Forty Verses On Reality
உள்ளது நாற்பது - அனுபந்தம்
உபதேச உந்தியார்

உள்ளது நாற்பது – கலிவெண்பா

 திரு ரமண மகரிஷி

(கலிவெண்பா)

மங்கலம்

உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்வாயே யுள்ளே*

பொருள்:
உள்ளதாகிய மெய்ப்பொருள் இருந்தாலன்றி இருக்கிறோம் என்னும் இருப்புணர்வு தோன்றுமா? அது எண்ணங்களற்ற இதயத்தில் இருப்பதால், இதயம் என்று கூறப்படும் அந்த உண்மைப் பொருளைத் தியானிப்பது எப்படி? அது உள்ளத்தில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நாம் இதயத்தில் இருப்பதே அதைத் தியானிப்பதாகும் என்று உணர்வாயாக.

மரணபய மிக்குளவம் மக்களர ணாக
மரணபவ மில்லா மகேசன் சரணமே
சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
சார்வரோ சாவா தவர்நித்தர் பார்வைசேர்

பொருள்:
மனத்துள்ளே மரணபயம் தீவிரமாக உள்ளவர்கள் மரண பயம் இல்லாத மகேசனிடம் அடைக்கலம் புகுந்து பந்த பாசங்களும், ஜீவபாவமும் ஒழிந்து சாவாத்தன்மை அடைந்து ஜீவன் முக்தர்களாவர். பிறகு அவர்கள் மரணத்தைப்பற்றி நினைப்பார்களோ? (இல்லையென்க).

நூல்

1.
நாமுலகங் காண்டலா னானாவாஞ் சத்தியுள
வோர்முதலை யொப்ப லொருதலையே நாமவுருச்
சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமு மாரொளியு
மத்தனையுந் தானா மவனுலகு கர்த்தனுயிர்

பொருள்:
கண்களுக்குப் புலப்படும் இந்த உலகத்தை நாம் காண்பதால் பற்பல சக்தியைத் தன்னிடம் உடைய ஒரு முதற்பொருளை ஒப்புக் கொள்வது எல்லோருக்கும் சம்மதம். உலகச் சித்திரங்களும் அவற்றைக் காணும் ஜீவனும், சித்திரங்களுக்கு ஆதாரமான திரையும் அவற்றைப் பிரகாசப்படுத்தும் சைதன்ய ஒளியும் இவை அனைத்துமாக விளங்குபவன் தான் என்னும் ஆத்மாவாகிய அந்த முதற் பொருளாகும்.

2.
மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலே
மும்முதலாய் நிற்குமென்று மும்முதலு மும்முதலே
யென்னலகங் கார மிருக்குமட்டே யான்கெட்டுத்
தன்னிலையி னிற்ற றலையாகுங் கொன்னே

பொருள்:
எந்த மதமாயினும் முதலில் மூன்று தனிப்பொருள்களை (உலகு, கடவுள், உயிர்) ஏற்றுக் கொள்ளும். பிறகு விசாரித்து இப்படி மூன்று தனிப்பொருள்களாகத் தோன்றுவது ஒரு முதற்பொருள்தான் என்றும், அப்படி அல்ல; எப்போதும் இந்த மூன்று பொருள்களும் தனி முதற் பொருள்களே என்று கூறுவதும், அகங்காரம் இருக்கும் வரையில்தான். அகங்காரத்தை அழித்து சொரூப நிலையில் நிற்பதே தலைசிறந்த நிலையாகும்.

3.
உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென்
றுலகுசுக மன்றென் றுரைத்தெ னுலகுவிட்டுத்
தன்னையோர்ந் தொன்றிரண்டு தானற்று நானற்ற
வந்நிலையெல் லார்க்குமொப் பாமூனே துன்னும்

பொருள்:
குளறுபடியான இந்த உலகம் சத்தியம் அல்ல; அது பொய்த் தோற்றம், உலகு அறிவுள்ளது; அல்ல ஜடம் என்றும், உலகு இன்பமானது; அல்ல துக்கமானது என்றும் இப்படி வீண் வாதம் புரிவதால் பயன் என்ன? உலகு இயல்பைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை விட்டு தன் சொரூபத்தை விசாரித்து அறிந்து ஜீவனும், பரமும் ஒன்றே என்ற அத்துவித பாவமும், இரண்டே என்ற துவித பாவமும் நீங்கி நானென்னும் ஜீவபாவமற்று விளங்கும் அந்த உண்மை நிலையானது அனைவருக்கும் ஒப்பக் கூடியதாகும்.

4.
உருவந்தா னாயி னுலகுபர மற்றா
முருவந்தா னன்றே லுவற்றி னுருவத்தைக்
கண்ணுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ
கண்ணதுதா னந்தமிலாக் கண்ணாமே யெண்ணில்

பொருள்:
மாமிச பிண்டமாகிய தேகமே நான் என்னும் உருவமானால், உலகமும் கடவுளும் அவ்வாறே உருவம் உள்ளவராவர். தான் தேகம் அல்ல என்று அறிவானாகில் உலகு, உயிர்கள், கடவுள் ஆகிய உருவங்களைக் காணக் கூடியவன் எவன்? காண்பது எப்படி? கண்ணில்லாமல் காட்சிகள் தோன்றுவது உண்டோ? பர, உயிர்களைப் பார்க்கும் அந்தக் கண்தான் எல்லையில்லா ஞானக் கண்ணாகிய ஆன்மாவாக விளங்குகிறது.

5.
உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து
முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு முடலன்றி
யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக்
கண்டா ருளரோ கழறுவாய் கண்ட

பொருள்:
ஆராயுங்கால் சரீரம் என்பது ஐந்து கோசங்கள் அடங்கிய உருவமாகும். ஆகையால் உடல் என்ற பெயரில் ஐந்து கோசங்களும் அடங்கும். தேகம் இல்லாத நிலையில் உலகத் தோற்றம் இருக்க முடியுமோ? நான் என்று அபிமானிக்கும் தேக சம்பந்தமில்லாமல் இந்த உலகத்தைக் கண்டேன் என்று சொல்லக்கூடியவர் உள்ளனரோ? சொல்வாயாக.

6.
உலகைம் புலன்க ளுருவேறன் றவ்வைம்
புலனைம் பொறிக்குப் புலனா முலகைமன
மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை
யன்றியுல குண்டோ வறைநேரே நின்ற

பொருள்:
கண்ணால் காணும் இந்த உலகம் ஐந்து விதமான விஷய உணர்ச்சிகளின் உருவமேயாகும். ஸ்பரிசம், சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்து உணர்ச்சிகளும் ஐந்து இந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவிகளுக்கு அறியக்கூடிய விஷயங்களாகும். ஐம்புல விஷயங்களின் உருவமாகிய உலகத்தை, மனம் ஒன்றே ஐந்து இந்திரியங்களின் வழியாக அறிந்து கொள்வதினால் மனத்தைத் தவிர அதற்கன்னியமாக உலகம் உள்ளதோ? சொல்.

7.
உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு
முலகறிவு தன்னா லொளிரு முலகறிவு
தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும்
பூன்றமா மஃதே பொருளாமா லேன்றதாம்

பொருள்:
நம் முன் காண்கின்ற உலகத் தோற்றமும் அதைக் காணும் மனமும், ஒன்றாகச் சேர்ந்து தோன்றி ஒடுங்கினாலும், உலகமானது அறிவினால் தான் பிரகாசிக்கிறது. உலகமும் அதைக் காணும் மனமும், தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் இடம் அளித்து தோன்றி மறையாமல் பிரகாசிப்பது எதுவோ, அதுவே நித்திய, பரிபூரண பரம்பொருள் ஆகும்.

8.
எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி
லப்பொருளைக் காண்வழிய தாயினுமம் மெய்ப்பொருளி
னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே
யுண்மையிற் காண லுணர்ந்திடுக விண்மை

பொருள்:
ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்தப் பெயரை வைத்து எந்த வடிவத்தில் துதித்து வழிபட்டாலும், அது நாமரூபமற்ற பரிபூரண வஸ்துவைக் காண்பதற்கு உரிய மார்க்கமாகும். ஆயினும் தனது உண்மை இயல்பை உள்ளபடி அறிந்து அந்த சத்தியப் பொருளின் சொரூபத்தில் ஒன்றுபட்டு ஒன்றாய் இருத்தலே உண்மையான தரிசனம் என்று உணர்வாயாக.

9.
இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி
யிருப்பவா மவ்வொன்றே தென்று கருத்தினுட்
கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை
கண்டார் கலங்காரே காணிருள்போன் மண்டும்

பொருள்:
ஆகாச நீலநிறம் போன்ற உண்மையற்ற பிறப்பு, இறப்பு, நன்மை-தீமை, சுகம்-துக்கம் போன்ற இரட்டைகளும். ஞாதுரு-ஞான-ஞேயம், காண்பான்-காட்சி-காணப்படு பொருள் போன்ற முப்புடிகளும் எப்போதும், அகங்காரமென்னும் ஒன்றை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு தான் நிற்கின்றன. அதன் உண்மை என்னவென்று, மனதைத் தனக்குள் திருப்பி விசாரித்தால் இரட்டைகளும், முப்புடிகளும் நீங்கிவிடும். இவ்வாறு அகங்காரத்தின் அழிவைக் கண்டவரே ஆன்மாவைத் தரிசித்தவராவார். பிறகு அந்த விவேகிகள் இரட்டைகளாலும், முப்புடிகளாலும் கலங்கமாட்டார்கள் என்று அறிவாயாக.

10.
அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்
வறியாமை யின்றாகு மந்த வறிவு
மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை
யறியு மறிவே யறிவா மறிப

பொருள்:
இருளைப் போன்று அமைந்துள்ள அஞ்ஞானத்தைவிட்டு அறிவானது தனித்து நிற்காது. அறிவை விட்டு அஞ்ஞானமும் தனித்து இருக்காது. இவை சேர்ந்தே இருக்கும். அந்த அறிவும், அறியாமையும் யாருக்கு என்று தீர விசாரித்து இவை தோன்றி மறையும் அகந்தையின் எழுச்சிக்கு மூலமாகிய தனது உண்மை சொரூபத்தை உணர்கின்ற அறிவே மெய்யறிவு ஆகும்.

11.
அறிவுறுந் தன்னை யறியா தயலை
யறிவ தறியாமை யன்றி யறிவோ
வறிவயற் காதாரத் தன்னை யறிய
வறிவறி யாமை யறுமே யறவே

பொருள்:
அறியப்படுகின்ற உலகத்தை அறிகின்ற தன்னை விசாரித்து அறியாமல் தனக்கயலாகத் தோன்றும் உலகை அறிவது அஞ்ஞானமன்றி மெய்ஞானமாகுமோ? அறிவிற்கும் அறியாமைக்கும் ஆதாரமாக உள்ள தன்னை விசாரித்து உணரும்போது (ஜீவபோத) அறிவும் அறியாமையும் முழுதுமாக அற்றுப்போகும்.

12.
அறிவறி யாமையு மற்றதறி வாமே
யறியும துண்மையறி வாகா தறிதற்
கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா
னறிவாகும் பாழன் றறிவாய் செறிவாய

பொருள்:
அறிவும் அறியாமையும் அற்ற நிலையே ஞான நிலையாகும். அன்னியத்தை எதிரிட்டறிவது மெய்யறிவாகாது. தான் ஒன்றை அறிவதற்கோ, அறிவிப்பதற்கோ வேறொரு பொருளில்லாமல் தானே பிரகாசிப்பதால் தானாகிய ஆன்மாவே உண்மை அறிவாகும். அது பாழான சூனியம் அல்ல என்று அறிவாயாக.

13.
ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ்
ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே ஞானமாந்
தன்னையன்றி யின்றணிக டாம்பலவும் பொய்மெய்யாம்
பொன்னையன்றி யுண்டோ புகலுடனா னென்னுமத்

பொருள்:
தெளிவும், அழுத்தமும் திடமான சுத்த சைதன்ய ஆத்மாவே உண்மையானது. நானாவாகத் தோற்றங்களை அறியக்கூடிய ஞானம் அஞ்ஞானமாகும். தோன்றும் அஞ்ஞானமும் பொய்யேயாகும். ஞானமே சொரூபமாக உள்ள ஆத்மாவை அன்றி வேறாக ஒன்றும் இல்லை. பல நாம ரூபங்களுடன் கூடிய ஆபரணங்கள் உண்மையான பொன்னைவிட்டுத் தனித்து இருக்க முடியுமோ? சொல்!

14.
தன்மையுண்டேன் முன்னிலைப டர்க்கைக டாமுளவாந்
தன்மையி னுண்மையைத் தானாய்ந்து தன்மையறின்
முன்னிலைப டர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந்
தன்மையே தன்னிலைமை தானிதமு மன்னும்

பொருள்:
உடம்பே நான் என்னும் (தேகாத்மபாவ) தன்மை இருக்குமானால் நீ என்ற முன்னிலையும்; அவன், அவள், அது என்ற படர்க்கையும் உள்ளனவாம். தன்மையாகிய நான் என்பது எது என்று ஆராய்ந்து ஜீவபோதம் அழிந்துபோனால் முன்னிலை படர்க்கையாகிய, நீ, அவன், அவள், அது என்ற பேத பாவமும் நாசமுற்று எங்கும் நிறைந்த ஏக சொரூபமான தன்மை இயல்பே தனது உண்மை நிலைமை ஆக விளங்கும்.

15.
நிகழ்வினைப் பற்றி யிறப்பெதிர்வு நிற்ப
நிகழ்கா லவையு நிகழ்வே நிகழ்வொன்றே
யின்றுண்மை தேரா திறப்பெதிர்வு தேரவுன
லொன்றின்றி யெண்ண வுனலுணர நின்றபொருள்

பொருள்:
எப்போதும் உள்ள நிகழ்காலத்தைப் பற்றிக் கொண்டுதான் இறந்த காலமும், எதிர்காலமும் நிற்கின்றன. இறந்த காலமும், எதிர்காலமும் தோன்றி நிகழும் காலத்தில் அவையும் நிகழ்காலமே. எனவே நிகழ்காலத்தின் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் இறந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் ஆராய முயல்வது, ஒன்று என்ற எண்ணை விட்டு, மற்ற எண்களை எண்ணுவது போலாகும்.

16.
நாமன்றி நாளேது நாடேது நாடுங்கா
னாமுடம்பே னாணாட்டு ணாம்படுவ நாமுடம்போ
நாமின்றன் றென்றுமொன்று நாடிங்கங் கெங்குமொன்றா
னாமுண்டு நாணாடி னாமூன மாமிவ்

பொருள்:
தெளிவாக விளங்குகின்ற நமது உண்மை எதுவென்று தீர விசாரித்துப் பார்த்தால் நமக்கன்னியமாகக் கால தேசமென்பது ஏது? நாம் என்பது உடம்பென்றால், காலத்தினாலும் தேசத்தினாலும் நாமும் கட்டுப்படுவோம். நாம் உடல் அல்லவே. நாம் இன்றும் அன்றும் என்றும் ஏக சொரூபமாக இருக்கிறோம். இங்கேயும், அங்கேயும், எங்கேயும் ஒரே நிலையாக நாமாகிய ஞான சொரூபமே இருப்பதையும்; காலமோ, தேசமோ இல்லாத நாமேயுள்ளோம் என்பதையும் அறிந்துகொள்.

17.
உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க்
குடலளவே நான்ற னுணரார்க் குடலுள்ளே
தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே
யின்னவர்தம் பேதமென வெண்ணுவாய் முன்னாம்

பொருள்:
மாமிசப் பொதியாகிய உடம்பு தன்னை உணராத அஞ்ஞானிக்கும், தன்னை உணர்ந்த ஞானிக்கும் நானாகும். அஞ்ஞானிக்கு நான் என்னும் சொல்லின் உணர்வு உடலின் அளவேயாகும். உடலுள்ளே தன்னை உணர்ந்த ஞானிக்கு நான் என்னும் ஆன்மா எல்லையற்று (உடம்பையும் தன்னுள்கொண்டு) எங்கும் தன்மயமாய்ப் பிரகாசிக்கும். இருவருக்கும் உள்ள வேறுபாடு இதுவே என்று அறிவாயாக.

18.
உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க்
குலகளவா முண்மை யுணரார்க் குலகினுக்
காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை
யீதாகும் பேதமிவர்க் கெண்ணுக பேத

பொருள்:
கண்முன் காணப்படும் உலகம் உண்மையை உணராத அஞ்ஞானிக்கும், உண்மையை உணர்ந்த ஞானிக்கும் சத்தியமாகும். அஞ்ஞானிக்கு மெய்ப்பொருளானது காணக் கூடிய உலகின் அளவே ஆகும். ஞானிக்கு சத்தியச் சொரூபமானது உலகின் தோற்ற ஒடுக்கங்களுக்கு ஆதார வஸ்துவாய், நாமரூபமில்லாத அகண்ட ஜோதியாய்ப் பிரகாசிக்கும். ஞானிக்கும், அஞ்ஞானிக்கும் உள்ள பேதம் இதுவாகும் என்று அறிவாயாக.

19.
விதிமதி மூல விவேக மிலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் விதிமதிகட்
கோர்முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்றுவாய் சார்பவை

பொருள்:
பேதமாகிய விதிமதிகள் தோன்றுவதற்கு ஆதாரமாயுள்ள அகங்காரத்தின் உண்மையை அறியாத அஞ்ஞானிகளுக்கே, விதியை மதி வெல்லுமா? மதியை விதி வெல்லுமா? என்ற விவாதங்கள் தோன்றும். இவ்விரண்டுக்கும் ஆதார உண்மையாகிய தனது சொரூபத்தை உணர்ந்தவர், விதி-மதி இரண்டையும் ஒழித்தவராவர். மீண்டும் அவர்கள் விதி-மதிகளைச் சார்ந்து அவற்றால் பாதிக்கப்படுவார்களா? சொல்லுவாயாக.

20.
காணுந் தனைவிட்டுத் தான்கடவு ளைக்காணல்
காணு மனோமயமாங் காட்சிதனைக் காணுமவன்
றான்கடவுள் கண்டானாந் தன்முதலைத் தான்முதல்போய்த்
தான்கடவு ளன்றியில தாலுயிராத் தான்கருதும்

பொருள்:
எதிரிட்டறியும் அனைத்தையும் காண்பவனாகிய தன்னை யாரென்று காண்பதை விட்டு, கடவுளைத் தரிசித்தேன் என்பது மனோமய, கற்பனைக் காட்சியே ஆகும். ஆத்மாவாகிய தான், கடவுளைத் தவிர வேறு ஒரு வஸ்துவாக இல்லாததினால், அகந்தையை அழித்துத் தோற்ற ஒடுக்கங்களுக்கு மூலமான தன்னை (ஆத்மாவை) காண்கின்றவனே கடவுளை உள்ளபடி கண்டவனாவான்.

21.
தன்னைத்தான் காண றலைவன் றனைக்காண
லென்னும்பன் னூலுண்மை யென்னையெனின் றன்னைத்தான்
காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற்
காணலெவ னூணாதல் காணெவையுங் காணும்

பொருள்:
ஜீவ சொரூபனாகக் கருதும் தன் சொரூபத்தை அறிவது, தனக்காதாரமான கடவுளைக் காண்பது என்று கூறப்படும் சாஸ்திரங்களின் உண்மை நோக்கம் என்னவென்று கூறுகிறேன். தான் என்னும் மெய் உணர்வு இரண்டற்ற ஒன்றேயாதலால் தன் சொரூபத்தைத் தானே காண்பவன் எவன்? தன்னைக் காணுவதே முடியாதென்றால் கடவுளைக் காணுவது எப்படி? தான், தனதுண்மை சொரூபமாகிய கடவுளுக்கு, உணவாகப் போவதே (நான் என்னும் ஜீவபோதம் அழிவதே) கடவுளைக் காணுவதாகும்.

22.
மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு
மதியினை யுள்ளே மடக்கிப் பதியிற்
பதித்திடுத லன்றிப் பதியை மதியான்
மதித்திடுத லெங்ஙன் மதியாய் மதியிலதால்

பொருள்:
எல்லாவற்றையும் காண்கின்ற புத்திக்குப் பிரகாசத்தைக் கொடுத்து, புத்திக்கும் ஆதாரமாக அதனுள் விளங்கும் பதியாகிய ஆன்மாவில் மனதை அந்தர்முகப்படுத்தி ஒன்றுபடுத்துவதை விட்டு ஆத்ம சொரூபத்தை புத்தியினால் மதிப்பிடுவது எப்படி சாத்தியமாகும்?

23.
நானென்றித் தேக நவிலா துறக்கத்து
நானின்றென் றாரு நவில்வதிலை நானொன்
றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங்
கெழுமென்று நுண்மதியா லெண்ண நழுவும்

பொருள்:
அறிவற்றதால் தேகம் ஜடமானது; அது நான் என்று சொல்லாது. தூக்கத்தில் நான் இருக்கவில்லையென்று யாரும் சொல்வதில்லை. நானென்னும் உணர்ச்சி எழுந்த பிறகே ஈசன், ஜீவன், உலகம் எல்லாமே தோன்றுகின்றன. இந்த நான் என்னும் அகந்தை உணர்ச்சி எங்கிருந்து எழுகின்றதென்று சூக்ஷ்மமான புத்தியினால் விசாரித்தால் இவையாவும் நழுவிவிடும்.

24.
சடவுடனா னென்னாது சச்சித் துதியா
துடலளவா நானொன் றுதிக்கு மிடையிலிது
சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
யிச்சமு சாரமன மெண்ணென்னே விச்சை

பொருள்:
ஜடமாகிய உடலானது நான் என்று சொல்லாது, சித்சொரூபமோ, நான் என்று தோன்றாது. இந்த இரண்டுக்கும் இடையில் உடல் நான் என்னும் ஒன்று தோன்றுகிறது. இதுதான் சித்ஜடக் கிரந்தி, பந்தம், ஜீவன், சூக்ஷ்ம சரீரம், அகங்காரம், சம்சாரம், மனம் என்று பலவிதமாகச் சொல்லப்படுகின்றதென்று அறிவாயாக.

25.
உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
முருப்பற்றி யுண்டுமிக வோங்கு முருவிட்
டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு
முருவற்ற பேயகந்தை யோர்வாய் கருவாம்

பொருள்:
என்ன விந்தையிது? தனக்கென்று ஒரு உருவமில்லாத அகந்தை ஒரு உடலை நானென்று பற்றிக்கொண்டு நிலைபெறும். விஷயாதிகளை நுகர்ந்து ஐம்புலன்களின் மூலம் சுகதுக்கங்களை அனுபவித்து, வாசானா பலத்தினால் செழித்து வளர்ச்சியடையும். ஒரு உடல் நசித்துவிட்டால் மற்றொரு உடலைப் பற்றிக் கொள்ளும். இதன் உண்மை எது என்று விசாரித்தால் இந்த அகந்தைப் பேய் இருப்பற்று ஓட்டம் பிடிக்கும் என்று அறிவாயாக.

26.
அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு
மகந்தையின் றேலின் றனைத்து மகந்தையே
யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே
யோவுதல் யாவுமென வோர்முதல்போன் மேவுமிந்த

பொருள்:
அனைத்திற்கும் காரணமான அகங்காரம் தோன்றுமானால், உலகத் தோற்றங்களும் உண்டாகும். அகந்தையின் எழுச்சி இல்லையென்றால் காட்சிகளும் மறைந்து போகும். அகந்தை ஒன்றே எல்லாமாகத் தோன்றுவதால் அகந்தையின் தன்மை எது? இது உதிக்கும் இடம் யாது? என்று விசாரித்து அறிவதே யாவற்றையும் துறப்பதாகுமென்று அறிவாயாக.

27.
நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை
நானுதிக்குந் தானமதை நாடாம னானுதியாத்
தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்
தன்னிலையி னிற்பதெவன் சாற்றுதி முன்னர்

பொருள்:
தன்மைப் பொருள் போல் விளங்கும் நான் என்னும் தேகாத்ம புத்தி உதிக்காமல் இருக்கும் தூய நிலையே, நாம் ஆத்ம சொரூபமாய் இருக்கும் நிலையாகும். நானென்னும் அகந்தை எழுகின்ற இடத்தை ஆராய்ந்தறியாமல் அகந்தையற்ற நிலையை அடைவதெப்படி? அகந்தை நாசம் அடையாமல் ஆத்மசொரூபமான யதார்த்தமான நிலையில் ஸ்திரமாக நிலைபெற்று நிற்பது எப்படி? சொல்வாயாக.

28.
எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள்காண வேண்டி முழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டு மறிபிணம்போற் றீர்ந்துடலம்

பொருள்:
யாவற்றிற்கும் முதலில் எழுகின்ற அகந்தை எங்கிருந்து எழுகின்றதென்று காண, தண்ணீரில் விழுந்த ஒரு பொருளைக் கண்டெடுக்கும் பொருட்டு பேச்சு மூச்சடக்கிக் கொண்டு முழுகுதல் போல எண்ணம், பேச்சு, மூச்சுகளை அடக்கிக் கொண்டு இதயத்தில் ஆழ்ந்து அதை அறிய வேண்டும் என்று தெரிந்துகொள்.

29.
நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நாடுதலே ஞானநெறி
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமதுவி சாரமா மாவதனான் மீமுறையே

பொருள்:
உடம்பைப் சவம்போலக் கிடத்தி, நான் என்று வாயால் சொல்லாமல் உள்ளாழ்ந்த மனத்தினால் நான் எங்கிருந்து எழுகின்றதென்று விசாரித்தலே ஞான மார்க்கமாகும். நான் இந்தச் சரீரமல்ல. நான் அந்தப் பிரம்மமேயாவேன். நேதி-நேதி என்று மனத்தினால் ஒரு பாவனையைக் கற்பித்துக் கொண்டு தியானிப்பது ஞான சாதனத்திற்குத் துணையாகுமேயன்றி அதுவே ஆத்ம விசாரம் ஆகுமா?

30.
நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே
நானா மவன்றலை நாணமுற நானானாத்
தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள்
பூன்றமது தானாம் பொருள்பொங்கித் தோன்றவே

பொருள்:
மேற்சொன்ன முறையில் நான்யார்? என்னும் ஆன்ம நாட்டத்தினால் மனம் உள்முகமாகி இதயத்தைச் சார்தலினால் தேகாத்ம பாவ அகங்காரத்தின் தலை சாய்ந்து ஒடுங்கிவிடும். பின் நான்-நான் என்று இடைவிடாமலொன்று, பிரயத்தனமின்றித் தானாகவே தோன்றும். அப்படித் தானாகவே தோன்றினாலும் அது அகங்காரமல்ல, அது குறைவற்ற பரிபூரண வஸ்துவான ஆத்ம சொரூப உண்மைப் பொருளாகும்.

31.
தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக்
கென்னை யுளதொன் றியற்றுதற்குத் தன்னையலா
தன்னிய மொன்று மறியா ரவர்நிலைமை
யின்னதென் றுன்ன லெவன்பரமாப் பன்னும்

பொருள்:
தானென்னும் ஜீவபோத அகங்காரத்தை நாசமாக்கி, அதனின்று தோன்றிய ஆத்மஞான ஜீவன் முக்தருக்கு, செய்வதற்குரிய காரியம் என்ன இருக்கிறது? தனதுண்மை சொரூபத்தைத் தவிர ஒரு பொருளையும் வேறாக அறியமுடியாத அவர்களது மகோன்னத நிலையை விவரிப்பது எப்படி முடியும்?

32.
அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை
யெதுவென்று தான்றேர்ந் திராஅ ததுநா
னிதுவன்றென் றெண்ணலுர னின்மையினா லென்று
மதுவேதா னாயமர்வ தாலே யதுவுமலா(து)

பொருள்:
பரம்பொருள் என்று சொல்லப்படும் ஆத்மாவே தானாக அமர்ந்திருப்பதினால் அந்தப் பிரம்மம் நீயே என்று வேதங்கள் கோஷிக்கின்றன. எனவே தனதுண்மை சொரூபம் எதுவென்று விசாரித்து அந்தப் பிரம்ம சொரூபமாக நிலைபெறாமல், அந்தப் பிரம்மம் நான், இந்தத் தேகம் நான் அல்ல என்று தியானிப்பது வலிமையும், திண்மையும் இல்லாத காரணமேயாகும்.

33.
என்னை யறியேனா னென்னை யறிந்தேனா
னென்ன னகைப்புக் கிடனாகு மென்னை
தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா
யனைவரனு பூதியுண்மை யாலோர் நினைவறவே

பொருள்:
அதுமட்டுமின்றி ஒருவன் தன்னை அறியவில்லை என்றோ; என்னை நான் அறிந்து கொண்டேன் என்றோ கூறுவது பரிகாசத்திற்குரிய செயலாகும். தன்னையே தனக்கு அறிபடுபொருளாக (விஷயமாக) ஆக்குவதற்கு தான் என்ற உணர்வு இரண்டு உள்ளனவா? நான் என்பது ஒன்றே என்பதுதானே அனைவரின் அனுபவம்; இதை உணர்வாய்.

34.
என்று மெவர்க்கு மியல்பா யுளபொருளை
யொன்று முளத்து ளுணர்ந்துநிலை நின்றிடா
துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே
சண்டையிடன் மாயைச் சழக்கொழிக வொண்டியுளம்

பொருள்:
யாதோர் நினைப்புமற்று எல்லோருக்கும் சுபாவமாக விளங்குகின்ற மெய்ப்பொருளை இதயத்தினுள் ஆழ்ந்து அறிந்து அதன் மயமாக நிலைபெறாமல், அது உண்டு-இல்லை என்றும், அது ரூபமுள்ளது-ரூபமற்றது என்றும், அது ஒன்றே-இரண்டே என்றும், அது ஒன்றுமல்ல-இரண்டுமல்ல என்றும் வாதம் புரிவது மடமையேயாகும். இந்த அறியாமையிலிருந்து நீங்குவாயாக.

35.
சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிற
சித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே நித்திரைவிட்
டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்றுபொய்ம்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்ந்திருநீ கூர்ந்துமயல்

பொருள்:
ஒடுங்கிய மனத்தால் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உண்மைப் பொருளை சாக்ஷாத்கரித்து, அந்த மெய்நிலையில் நிலைபெற்று இருத்தலே பூரண சித்தியாகும். மற்ற சித்திகள் எல்லாம் சொப்பனத்தில் தோன்றும் சித்திகளின் அனுபவத்திற்கு நிகராகும். தூக்கத்திலிருந்து விழித்தபின் சொப்பனத்தில் அனுபவித்தவை உண்மையாகுமோ? ஆத்ம சொரூபத்தில் நிலைபெற்று அஞ்ஞானத் தூக்கத்திலிருந்து மீண்ட ஜீவன் முக்தர் இந்த சித்திகளைக் கண்டு ஆசைப் படுவாரோ? நீயே அறிந்துக் கொள்.

36.
நாமுடலென் றெண்ணினல நாமதுவென் றெண்ணுமது
நாமதுவா நிற்பதற்கு நற்றுணையே யாமென்று
நாமதுவென் றெண்ணுவதே னான்மனித னென்றெணுமோ
நாமதுவா நிற்குமத னாலறியா தேமுயலும்

பொருள்:
அஞ்ஞான மயக்கத்தினால் தேகமே நான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வரையில், தேகம் நாமல்ல-அந்தப் பிரம்மமே நாம் (நாஹம்-ஸோஹம்) என்று தியானிக்கும் பாவனையானது நமக்கு நல்ல துணையாகும். ஆனால் நாம் அந்தப் பிரம்மமென்று இடைவிடாமல் தியானிப்பது எதற்காக? ஒருவன் தன்னை, நான் மனிதன் என்று சதா நினைத்துக் கொண்டிருப்பானோ?

37.
சாதகத்தி லேதுவிதஞ் சாத்தியத்தி லத்துவித
மோதுகின்ற வாதமது முண்மையல வாதரவாய்த்
தான்றேடுங் காலுந் தனையடைந்த காலத்துந்
தான்றசம னன்றியார் தான்வித்துப் போன்ற

பொருள்:
அஞ்ஞானத்தோடு முயற்சி செய்கின்ற காலத்தில் ஈச, ஜீவர்கள் உண்மை என்றும், சாதித்து முடிந்த ஆத்மானுபவ காலத்தில் இரண்டும் ஐக்கியமாகி ஒன்றே உள்ளதென்றும் சொல்லப்படுகின்ற வாதமும் உண்மையல்ல. தன்னை எண்ணுவதற்கு மறந்து, தான் காணாமல் போனதாக நினைத்து தன்னைத் தேடிய காலத்திலும், பிறகு தன்னை அறிந்து, தானே அந்தப் பத்தாவது மனிதனாகக் கண்டு கொண்ட காலத்திலும் அந்தத் தசமனாகிய ஒருவன், தானன்றி வேறு யார்?

38.
வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்
வினைமுதலா ரென்று வினவித் தனையறியக்
கர்த்தத் துவம்போய்க் கருமமூன்

பொருள்:
மரம் தோன்றுவதற்கு விதை மூலமாவது போல, செய்யும் கர்மங்களுக்கு கர்த்தா நாமே என்று எண்ணினால் பலன்களையும் நாமே அனுபவிப்போம். இந்தக் கருமங்களைச் செய்யும் கர்த்தாவாகிய நான் யார் என்று விசாரித்து சத்தியத்தை அறிந்தால் கர்த்தா நான் என்னும் அபிமானமழியும். அத்துடன் சஞ்சிதம் ஆகாமியம், பிராரப்தம் என்று சொல்லப்படும் மூன்று கர்மங்களும் அழிந்துவிடும். கருமம் அற்று இருக்கும் இந்த நிலையே முக்தி நிலையாகும்.

39.
பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குங்காற் சித்தமாய்
நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முத்திசிந்தை முன்னிற்கு மோமனத்துக் கொத்தாங்(கு)

பொருள்:
அறிவில்லாத காரணத்தால், நான் பந்தப்பட்டிருப்பவன் என்ற எண்ணம் இருக்கும் வரையில்தான், முக்தியைப் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். பந்தப் பட்டவனாகிய நான் யார்? என்று விசாரித்துத் தன்னை நாடினால் நித்ய முக்தனான ஆத்மா, சித்தமாய் அங்கு ஒளிரும்போது, நான் பந்தப்பட்டவன் என்ற எண்ணம் தோன்ற இடமில்லை. பிறகு முக்தியடைந்தேன் என்ற எண்ணம் மட்டும் நின்றிடுமோ?

40.
உருவ மருவ முருவருவ மூன்றா
முறுமுத்தி யென்னி லுரைப்ப னுருவ
மருவ முருவருவ மாயு மகந்தை
யுருவழிதன் முத்தி யுணரீ தருள்ரமணன்
உள்ளது நாற்பது மொன்றுகலி வெண்பாவா
முள்ளது காட்டு மொளி.

பொருள்:
மனதிற்கு ஏற்றார்போல் முக்தியானது உருவமுக்தி, அருவமுக்தி, உருவருவமுக்தி என்று மூன்று விதமாகும் என்று ஒருவன் சொல்வானாகில் அதன் உண்மையை நான் கூறுகிறேன். முக்திநிலை உருவமுள்ளதா? உருவமற்றதா? இருவிதமாகவும் உள்ளதா? என்று ஆராய்ந்து அறியும் அகந்தையின் உருவம் அழியும் நிலை எதுவோ அதுவே உண்மையான முக்தி என்று உணர்வாயாக.

உள்ளது நாற்பது - அனுபந்தம்
உபதேச உந்தியார்
உள்ளது நாற்பது

4 thoughts on “உள்ளது நாற்பது

 • January 20, 2018 at 7:18 pm
  Permalink

  Idhai inru Padula kidaithadhu
  Idhuvarai padikaadhanaalellaam veenaai kazhindhadhu

  Reply
 • February 8, 2021 at 5:23 am
  Permalink

  Thanks for this verses. Can you put on pdf forme please.

  Reply
 • February 12, 2021 at 4:22 am
  Permalink

  No words to describe the swaroopam…but one who realized & providing the realization to others in a understandable format via our common man language skills is applaudable effort.

  Very long way to go….

  Reply
 • April 22, 2022 at 3:26 am
  Permalink

  இந்த பாடல்கள் மிகவும் நன்மையுல்லதாக உணர்கின்றேன்

  Reply

Leave a Reply

Your email address will not be published.

↓
error: Content is protected !!