மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு
பகவான் ரமண மகரிஷி, எல்லோரிலும் உள்ள ஆன்மாவாக உறைவதால், அவர் எல்லா மிருகங்களுடனும் தோழமையாக இருந்ததும், மிருகங்கள் அவரது முன்னிலையில் மிகவும் அமைதியாக இருந்ததும் அதிசயம் ஒன்றுமில்லை. அவருக்கும் பசு லக்ஷ்மிக்கும் இருந்த உன்னத நட்பு எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அற்புதமான விஷயம் என்னவென்றால், நாகப்பாம்பைப் போலவும் மற்ற மிகவும் கொடியதாகவும் உள்ள மிருகங்களைக் கூட அவர் சாந்தமாக்கி அடங்க வைத்தார். அவரது ஆத்மார்த்தமான பக்தர்கள் பலர், அவர் மிருகங்களைக் கருணையுடனும், அன்புடனும், மென்மையுடனும் நடத்திய விதங்களைப் பற்றி பல நிகழ்ச்சி விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். மகரிஷி தாம் மனிதர்களை நடத்தியது போலவே, மிருகங்கள், பறவைகள், மேலும் பூச்சிகளைக் கூட நடத்தியது, உண்மையில் அற்புதமானது தான்.
ரமணரும் மயிலும் பாம்பும்
ஸ்கந்தாஸ்ரமத்தில், ஒரு மயில் பகவானை எங்கும் பின் தொடர்ந்து செல்லும். ஒரு நாள், ஆஸ்ரமத்தில் ஒரு பெரிய கருநாகப் பாம்பு வந்தது. மயில் பாம்பை கடுமையாக தாக்கியது. பாம்பும் படமெடுத்தது. இரண்டு இயல்பான விரோதிகளும் சாகும் வரை கொடிய சண்டைப் போடத் தயாராக நின்றனர். அப்போது ரமணர் பாம்புக்கு மிக அருகில் வந்து, “ஏன் இங்கே வந்தாய்? அந்த மயில் உன்னைக் கொன்று விடும். உடனே இந்த இடத்தை விட்டுச் செல்வது உனக்கு நல்லது” என்று சொன்னார். உடனே நாகப் பாம்பு தலையைத் தாழ்த்தி, அந்த இடத்தை விட்டு ஊர்ந்து சென்று விட்டது.
திருமதி கௌரி அம்மாள்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 196.
கொடிய விரோதிகள் நண்பர்கள் போல் விளங்கினர்
மேலும், தினம் தினம் பகவானுடன் என்ற நூலில் பின்வருமாறு ரமணர் சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கந்தாஸ்ரமத்தில், சில சமயம் ரமணர் எதிரில், ஒரு மயில் தனது தோகையை விரித்த இருக்குமாம். ஒரு பாம்பும் படமெடுத்தபடி இருக்குமாம். இரண்டும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்குமாம்.
தினம் தினம் பகவானுடன்
Nov. 24, 1945
கொடிய மிருகங்களானாலும் பரவாயில்லை
நான் முதன்முதலாக ஆஸ்ரமத்திற்கு வந்த போது, அங்கு இன்னும் சில சிறுத்தைப் புலிகள் இருந்து வந்தன. அவை ஆஸ்ரமத்திற்கு வருவது கிடையாது என்றாலும், சில சமயம் பகவான் சென்று வந்த இடங்களுக்குச் சென்று வந்தன. ஒரு சமயம் அவரெதிரில் ஒரு சிறுத்தை தொன்றியது. ஆனால், அதைக் கண்டு ரமணர் சிறிதும் பயப்படவில்லை. அவர் சிறுத்தையைப் பார்த்து, “போடா !” என்றார். சிறுத்தையும் அகன்றுச் சென்றது.
அண்ணாமலை ஸ்வாமி
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 70.
ஞானியும் சிறுத்தையும்
ஒரு நாள் இரவில் நிலவொளியில், சில பக்தர்கள், வேதங்களை ஓதியபடி, அருணாசல மலையைச் சுற்றி கிரிவலம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வழி நடுவில், திடீரென்று ஒரு சிறுத்தை நின்றுக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். பாடகர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். அவர்களால் தொடர்ந்து பாடவும் முடியவில்லை, ஓடவும் முடியவில்லை. அந்த சிறுத்தை அவர்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனித்தது. பிறகு பாதையைக் கடந்து, காட்டுக்குள் சென்று மறைந்தது. பக்தர்கள் தமது பாக்கியத்திற்கு நன்றி செலுத்தி விட்டு, கிரிவலத்தைச் செய்து முடித்து விட்டு ஆஸ்ரமத்திற்கு திரும்பிய பின், தமது சாகச நிகழ்ச்சியை ரமணரிடம் சொன்னார்கள். ரமணர் அதை உன்னிப்பாக கேட்டார். பிறகு சொன்னார், “பயப்பட காரணம் இல்லை. அந்த சிறுத்தை ஒரு ஞானி. அவர் நீங்கள் வேதம் ஓதுவதைக் கேட்க, மலையிலிருந்து இறங்கி வந்தார். நீங்கள் பயந்து, பாடுவதை நிறுத்தியதால், அவர் மிகவும் ஏமாற்றத்துடன் சென்று விட்டார். நீங்கள் ஏன் பயந்தீர்கள்?”?
சலம்
ரமண ஸ்ம்ருதி
அடிபட்ட புறா
ஒரு முறை ஒருவர் ஒரு காயமடைந்த புறா ஒன்றைக் கொண்டு வந்தார். ரமணர் அதைத் தம் கைகளீல் சிறிது நேரம் வைத்துக் கொண்டு, பிறகு கூடத்தில் சேர்ந்திருந்த பக்தர்களிடம் கேட்டார், “முற்றிலும் குணமாகும் வரை இந்த புறாவை யார் கவனித்துக் கொள்வீர்கள்?” பதில் ஒன்றுமே வரவில்லை. சில காலத்திற்கு முன்னால், பரோடாவின் மஹாராணி ஆஸ்ரமத்திற்கு வெண்மை நிற மயில் ஒன்று பரிசளித்திருந்தாள். அதை கவனித்துக் கொள்ள எல்லோரும் ஆவலாக இருந்தனர். பகவான் சுற்றிலும் பார்த்து விட்டு பிறகு புறாவிடம் பேச ஆரம்பித்தார். “பாவம்! நீ ஒரு மயில் இல்லை! மஹாரணி அளித்தது போன்ற வெலையுயர்ந்த பறவையில்லை. நீ ஒரு சிறிய, உபயோகமற்ற, வெறும் புறா தான். உன்னை யார் விரும்புவார்கள்? உன்னை யார் கவனித்துக் கொள்வார்கள்?” என்று சொன்னார். புறா ஒரு சாதாராண கூண்டில் சில காலம் வைக்கப்பட்டு, பிறகு குணமடைந்து, பறந்து போய் விட்டது. ஆனால், எல்லா உயிர்களுக்கும் அடிப்படையான கருணையின் பாடம் அனைவர் மனதிலும் மிஞ்சி நின்றது.
சலம்
ரமண ஸ்ம்ருதி
ரமணரும் மிருகங்களும்
ரமணர் மிருகங்களை மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் நடத்தி வந்தார். சில சமயம் ஓரிரண்டு குரங்குகள் கூடத்திற்குள் நடந்து வரும். சில பக்தர்களை இது பாதித்தது. ரமணர் மென்மையாக குரங்குகளை அழைத்து, முந்திரி பருப்பும், வேர்க்கடலையும் கொடுப்பார். அவை மகிழ்ச்சியால் கீச்சிட்டுக் கொண்டே செல்லும். சில சமயம், ஒரு அணில் மஞ்சத்தின் மீது ஏறி வரும். ரமணர் அதைக் கொஞ்சி விட்டு, என்ன இருக்கிறதோ அந்த உணவுப் பொருளை அதற்குக் கொடுப்பார். அது ஒருவரையும் தொந்தரவு செய்யாமல் சென்று விடும். அதே போல, மயில் ஒன்று வந்து, அவர் கையிலிருந்து பொறியை எடுத்துக் கொள்ளும்.
அணில்களைப் பற்றி இன்னும் இருக்கிறது
அணில்களைப் பொருத்தவரை, தினம் தினம் பகவான் என்ற நூலில், இந்த சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
திருமதி சூரி நாகம்மா, சென்னையிலிருந்த தமது சகோதரர் திரு D.S. சாஸ்திரிக்கு, ரமணாஸ்ரமத்தின் சாரம் மிகுந்த நிகழ்ச்சிகளை, கடிதங்கள் மூலமாக விவரித்து வந்ததுடன், அவற்றை தொகுத்து, பதிவு செய்து வந்தார். இவை ரமணர் முன்னிலையில் சமர்ப்பிக்கப் பட்டது. ரமணர் அவற்றை பார்வையிட்டு விட்டு, பிறகு அவற்றிர்க்கு ஒரு அட்டவணை அல்லது பொருளடக்கம் அளிக்கும்படி திருமதி நாகம்மாவுக்கு ஆலோசனை அளித்தார். அதில் ஒரு நிகழ்ச்சி அணில்களை பற்றி இருந்தது. எனவே பகவான் அவற்றைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
“ஒரு சமயத்தில், இங்கிருந்த ஜனங்களுக்கும், அணில்களுக்கும் ஒரு மாதம் முழுவதும் வழக்கமான போர் இருந்து வந்தது. அணில்கள் என் தலைக்கு மேல் கூடுகள் கட்டும். தினமும் மக்கள் அவற்றை நீக்குவார்கள். ஆனால், மறுபடியும் அணில்கள் கூடுகளைக் கட்டி விடும். கடைசியில், கூரையிலிருந்த எல்லா ஓட்டைகளும் மூடப்பட்டன. பிறகு அணில்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு சமயத்தில், அணில்கள் என் சோபா மீதெல்லாம் ஓடும். பக்கங்களிலும், தலைகாணிகளின் அடியிலும், மற்ற எல்லா இடங்களிலும் ஓடிச் செல்லும். நான் உட்காரும்போதோ அல்லது சாய்ந்துக் கொள்ளும் போதோ, மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. சில சமயம் சிறிது வலிவாகச் சாய்ந்ததால், என்னையறியாமல், ஒரு சிறிய அணிலுக்கு சமாதி கொடுத்திருக்கிறேன். மலையின் மீது, ஸ்கந்தாஸ்ரமத்தில் கூட இதெல்லாம் நிகழும். அங்கும் அவை என் படுக்கை மீதும் தலையணைகள் மீதும் நெருக்கமாக அமர்ந்திருக்கும். அதற்கு முன்பு கூட இது ஆரம்பித்தது. குருமூர்த்தத்தில் நான் இருந்த போது கூட, பறவைகளும் அணில்களும் என்னைச் சுற்றி கூடுகள் கட்டும். ஒரு வித பறவை களிமண்ணால் கூடு கட்டும். ஒரு முறை இத்தகைய கூடு ஒன்று கட்டப்பட்டது. பறவைகள் சென்ற பின், அணில்கள் அதில் வசிக்க ஆரம்பித்தன.”
பகவானும் மானும்
ஒரு முறை, ஆஸ்ரமத்தின் மான் சில மிருகங்களால் தாக்கப்பட்டது. சாதாரண காயங்கள் பின்பு மோசமாக ஆகி விட்டன. ரமணர் அதன் முகத்தை கைகளில் தாங்கி, அதன் கண்ணீர் நிறைந்த கண்களை நோக்கியவாறு, அதன் அருகில் அமர்ந்திருந்தார். ஆஸ்ரமத்தின் சர்வாதிகாரி, அண்மையில் இருந்த எனது உறவினரிடம், பகவானுக்கு சற்று ஓய்வளித்து, மானைப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னார். ரமணரும் இதைக் கேட்டார். ஆனாலும், பதில் ஒன்றும் அளிக்கவில்லை. மான் தனது கடைசி சுவாசத்தை விடும் வரை, அங்கேயே அமர்ந்திருந்தார். பசு லக்ஷ்மியின் சமாதிக்கு அருகில், இந்த மானுக்கும் ஒன்று உள்ளது.
K. சுப்பிரமணியன்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 33.
ரமணர் எல்லா மிருகங்களுக்கும் கருணை காட்டினார்
ரமணர் எப்போதும் எல்லா மிருகங்களுக்கும் கருணை காட்டினார். பாம்பு, தேள், இவை கூட கொல்லப்பட அனுமதிக்கப்படவில்லை. ரமணருக்கு நாய்கள் மீது ஒரு மென்மையான உணர்வு இருந்தது. ஒரு சமயம், நாய்க்குட்டி ஒன்று, அலுவலகத்திற்கு அருகில் அசிங்கம் செய்து விடும். சர்வாதிகாரி மிகவும் கோபம் கொண்டு, நாய்க்குட்டியை ஆஸ்ரமத்திலிருந்து துரத்தி விட முயன்றார். ஆனால், ரமணர் நாய்க்குட்டியின் சார்பில் பேசி காப்பாற்றினார். ஒரு சிறு குழந்தை இப்படி செய்தால் யாரும் கோபித்துக் கொள்வதில்லை. இந்த நாய்க்குட்டியும் ஒரு குழந்தை தானே? அதற்கு என்ன தெரியும்?” என்று சொன்னார்.
ரமணருக்கு குரங்குகள் மீது ஒரு சிறப்பான அன்பு இருந்தது. பல விதங்களில், அவை மனிதர்களை விட மேன்மையானவை என்று அடிக்கடி சொல்வார். குரங்குகளுக்கு எப்படி உணவளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தல்கள் அளித்தார். ஆனால், ஆஸ்ரமத்தின் நிர்வாகிகளுக்கு குரங்குகள் ஒரு பெரும் தொல்லையாக அமைந்தன. ஆனால் பகவான் அவற்றை பல விதங்களில் ஊக்குவிப்பார். அதோடு, அவரருகில் இருப்பதற்காக சில சமயம் ஜனங்கள் எப்படி மறு பிறவியில் ஒரு மிருகமாக தோன்றுவார்கள் என்றும் சொன்னார். ஆஸ்ரம பசு லக்ஷ்மியின் உதாரணம் நிச்சயமாக இருக்கிறது.
மேஜர் A.W. சேட்விக்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 111.
இது சம்பந்தமாக, தினம் தினம் பகவானுடன் என்ற நூலில் உள்ள குறிப்பைத் தெரிவிப்பது அவசியம். திரு G.V.S., சென்ற முறை ரமணரைப் பார்க்க வந்த போது தாம் இயற்றிய இரண்டு கவிதை வரிசைகளை, இப்போது ரமணருக்கு படித்துக் காட்டினார். அவற்றின் சாராம்சம் பின்வருமாறு. “எல்லாவித மிருகங்களுக்கும் – அணில்கள், மயில்கள், நாய்கள், பசுக்கள், குரங்குகள் இவற்றுக்கெல்லாம், நீங்கள் காட்டும் கருணையைக் கண்டு யார் தான் பாதிக்கப்படாமல் இருப்பார்? ஒருவரது எலும்புகளே அதனால் கரைந்து விடும். எல்லாவித பறவைகளும் கொடிய மிருகங்களும் உங்கள் பார்வைக்காகவும், ஸ்பரிசத்திற்காகவும் உங்களிடம் வருகின்றன. வந்து முக்தியடைகின்றன. இந்த மனித மிருகத்திற்கும் அந்த நற்கதியை உறுதியளித்து காப்பாற்றுங்கள்.”
தினம் தினம் பகவானுடன்
May 16, 1946
ரமணர் மிருகங்களின் நண்பர்
முனிவர், பாவம் செய்தவர், அரசர், பாமரர், படித்தவர், படிக்காதவர், பசு, நாய் அல்லது குரங்கு; யாராக இருந்தாலும், ரமணர் எல்லோருக்கும் நண்பராக இருந்தார். பக்தர் ஒருவர் தமது நாய் தம்மை விட ரமணரின் துணையை விரும்பியதைப் பற்றி தெரிவித்தார். அவர் சொல்கிறார்: “ஒரு நாள், என் நாய்களில் ஒன்று காணவில்லை. மாலை வேளையில், ஒரு துறவி நாயுடன் வந்தார். அவர் சொன்னார், “அது என்னிடம் திரும்பி வந்து விட்டது. நான் அதை வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உங்களிடமிருந்து நான் ஏன் திருட வேண்டும்? ” என்று துறவி சொன்னார்.
கே. சுவாமிநாதன்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 43.
ரமணர் மிருகங்களுக்கு மட்டுமில்லை, தாவரங்களுக்கும் அன்பை அளித்தார்
உணவு வேளைகளில், பகவான் மிகவும் சிறிதளவே பரிமாறும்படி கேட்பார். மேலும் இலையில் சிறிதளவும் வீணாக்காமல் கடைசி வரை உட்கொண்ட பின்னரே எழுந்திருப்பார். ஒருமுறை நான் சொன்னேன், “நாம் இப்படி இலைகளில் உள்ள உணவை எல்லாம் சாப்பிட்டுவிட்டால், இதற்காக காத்திருக்கும் மிருகங்களுக்கு ஒன்றும் பாக்கி இருக்காது.” அதற்கு பகவானின் பதில் என்னவென்றால், “உங்களுக்கு இவ்வளவு கருணை இருந்தால், நீங்கள் சாப்பிடுவதற்கு முன்னால், மிருகங்களுக்கு ஏன் உணவளிக்கக் கூடாது?”
பகவானின் கருணை தாவரங்களுக்கு கூட கிடைத்தது. ஒருமுறை, ஆஸ்ரமத்தின் சர்வாதிகாரி, ஒரு பாதாம் மரத்தின் வாடிப் போன இலைகளை நீக்கும்படி ஒரு தொழிலாளியிடம் சொன்னார். அந்த ஆள் கண்டபடி மரத்தை இங்கும் அங்கும் வெட்ட ஆரம்பித்தார். பகவான் அவனுக்கு குரல் கொடுத்தார். “ஏய், நீ மரத்தை ரொம்ப சித்திரவதை செய்கிறாய். அது உயிரோடு இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா? நான் உன் தலை முடியை திடீரென்று பிடித்து இழுத்தால் உனக்கு எப்படி இருக்கும்? அதில் உயிர் இல்லையென்றாலும், நீ வலியை உணர்வாய், இல்லையா? பாவம் அந்த மரம். அதை விட்டு விட்டு போ.” ”
கிருஷ்ண பிக்ஷு
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 62.
ரமணர் குரங்குகளை மனிதர்கள் போல நடத்தினார்
ஒரு தருணத்தில், சுவாமி அருகில் இருந்த குரங்குகளைப் பற்றி மனிதர்களைப் பற்றி பேசுவது போல பேசினார். அவர் குரங்குகளில் ஒன்றை தலைவன் என்று குறிப்பிட்டு, அதன் நற்குணங்களைப் பற்றி பேசுவார். அவர் சொல்வதை நாங்கள் கேட்கும் விதம் அதற்கு பிடிக்காதது போல், குரங்கு முகத்தில் சேஷ்டைகள் செய்து காட்டும். தமது கையிலிருந்து ரமணர் உணவை அளிப்பதும், குறும்புத்தனமான குரங்கு அதை பெற்றோரிடமிருந்து பெறுவது போல், அவர் கையிலிருந்து எடுத்துக் கொள்வதும் மிக அற்புதமான காட்சியாக இருந்தது. அவரோடு குரங்குகளுக்கு எவ்வளவு நன்னடத்தை இருந்தது! ஆனாலும், பிறகு அவை பாறைகளின் மீது குதித்தோடி தங்கள் கவலையற்ற, வழக்கமான காட்டு வாழ்க்கைக்கு சென்று விடும்.
Col. A.N.S. மூர்த்தி
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 103.
அன்று ஶ்ரீராம நவமியானதால், பகவான் சொன்னார், “இன்று குரங்குகளின் தினம். அவற்றிர்க்கு உணவளிக்க வேண்டும். அது போலவே, சுமார் பதினோறு மணிக்கு, நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வைகுண்ட வாசன், நிறைய உணவும், இனிப்பு, உப்புப் பண்டங்களும், அதாவது நாங்கள் ஏற்றுக் கொண்ட அதே உணவை, எல்லாவற்றையும் கலந்து, ஆஸ்ரமத்தின் பின் புறத்தில் இருந்த படிகளுக்கு எடுத்துக் கொண்டு சென்றார். இரவில், பகவான் அவரைக் கேட்டார், “பகலில் குரங்குகளுக்கெல்லாம் உணவளிக்கப் பட்டதா? நிறைய குரங்ககள் வந்ததா?” என்று கேட்டார். வைகுண்ட வாசன் பதிலளித்தார். “நான் போன போது, இரண்டு மூன்று குரங்குகள் தான் இருந்தன. சில நேரத்திற்குப் பிறகு, மேலும் நிறைய குரங்குகள் வந்தன. எல்லாவற்றிர்கும் நன்றாக உணவளிக்கப் பட்டது. அவை சண்டைப் போடவில்லை. ஒன்றை ஒன்று கடித்துக் கொள்ளவில்லை.” பகவான் சொன்னார், “போதுமான அளவு உணவு இருந்தால், அவை சண்டைப் போடாது. தேவை இருந்தால் தான் எல்லா தொல்லையும் எழுகின்றன. சாப்பிட நிறைய உணவு இருந்தால், அவை தமது சந்தோஷத்தைக் காட்ட பெரிய கூச்சல் போடும். நான் மலையின் மீது இருந்த போது கூட இத்தகைய அனுபவங்கள் இருந்தன. அங்கு குரங்குகளுக்கு அடிக்கடி உணவளிக்கப் பட்டது.”
தினம் தினம் பகவானுடன்
April 10, 1946
ரமணர் சொன்னார், குரங்குகள் இந்த நிலத்தின் சொந்தக்காரர்கள்
ரமணரின் உதவியாளர் திரு கிருஷ்ணஸ்வாமி, கூடத்தில் குறும்புத்தனம் செய்தோ அல்லது பழங்களைத் திருடியோ அமர்க்களம் செய்த குரங்குகளை அடிப்பார். ஒருமுறை பகவான் அவரிடம் சொன்னார், “உங்களால் குரங்குகள் அடிக்கப் படவில்லை. நான் தான் அடிக்கப்படுகிறேன். வேதனை என்னுடையது தான். சில பக்தர்கள் குரங்குகளைப் பற்றியும், அவை செய்த தொந்தரவுகளைப் பற்றியும் குறை சொன்ன போது, பகவான் சொன்னார், “இந்த இடமெல்லாம் ஒரு காலத்தில் குரங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்த காடாக இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு இந்த நிலம் அவற்றிர்க்கு இயல்பான வாழ்விடமாக இருந்து வந்துள்ளது. நாம் தான் அத்துமீறிகள், அவர்கள் இடத்தில் புகுந்தவர்கள். குறை சொல்வது நியாயமா? கொஞ்சம் சிரமத்தை ஏன் பொறுத்துக் கொள்ளக் கூடாது?”
ரோடா மக்கைவர்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 126
குரங்குகள் புத்திசாலி
பகவான் குரங்குகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். “அவை கூடுகள் கட்டுவதில்லை. பொருட்களை சேகரிப்பதில்லை. எது கிடைக்கிறதோ, அதைச் சாப்பிட்டு, இரவு வந்ததும் மரங்களில் உட்கார்ந்துக் கொள்ளும். அவை சந்தாஷமாக இருக்கின்றன. அவற்றின் அமைப்பு முறை, அரசர்கள், சட்ட விதிகள், ஒழுங்கு முறை விதிகள், கொஞ்சம் இவற்றைப் பற்றி நான் தெரிந்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் பூரணமாகவும் நல்ல ஏற்பாடாகவும் உள்ளது. அவற்றிர்க்கெல்லாம் பின்னால் எவ்வளவு அறிவு! குரங்குகளுக்கு தவம் செய்வதைப் பற்றி கூட தெரியும் என்று நான் அறிவேன். குரங்கொன்று ஒரு குரங்கு கும்பலால் ஒடுக்கப்பட்டு கொடுமையாக நடத்தப்பட்டது. அதனால், அது காட்டுக்குள் சில நாட்கள் சென்று, தவம் செய்து, வலிமை பெற்று திரும்பி வந்தது. வந்து ஒரு மரக்கிளையின் மேல் அமர்ந்து அதை குலுக்கிய போது, இந்த குரங்கை முன்பு கொடுமைப்படுத்தி, இதன் மேல் தம் உயிருக்கு பயந்த குரங்குகள், இதனெதிரில் நடுங்கி நின்றன. ஆமாம்! தவத்தைப் பற்றி குரங்குகளுக்கு நன்றாகத் தெரியும் என்று நான் தெளிவாக அறிகிறேன்.”
தினம் தினம் பகவானுடன்
Feb. 26, 1946
அணில்கள் சேகரிப்பதில்லை
ஒருமுறை ஒரு அணில் ரமணரிடம் வந்தது. அவர் வழக்கம் போல அதற்கு முந்திரிபருப்பு துண்டுளை உண்பித்துக் கொண்டிருந்தார். ரமணர் என்னிடம் திரும்பி, “ஷ்ராப் நேற்று கொஞ்சம் முந்திரிபருப்பு அனுப்பி, ‘அவற்றை எனது அறிவுக்கூர்மையற்ற நண்பர்களுக்காக அனுப்பியிருப்பதாக சொன்னார்'”, என்று தெரிவித்தார். நான் சொன்னேன், “ஒருவேளை நாங்கள் அணில்களை அறிவற்ற ஜந்துக்கள் என்று சொல்வதை பகவான் ஆக்ஷேபிக்கலாம்.” பகவான் பதிலளித்தார், “அவை என்னுடன் தொடர்பு கொண்டு பேசுகின்றன. சில சமயம், நான் ஒரு சிறு தூக்கத்தில் இருப்பேன். அவை வந்து, மென்மையாக என் விரல் நுனிகளைக் கடித்து, தாங்கள் இருப்பதைத் தெரிவிக்கும். அது மட்டுமில்லாமல், அணில்களுக்கு தமக்கே உரிய மொழிகள் உள்ளன. இந்த அணில்களைப் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அவை தமக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சாப்பிடும். மற்றவற்றை விட்டு விடும். ஆனால் எலி அப்படி இல்லை. அது தான் கண்டுபிடிப்பதையெல்லாம் தனது எலித்துளையில் சேர்த்து வைத்துக் கொள்ளும்.” இவ்வாறு ரமணர் சொன்னார்.
நான் சொன்னேன், “ஒருவேளை, வருங்காலத்திற்காக திட்டமிடாமலும் சேகரித்து வைத்துக் கொள்ளாததாலும், அணில் எலியை விட குறைந்த அறிவு கொண்டது என்று சொல்லலாமா?” அதற்கு பகவான் சொன்னார், “ஆமாம், ஆமாம்! இப்படி கேடுகெட்ட விதத்தில் வாழ்வதை நாம் மிகுந்த அறிவு என்று எண்ணுகிறோம். எவ்வளவு மிருகங்களும் பறவைகளூம் இந்த உலகில் திட்டமிடாமலும், சேர்த்து வைத்துக் கொள்ளாமலும் வாழ்கின்றன என்று பாருங்கள்! அவையல்லாம், என்ன, இறக்கின்றனவா?”
தினம் தினம் பகவானுடன்
Feb. 26, 1946
ரமணர் மனிதர்களுடன் பேசுவது போல மிருகங்களுடன் பேசினார்
ஒரு நாள், சுமார் 5 மணிக்கு, நானும் பார்த்தசாரதியும் ஆஸ்ரமத்தினுள் நுழைந்த போது, நாங்கள் வெராண்டாவில், ரதிலாலும் அவரது வேலையாளும் உட்பட சுமார் ஐம்பது பேர், உட்கார்ந்திருப்பதைக் கண்டோம். பகவான் தமது மஞ்சத்தில் இல்லை. எனவே, சுமார் 10 நிமிஷத்திற்கு காத்திருந்து, பின்னும் பகவான் தம்மிடத்திற்கு வராததால், அவர் வரும் வரையில், மாட்டுக் கொட்டிலுக்கும் ஆஸ்ரமத்தின் மற்ற இடங்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வரலாம், என்று பார்த்தசாரதி யோசனை சொன்னார்.
எங்கள் சிறிய சுற்றுலாவிலிருந்து நாங்கள் திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, ஒரு குழந்தை போன்ற குரல் தமிழில், “சீ! அசத்தே!” என்று சொல்வதைக் கேட்டோம். பிறகு நாங்கள் சமையல் அறையின் பவவித செடிகளுக்கு நடுவில், இலைகளில் அசைவுகள் இருப்பதை நோக்கினோம். கூர்ந்து கவனித்த போது, அங்கு ஒரு சிறிய ஆடு, ஒரு சிறிய குரங்கு, ஒரு அணில், மற்றும் ரமணரும் இருப்பதைக் கண்டோம். ரமணர் கால்களை மார்பு வரை மடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவர் தமது இடது கையில் ஒரு காகிதப் பை வைத்திருந்தார். அதிலிருந்து அவர் தமது வலது கையால் வேர்க்கடலையை எடுத்து ஆடு, குரங்கு, அணில், மற்றும் தமக்கே கூட முறை முறையாக உண்பித்துக் கொண்டிருந்தார். அவரது முந்தைய சொற்கள், அணிலுக்கு அளிக்கப்பட்ட வேர்க்கடலையை பறித்து எடுத்துக் கொள்ள முயன்ற குரங்கிடம் சொல்லப் பட்டது போல தோன்றியது. நாங்கள் பார்த்துக் கொண்டே நின்ற போது, நாண்டு தோழர்களும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு அருகருகில் இருந்தது மனதை மிகவும் தொட்டது. நால்வரையும், அவர்களது ரூபங்கள் வெவ்வேறாக இருந்தாலும், சிறந்த நண்பர்களாகத் தான் பார்த்தோம். அந்த காட்சியைப் பார்த்து என் மனதில் தோன்றிய உணர்ச்சிகளை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.
கடைசியில், வேர்க்கடலையெல்லாம் தீர்ந்து விட்டன. ரமணர் காகிதத்தைத் தூக்கியெறிந்து விட்டு, “போங்கடா!” என்று ஒருவர் தம் பேரக்குழந்தைகளிடம் பேசுவது போல சொன்னார். அந்த ஆடு, குரங்கு, அணில் எல்லாம் அகன்றன. ரமணரும் செல்ல முனைந்தார். தெய்வீகத்தின் வழியில் வரம்பு மீறி போன குற்ற உணர்வுடன், ஆனால் அதற்காக வருத்தப்படாமல், நாங்கள் விரைவாக அந்த இடத்தை விட்டு அகன்றோம்.
T.R.A. Narayana
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 139
மகரிஷி எல்லாம் அறிந்திருந்தார்
மகரிஷிக்கு எல்லாம் தெரிந்திருந்தது. அவருக்கு மிருகங்களின் மொழி தெரிந்தது. அவர் அவற்றின் குறைகளை கேட்டார். பசுவோ, நாயோ, காகமோ அல்லது குரங்கோ, அவர் எல்லா உயிர்களையும், ஒரே மாதிரி நடத்தினார். பிச்சைக்காரரோ, கோடீஸ்வரரோ, அவர் கண்களில் எல்லோரும் சமமாக இருந்தனர். அவர் திருவண்ணாமலையை விட்டு அகலவே இல்லை. அவர் வெளியில் சென்று மத பிரசங்கம் செய்ய மறுத்தார். அவர் சொன்னார், நான் ஒரு ஞானியானால், நான் எல்லோரையும் ஒரு ஞானியாகத்தான் கருதுகிறேன். அளிப்பதற்கு என்ன இருக்கிறது?” அவர் எல்லோரையும் தாமே என்று கருதினார். ஒருவரையும் நிலை மாற்ற அவர் முயலவில்லை. ஒருவர் அவரது முன்னிலையில் தானாகவே மாறுதல் அடைந்தார்.
திரு மொரார்ஜி தேசாய் (இந்தியாவின் முந்தைய பிரதமர்)
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 139
மிருகங்களிடமிருந்து கற்றுக் கொள்ளல்
நான் ஆறு வயதில் பகவானிடமிருந்து எனது முதல் உபதேசம் பெற்றேன். ஸ்கந்தாஸ்ரமத்தில் நொண்டியான ஒரு குரங்கிற்காக, ஒரு தட்டில், பழங்களும், இனிப்புகளும் வைக்கப் பட்டிருந்தன. வேறு யாரும் இல்லாத போது, நான் ஒரு இனிப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். அப்போது திடீரென்று அந்த குரங்கு அங்கு தோன்றியது. நொண்டியவாறே என்னிடம் வந்து என் முகத்தில் ஒரு அறை கொடுத்து விட்டு, தட்டைப் பிடித்துக் கொண்டது. பகவான் அங்கு வந்து என்னிடம் சொன்னார், “இது உனக்கு ஒரு பாடம். மற்றவர்களின் பொருட்களை விரும்பக்கூடாது என்று புரிந்துக் கொள்”, என்றார். நான் பல காலம் கழித்து ஆஸ்ரமத்தின் தலைவரான பிறகு கூட, இந்த உபதேசத்தின் ஆழ்ந்த பொருளை முற்றிலும் புரிந்துக் கொண்டேன்.
ஸ்வாமி ரமணானந்த சரஸ்வதி (முன்னர் T.N. வெங்கடராமன்)
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 162
ரமணருக்கு மிருகங்களின் மீது இருந்த அன்பு
பகவானின் ஜயந்தி போன்ற பெரிய தினங்களில், ரமணர் என்னைக் கேட்பார், “குரங்குகளை கவனித்துக் கொண்டாயா?” நான் நிறைய உணவை எடுத்துச் சென்று, பாறைகளின் மீது பரப்புவேன். குரங்குகள் சாப்பிட்டு முடித்ததும், அவை பேசாமல், திருப்தியுடன் படுத்துக் கொள்ளும். பகவான் சொல்வார், “பார்! இப்போது அவையெல்லாம் எவ்வளவு நன்றாக நடந்துக் கொள்கின்றன! இப்போது குறும்புகள் ஒன்றும் செய்வதில்லை.”
ஒரு முறை என் தலையணை அடியில், ஒரு பாம்பு இருந்தது. நான் இதை பகவானிடம் சொன்ன போது, அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், “எல்லாம் சரி தான்! வேறு என்ன உனக்கு நல்ல படுக்கையாகும்?” அவர் குறிப்பிட்டது என்னவென்றால், வைகுண்டவாசர் என்ற பெயர் விஷ்ணுவின் பல பெயர்களில் ஒன்றாகும். விஷ்ணு ஆதிசேஷன் என்ற தெய்வீகப் பாம்பை தன் படுக்கையாகக் கொண்டுள்ளார். இதைக் குறித்து தான் அவர் சிரித்தார். அவருடைய நகைச்சுவை உணர்வு மிகவும் சிறந்ததாகும்.
வைகுண்ட வாசர்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 200
மிருகங்களிடம் ஆன்ம பக்குவம்
ரமணர் ஒரு சாதாரணமான புறத்தோற்றம் அளித்தாலும், அவரால் தம்மை சந்திக்க வந்தவர்களின் ஆன்ம பக்குவத்தையும் தகுதியையும் காண முடிந்தது. மேலும் அவர் தகுதியற்றவர்களுக்கு அறிவுரை அளிக்க மாட்டார்.
தம்மைச் சுற்றி இருந்தவர்களின் ஆன்ம முதிர்ச்சியை அவரால் உணர முடிந்தது. மேலும் அவரால் இதை மிருகங்களிடமும் தெளிந்தறிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு நாள், ரமணரின் அன்னை கேட்டார், “ஏன் அந்த நாய்க்கு எப்போதும் உன் மடியிலேயே இருக்கப் பிடிக்கிறது?” ரமணர் என்னிடம் திரும்பிச் சொன்னார், “இந்த நாய் எப்போதும் நிலையான ஆன்ம மோனநிலையில் உள்ளது. ஒரு பெரும் ஆன்மா நாய் வடிவில் வந்துள்ளது. இது அம்மாவுக்குத் தெரியாது.”
வேளச்சேரி ரங்க அய்யர்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 44
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே உணவு
பகவான், பொருட்களை வீணாக்காமல் இருப்பது மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று உறுதியாகச் சொல்லி வந்தார். அவர் கடவுளின் பரிசுகளை தூக்கி எறிய அனுமதிக்க மாட்டார். மிச்சம் இருக்கும் உணவைப் பிச்சைக்காரர்களுக்குக் கொடுப்பதைப் பொருத்தவரை, அது முடியாததாகி விட்டது. ஏனெனில், பகவான், மற்ற எல்லோருக்கும் அளிக்கப்படும் அதே உணவு தான் பிச்சைக்காரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும், கீழ்தரமான உணவு அல்ல, என்று வற்புறுத்தினார். நாய்களுக்குக் கூட பொது உணவிலிருந்து தான் உணவளிக்கப் பட்டது.
சுந்தரம் (சாது த்ரிவேணகிரி)
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 67
அதிர்ஷ்டமான நாய்க்கு ரமணரின் அருள் கிடைத்தது
ஜேக்கி என்னும் ஒரு நாய், ஒரு சமயம் நோயுற்றது. ரமணர் அதற்காக கூடத்தில் ஒரு மென்மையான படுக்கை தயார் செய்து, அதை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார். சில நாட்கள் கழித்து, ஜேக்கியின் நோய் மிகவும் அதிகமாகியது. ஆனால், பகவானின் கவனிப்பில் ஒரு வித்தியாசமும் இல்லை. கடைசியில், அது அவர் கைகளில் காலமாகியது. அது ஆஸ்ரமத்தின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அடக்கம் செய்யப் பட்டது. அதன் மேல் ஒரு சிறிய நினைவுச் சின்னமும் உள்ளது.
ஒரு பேராசிரியர்
Prof. V.B. Athavale
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 105
காகத்திற்கு முக்தி கிடைக்கிறது
டி. ஆர். கனகம்மாள் இவ்வாறு சொன்னார்.
ஒரு நாள், ரமணர் வராண்டாவில், சில பக்தர்களுடன் அமர்ந்திருந்தார். திடீரென்று காயமடைந்த ஒரு காகம், மிகுந்த வேகத்தில் பறந்து வந்து, அவரது காலடியில் விழுந்தது. ரமணர் அதைத் தூக்கியெடுத்து, மென்மையாக தடவிக் கொடுத்தார். காகம் அவர் கையில் காலமானது. ரமணர் சொன்னார், “ஒரு சித்த புருஷர் இன்று தமது உடலை விட்டிருக்கிறார்.” இப்படி சொல்லி, அவர் அந்த காகத்தின் அடக்கத்திற்கு முறைப்பாடு தெரிவித்தார். இந்த காட்சியைக் கண்ட திரு பிரணவானந்தாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
டி.ஆர். கனகம்மாள்
S. நரசிம்மன் (ஸ்வாமி பிரணவானந்தா)
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 130
சிலர் கஷ்டமான விதத்தில் கற்கின்றனர்
ஒருமுறை, ஒரு வேட்டைக்காரன், மலையின் மேல், ஒரு மயிலை கொல்ல இருந்தான். மகரிஷி அவனைத் தடுத்த போது, அவன் அவரது சொற்களை அலட்சியம் செய்து, “போ சாமி! உன்னை யார் கேட்டாங்க!” என்று சொல்லி விட்டான். அடுத்த நாள், அவன் ஒரு விபத்தில் சிக்கி, அவன் கையையே வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகத் தெரிந்தது. அதைப் பற்றி பேசியபோது, மகரிஷி சொன்னார், “நான் அவனுக்காக பரிதாபப்படுகிறேன். ஆனால் என்ன செய்வது? சில ஜனங்கள், கற்றுக் கொள்வதற்கு முன்பு, இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ஈடுபட வேண்டியிருக்கிறது.”
T.V. Kapali Sastri
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 184
ஆன்ம பக்குவமடைந்த மிருகங்களும், பக்குவமடையாதவையும்
ஆஸ்ரமத்தில் நான்கு நாய்கள் இருந்தன. பகவான், தாம் சாப்பிடாத உணவு எதையும் இந்த நாய்கள் சாப்பிடாது” என்று சொன்னார். பண்டிதர் திரு ரங்காச்சாரி, அதைச் சோதிக்க விழைந்தார். நாய்களின் முன்னால் சிறிது உணவைப் பரப்பி வைத்தார். அவை உணவை தொடவில்லை. சிறிது நேரம் கழித்து, பகவான் மிகச் சிறிய அளவு உணவை தம் வாயில் போட்டுக்கொண்டார். உடனே, நாய்கள் பாய்ந்து சென்று உணவைச் சாப்பிட்டன.
பிறகு, ஒருவர் இரண்டு மயில்களை, அவற்றின் கண்களைக் கட்டி, ஆஸ்ரமத்திற்கு கொண்டு வந்தார். மகரிஷியின் முன்னிலையில் அவற்றை அவிழ்ந்து விட்டவுடன், அவை அங்கிருந்து பறந்து சென்று விட்டன. அவை மறுபடியும் கொண்டு வரப்பட்டன. பிறகும் அவை பறந்து சென்று விட்டன. பகவான் சொன்னார், “இந்த மயில்களை இங்கு வைத்துக் கொள்ள முயல்வதில் பிரயோஜனமில்லை. இந்த நாய்களைப் போல அவை மனப்பக்குவம் அடையவில்லை,” என்று சொன்னார். எவ்வளவு முயற்சி செய்தும் அவை ஒரு நிமிஷத்திற்கு கூட அங்கு தங்கவில்லை.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 119, 120.
ரமணரும் கீரிப்பிள்ளையும்
திரு க்ரான்ட் டப் (Mr. Grant Duff), ஒரு கீரிப்பிள்ளைக்கும் ரமணருக்கும் பற்றிய சம்பவம் ஏதாவது இருந்ததா என்று கேட்டார். ரமணர் சொன்னார், “ஆமாம். ஒரு ஜயந்தி தினமன்று, நான் மலை மேல், ஸ்கந்தாஸ்ரமத்தில் வசித்துக் கொண்டிருந்தேன். நகரத்திலிருந்து, கணக்கற்ற பார்வையாளர்கள் மலை மேல் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது, சாதாரண அளவை விட பெரியதானதும், சாம்பல் நிறமில்லாததும், வாலில் கரும்புள்ளி இல்லாததுமான, பொன்னிறமான ஒரு கீரிப்பிள்ளை, அஞ்சாமல் கூட்டத்தைக் கடந்து சென்றது. ஜனங்கள், அது கூட்டத்தில் ஒருவரின், பழக்கப்படுத்தப்பட்ட கீரிப்பிள்ளை என்று நினைத்தனர்.
இந்த மிருகம், நேராக, விரூபாக்ஷ குகைக்கு அருகில் குளித்துக் கொண்டிருந்த பழனிசாமியிடன் சென்றது. அவர் அதை தடவிக் கொடுத்தார். அது அவரை பின்தொடர்ந்து குகைக்குள் சென்று, எல்லா மூலை முடுக்குகளையும் மேற்பார்வை செய்து விட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றது. கும்பலுடன் சேர்ந்துக்கொண்டு ஸ்கந்தாஸ்ரமத்திற்கு சென்றது. நான் அதைப் பார்த்தேன். எல்லோரும் அதன் வசீகர தோற்றத்தையும், பயமில்லாத நடத்தையையும் கண்டு வியந்தனர். அது என்னிடம் வந்து, என் மடியில் ஏறிக்கொண்டு அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டது. பிறகு எழுந்து, சுற்றிப் பார்த்து விட்டு, இறங்கியது. அது எல்லா இடத்திற்கும் சென்றது. அறியாத பார்வையாளர்களாலோ அல்லது மயில்களாலோ தீங்கு செய்யப்படாமல் இருக்க, நான் அதைப் பின் தொடர்ந்தேன். அந்த இடத்தைச் சார்ந்த இரண்டு மயில்கள் அதை சற்று ஆர்வத்துடன் பார்த்தன. ஆனால் அந்த கீரிப்பிள்ளை கலங்காமல், இடம் இடமாக சென்று, பிறகு பாறைகளின் நடுவில் மறைந்தது.”
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 84
ரமணர் எதிர்களையும் நண்பர்களாக மாற்றினார்
மற்றொரு விசித்திரமான நிகழ்ச்சி என்னவென்றால், ஆஸ்ரமத்தில் இரண்டு மயில்கள் தமது தோகையை ஒரு விசிறி போல் விரித்தபடி நடமாடிக் கொண்டிருக்கும். அவற்றுடன் ஒரு நாகப்பாம்பும் படமெடுத்தபடி நடுவில் இங்கும் அங்கும் சென்று இந்த பொழுதுபோக்கில் கலந்துக் கொண்டிருக்கும். இப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாபெரும் ஞானி திரு ரமண மகரிஷியின் சூழ்நிலையில் இத்தகைய அற்புத, அதிசய நிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் கேட்க மிகுந்த வியப்பு உண்டாகிறது. இவற்றை எவரும் வேறெங்கும் கேள்விப்பட்டதே இல்லை.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 324
எப்போதும் எல்ல உயிர்களுக்கும் அன்பும், சமமான கருணையும்
நான் பாபா ராம் தாஸை பார்க்க பங்களூருக்கு சென்றேன். பகவான் ரமணர் தம் உடலை விட்டு விட்டார் என்று தெரிவிக்கப்பட்ட பின், நான் திருவண்ணாமலைக்குச் சென்றேன். ஆயிரக்கணக்கான கூட்டங்கள் ஏற்கனவே வர ஆரம்பித்திருந்தன. எனவே, நான் மலை மேல் ஏறி, குகைகள் ஒன்றிர்க்குள் சென்று, அங்கு 5 நாட்கள் தங்கினேன். நான் இறங்கி கீழே வந்தபோது, கூட்டம் கலைந்து போயிருந்தது. பகவானைக் கடைசியாக கண்ட ஒரு பக்தரிடம், ” ரமணர் சொன்ன கடைசி சொற்கள் என்ன என்று கேட்டேன். பக்தர் பதிலளித்தார். அவர் உடலை விட்டு பிரிந்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மயில் ஒரு சுவற்றின் மேல் பறந்து போய், வீறிட்டு கத்த ஆரம்பித்தது. ரமணர் தமது உதவியாளரைக் கேட்டார், “யாராவது மயிலுக்கு உணவளித்தார்களா?” இவை தான் அவரது கடைசி சொற்கள்.”
ராபெர்ட் ஆடம்ஸ்
மகரிஷியுடன் நேருக்கு நேராக, Item 163
, பகவான் திரு ரமண மகரிஷிமனிதர்களுடன் இருந்த மாதிரியே, மிருகங்களோடும் இப்படிப்பட்ட மேன்மையான, தெய்வீக நட்பும் அன்பும் கொண்டு விளங்கினார். இன்றும் எங்கும் விளங்கி வருகிறார்!