சுய தன்மை, சொரூபம் என்ன? இப்படி விசாரிப்பதால், மனமும் மறைந்து விடுகிறது. பிறகு மிஞ்சி இருப்பது ‘நான்’ என்பது காணப்படுகிறது. அடுத்த கேள்வியானது, ‘நான் யார்?’ என்பதாகும். அது ஆன்மா மட்டுமே ஆகும். இது தான் ஆழ்ந்த சிந்தனை. இப்படித்தான் நான் செய்தேன். இந்த செயல்முறையால், உடலுடன் உள்ள பிணைப்பு, தேக வாசனை அழிக்கப் படுகிறது. ‘தான்மை’ மறைந்து விடுகிறது. ஆன்ம சுய சொரூபம் மட்டுமே பிரகாசிக்கிறது. இது தான் ஆன்ம ஞானம்.
மனச் சிதைவு அல்லது மனோலயம் பெறுவதற்கு ஒரு வழிமுறை, மேன்மையான சான்றோருடன், யோக வல்லுனர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதாகும். அவர்கள் பூரண பேரானந்தத்தில் நிலையாக உறைந்துள்ள பூரண ஆசான்கள். அவர்களுக்கு ஆன்ம ஞானம் எளிதாகவும், இயல்பாகவும், எப்போதும் இடைவிடாமலும் இருக்கிறது. அவர்களுடன் நெருங்கிய ஆன்மீகத் தொடர்பு கொண்டவர்கள் சிறிது சிறிதாக அவர்களுடைய ‘ஆழ்ந்த அமைதி’ தன்மையை அடைகிறார்கள்.
~~~~~~~~
உரையாடல் 35.
ஒரு படித்த வருகையாளர் மகரிஷியைக் கேட்டார்: த்வைதம் (இரண்டு), அத்வைதம் (ஒருமை) – இவை என்ன?
மகரிஷி: உடலுடன் இணைந்து இருப்பது த்வைதம்; உடலுடன் இணையாமல் இருப்பது அத்வைதம்.
~~~~~~~~
உரையாடல் 36.
ஒரு மேன்மையான, உயர்குல பெண்மணி, வட இந்தியாவிலிருந்து தனது சொந்த செயலாளருடன் பகலில் வந்தாள். சில நிமிடங்கள் காத்திருந்த பின், பகலுணவுக்குப் பின் மகரிஷி கூடத்திற்கு திரும்பி வந்தவுடனேயே அவரிடம் கேட்டாள் :
பக்தர்: மஹராஜ் ஜி, நாம் இறந்தவர்களைக் காண முடியுமா?
மகரிஷி: ஆமாம்.
பக்தர்: யோகிகளால் அவர்களை நமக்குக் காண்பிக்க முடியுமா?
மகரிஷி: ஆமாம். ஒருவேளை முடியலாம். ஆனால் இறந்தவர்களைக் காட்டும்படி என்னிடம் கேட்காதீர்கள். ஏனெனில், என்னால் அது முடியாது.
பக்தர்: நீங்கள் அவர்களைக் காண்கிறீர்களா?
மகரிஷி: ஆமாம். கனவுகளில்.
பக்தர்: ஆன்மீக லட்சியத்தை யோகத்தின் மூலமாக நிறைவேற்றி உணர முடியுமா?
மகரிஷி: ஆமாம்.
பக்தர்: நீங்கள் யோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா? அந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் அளித்த நூல்கள் இருக்கின்றதா?
மகரிஷி.: ஆமாம்.
அவள் சென்ற பிறகு, மகரிஷி சொன்னார் : நாம் நமது உறவினர்களை அவர்கள் இறந்த பின் அறிவதற்கு, நாம் என்ன நமது உறவினர்களை அவர்கள் பிறப்பதற்கு முன்னால் அறிந்தோமா?
~~~~~~~~
உரையாடல் 37.
ஒரு வருகையாளர் கேட்டார்: கர்மா என்றால் என்ன?
மகரிஷி: எது ஏற்கனவே பலன்களை அளிக்க ஆரம்பித்துள்ளதோ, அது பிராரப்த கர்மா (கடந்த கால செயல்கள்) என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. எது சேகரித்து வைத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் பலன் தருமோ, அது சஞ்சித கர்மா (சேகரித்து வைக்கப் பட்டுள்ள செயல்கள்) என்று வகைப் படுத்தப் பட்டுள்ளது. கிராமவாசிகள் பண்டமாற்று செய்து கீரைகளுக்காக தானியங்களைப் பெறுவது போல, இது பலவிதமானது. இத்தகைய தானியம், அரிசி, தினை, வாற் கோதுமை போன்றவையாகும். அவற்றில் சில தண்ணீரின் மேல் மிதக்கும், சில தண்ணீரினுள் முழ்கி இருக்கும். அவை நல்லதாக, கெட்டதாக அல்லது சுமாரானதாக இருக்கலாம். சேகரித்து வைத்திருக்கும் கர்மாவில், இருப்பதற்குள் வலிமையானது அடுத்த பிறவியில் பலன் அளிக்க ஆரம்பித்தவுடன், அது அந்தப் பிறவியின் பிராரப்த கர்மா என்று அழைக்கப் படுகிறது.
~~~~~~~~
உரையாடல் 38.
மகரிஷியுடன் இருந்த ஒரு உதவியாளர் அவரைக் கேட்டார்: முக்தி அடைவதற்கு பாதை என்ன?
மகரிஷி பதிலளித்தார் : “ஏற்கனவே எடுத்துக் கொண்ட பாதை முக்திக்கு வழிகாட்டும்.
~~~~~~~~
செப்டம்பர் 22, 1936
~~~~~~~~
உரையாடல் 39.
ஒரு வருகையாளருடன் பேசிக் கொண்டிருந்த போது, மகரிஷி பின்வருமாறு சொன்னார் :
ஒரு ஆன்ம ஞானி மட்டுமே தான் நல்ல கர்ம யோகியாகவும் இருக்க முடியும். ‘நான் செய்கிறேன்’ என்ற கருத்து அகன்ற பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்! திரு சங்கரர் செயல்கள் செய்யாமல் இருப்பதை அறிவுறுத்தினார். ஆனல், பல விளக்கவுரைகளை அவர் எழுதவில்லையா? பல விவாதங்களில் அவர் பங்கெடுத்துக் கொள்ளவில்லையா?
செயல்கள் செய்வதைப் பற்றியும் செய்யாமல் இருப்பதைப் பற்றியும் உங்களைத் தொந்தரவு படுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் சுய சொரூபத்தை அறிந்துக் கொள்ளுங்கள். பிறகு பார்க்கலாம் யாருடைய செயல் என்று. யாருடையது அது?
காரியம் தானே முடியட்டும். ஒருவருக்கு ‘நான் செய்கிறேன்’ என்ற கருத்து இருக்கும் வரையில், அவர் காரியத்தின் பலன்களை அனுபவிக்கத் தான் வேண்டும். அவர் தான் செய்வதாகக் கருதாவிட்டால், அவருக்கு செயல்களே கிடையாது. மனதில் உலக வாழ்க்கையைத் துறந்தவரே சந்நியாசி ஆவார்.
பக்தர்: தான்மை எப்படி எழுந்தது?
மகரிஷி: அதைத் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தற்காலத்தை அறிந்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு மற்ற சமயங்களைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்?
பிற்பாடு மகரிஷி ஒரு கேள்விக்கு பதிலளித்தார் : “உலகம் உங்களுக்குள் இருக்கிறதா அல்லது உங்களுக்கு வெளியே இருக்கிறதா? அது உங்களை விட்டு தனியாக இருக்கிறதா? உலகம் வந்து உங்களிடம், ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்கிறதா?
~~~~~~~~
உரையாடல் 40.
முன்பு கேள்வி கேட்டவர் தொடர்ந்தார்: “செயல் நம்முடையதா இல்லையா என்று நாம் எப்படி அறிவது?
மகரிஷி: செயல்களின் பலன்கள் ஒருவரை பாதிக்காமல் இருந்தால், அவர் செயல்களிலிருந்து விடுபட்டு இருக்கிறார்.
பக்தர்: புத்தி சார்ந்த அறிவு போதுமா?
மகரிஷி: புத்தி சார்ந்து அறியப்படவில்லையென்றால், எப்படி பயிற்சி செய்வது? முதலில் புத்தி சார்ந்து கற்றுக் கொள்ளுங்கள், பிறகு அதனுடன் நின்று விடாதீர்கள், பயிற்சி செய்யுங்கள்.
பிறகு மகரிஷி சில பொதுவான கருத்துக்களை எடுத்துரைத்தார் : ஒருவர் ஒரு சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் போது, மற்ற சித்தாந்தங்களை கண்டனம் செய்வதற்கு நிர்பந்தப்படுத்தப் படுகிறார். மடாதிபதிக்களின் விஷயத்திலும் இப்படித்தான்.
எல்லா ஜனங்களும் ஒரே விதமான செயல்கள் செய்வதை எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் தமது கடந்த பிறவிகளையும், மனோநிலையையும் பொருத்து செயல்படுகின்றார். ஞானம், பக்தி, கர்மா – இவை எல்லாம் பிணைந்துள்ளன. உருவங்களின் மேலே தியானம் செய்வது ஒருவரின் மனதைப் பொருத்திருக்கிறது. அது பலப்பல உருவங்களை விலக்கி விட்டு, ஒரே ஒரு உருவத்தை மட்டும் வைத்துக் கொள்வதாகும். அது ஆன்மீக லட்சியத்தை அடைவதற்கு வழி வகுக்கிறது. ஆரம்பத்தில், இதயத்தில் மனதைப் பொருத்தி வைப்பது செய்ய முடியாததாகும். அதனால் இந்த மாதிரியான சகாயங்கள் தேவைப் படுகிறது.
“உனக்கும், எனக்கும் ஒரு ஜன்மமும் கிடையாது” என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் அவரே பிறகு தாம் ஆதித்யருக்கு, அதாவது சூரியனுக்கு முன்பே பிறந்தவர் என்றும் சொல்கிறார். இதை அர்ஜுனர் விவாதிக்கிறார். எனவே, ஒவ்வொருவரும் தமது ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தகுந்தவாறு தான் கடவுளைப் பற்றி நினைக்கிறார் என்பது நிச்சயம்.
விழிப்பு நிலையில் நீங்கள் இந்த உடல் தான் என்று சொல்கிறீர்கள்; தூக்கத்தில் உள்ள உடல் சொல்லவில்லை. ஒரு மனிதருக்கே இப்படி பல விதமான உடல்கள் இருக்கும் போது, கடவுளுக்கு எல்லையற்ற திறன்கள் இருக்கக் கூடாதா?
ஒருவர் எந்த வழிமுறையை பின்பற்றினாலும், அந்த வழிமுறை ஞானிகளால் ஊக்குவிக்கப் படுகிறது. ஏனெனில், அதுவும் மற்ற வழிமுறைகளைப் போலவே ஆன்மீக லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டுகிறது.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவர் 4, 1935
செப்டம்பர் 22, 1936
உரையாடல் 41.