Forty Verses on Reality Supplement
உள்ளது நாற்பது

உள்ளது நாற்பது – அனுபந்தம்

திரு ரமண மகரிஷி

மங்கலம்

(விருத்தம்)
எதன்கண்ணே நிலையாகி யிருந்திடுமிவ் வுலகமெலா மெதன தெல்லா மெதனின்றிவ் வனைத்துலகு மெழுமோமற் றிவையாவு மெதன்பொ ருட்டா மெதனாலிவ் வையமெலா மெழுந்திடுமிவ் வெல்லாமு மெதுவே யாகு மதுதானே யுளபொருளாஞ் சத்தியமா மச்சொருப மகத்தில் வைப்பாம்.

பொருள்:
உலகம் எதனைப் பற்றிக் கொண்டு நிலையாக நிற்கிறதோ/இருக்கின்றதோ, யாவும் எதனுடைய உடமையாகுமோ, எதிலிருந்து அனைத்துலகும் தோன்றுகின்றதோ, இவையாவும் என்ன காரணத்திற்காகவோ, எதனாலே உலகமெல்லாம் தோற்றி வைக்கப்படுகின்றதோ, எல்லாமும் எதுவாக ஆகின்றதோ அதுவே உள்ளதாகிய பரம் பொருளாகும். சத்தியமாகிய அந்தச் சொரூபத்தை உள்ளத்தில் தியானிப்போம்.

நூல் 

(வெண்பா)

1.
சத்திணக் கத்தினாற் சார்பகலுஞ் சார்பகலச் சித்தத்தின் சார்பு சிதையுமே சித்தச்சார் பற்றா ரலைவிலதி லற்றார்சீ வன்முத்தி பெற்றா ரவரிணக்கம் பேண்.

பொருள்:
மகாத்மாக்களின் சேர்க்கையினால் உலகப் பற்றுக்கள் நீங்கிவிடும். பற்றற்றுப் போன மனதின் மாயா மோகங்கள் அழிந்துவிடும். ஆகவே சாட்சாத்காரம் பெற்ற சாதுக்களுடன் இணங்கிப் பழகுவாயாக.

2.
சாதுறவு சாரவுளஞ் சார்தெளிவி சாரத்தா லேதுபர மாம்பதமிங் கெய்துமோ வோதுமது போதகனா னூற்பொருளாற் புண்ணியத்தாற் பின்னுமொரு சாதகத்தாற் சாரவொணா தால்.

பொருள்:
சாதுக்களாகிய ஜீவன்முக்தர்களுடைய உறவைப் பக்தியோடு அடைவதன் மூலம் உள்ளம் தூய்மையாகி அதன் பயனாகத் தெளிந்த விசாரத்தினால் எந்தப் பரமபதம் இங்கேயே பெறப்படுகின்றதோ, அதை, வாக்கினால் உபதேசிக்கும் ஆசிரியர்களினாலும், ஞான சாஸ்திரங்களினாலும், யக்ஞயாகாதி புண்ணிய கர்மங்களினாலும், வேறெந்த உபாயங்களினாலும் அடைய முடியாது.

3.
சாதுக்க ளாவார் சகவாச நண்ணினா லேதுக்கா மிந்நியம மெல்லாமு மேதக்க தண்டென்றன் மாருதந் தான்வீச வேவிசிறி கொண்டென்ன காரியநீ கூறு.

பொருள்:
சாதுக்களாகிய சத்புருஷர்களின் சகவாசம் கைவரப் பெற்றால் யம, நியமங்களை அனுஷ்டிப்பது எதற்காக? குளிர்ந்த தென்றல் காற்று தானாகவே வீசும்போது விசிறியினால் என்ன பிரயோஜனம்? நீயே கூறுவாய்.

4.
தாபந்தண் சந்திரனாற் றைனியநற் கற்பகத்தாற் பாபந்தான் கங்கையாற் பாறுமே தாபமுத லிம்மூன்று மேகு மிணையில்லா சாதுக்க டம்மா தரிசனத்தாற் றான்.

பொருள்:
குளிர்ந்த சந்திரக் கிரணங்களினால் வெப்பம் நீங்கும். கற்பக விருட்சத்தினால் தரித்திரம் நீங்கும். கங்கையில் நீராடினால் பாபம் போகும். தாபமும், ஏழ்மையும், பாபமுமாகிய இந்த மூன்றும் சாதுக்களின் தரிசனத்தினால் தானே போய்விடும்.

5.
கம்மயமாந் தீர்த்தங்கள் கன்மண்ணாந் தெய்வங்க ளம்மகத்துக் கட்கிணையே யாகாவா மம்மவவை யெண்ணினா ளாற்றூய்மை யேய்விப்ப சாதுக்கள் கண்ணினாற் கண்டிடவே காண்.

பொருள்:
புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதும் கல்லாலும், மண்ணாலும் ஆன தேவதா மூர்த்திகளை தரிசனம் செய்வதும் மகாத்மாக்களின் சத்சங்கத்திற்கும் அவர்களது க்ருபா திருஷ்டிக்கும் ஈடாக மாட்டாது. அம்மா ஆச்சரியம்! கணக்கிலடங்கா காலம் சென்ற பிறகுதான் முன்சொன்னவை மனத்தூய்மையைக் கொடுக்கும். ஆனால் சாதுக்களாகிய மகான்கள் நம்மை தம் கண்ணால் கண்ட மாத்திரத்தில்,  (அவர்களை நாம் மனதில் நினைத்த மாத்திரத்தில், ) மனம் தூய்மையடைந்து பரிசுத்தமாகிவிடும். அறிவாய்.

6.
தேவனா ரார்மனந் தேருவ னென்மன மாவியா மென்னா லறிபடுமே தேவனீ யாகுமே யாகையா லார்க்குஞ் சுருதியா லேகனாந் தேவனே யென்று.

பொருள்:
கே: இறைவன் என்று சொல்லப்படுபவன் யார்?
ப: எவனால் மனம் அறியப்படுகின்றதோ (எவன் மனதை அறிகின்றானோ) அவன்தான் தேவன்.
கே: ஆகையினால் இறைவனாகிய தேவன் நீயேதான். ஏனெனில் தேவன் ஒருவனே என்று சுருதிகள் கோஷிக்கின்றன.

(விருத்தம்)

7.
ஒளியுனக் கெதுபக லினனெனக் கிருள்விளக் கொளியுண ரொளியெது கணதுண ரொளியெது வொளிமதி மதியுண ரொளியெது வதுவக மொளிதனி லொளியுநீ யெனகுரு வகமதே.

பொருள்:
கே: உனக்குப் பிரகாசம் எது?
ப: பகலில் சூரியன், இருளில் விளக்கு.
கே: இந்தப் பிரகாசத்தை உணரக்கூடிய பிரகாசம் எது?
ப: கண்ணின் ஒளியினால் உணர்கிறேன்.
கே: கண்ணை உணர்கின்ற ஒளி எது?
ப: மதியின் ஒளியாகும்.
கே: மதியை உணர்கின்ற ஒளி எது?
ப: அது நான். ஆகவே எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ என்று குரு சொல்ல, நான் அதுவே என்றான் சீடன்.

(வேறு)

8.
இதயமாங் குகையி னாப்ப ணேகமாம் பிரம்ம மாத்ர மதுவக மகமா நேரே யவிர்ந்திடு மான்மா வாக விதயமே சார்வாய் தன்னை யெண்ணியா ழலது வாயு வதனுட னாழ்ம னத்தா லான்மாவி னிட்ட னாவாய்.

பொருள்:
இதயமென்னும் குகையில் ஏக பரிபூரண பிரம்மம் கேவலம் தனித்து நின்று அந்த நான் நான் என்று ஆன்மாவாகத் தானே விளங்குகிறது. அதை அடைவதற்குத் தனக்குள்ளே ஆழ்ந்து போகின்ற மனத்தினாலோ, அல்லது வாயுவுடன் (மூச்சுக்கட்டுப்பாட்டுடன்) ஆழ்கின்ற மனத்தினாலோ இதயத்தைச் சார்வதினால் ஸ்திதப் பிரக்ஞனாக (ஆன்ம ஞானம் அடைந்தவனாக) ஆவாய்.

(வெண்பா)

9.
அகக்கம லத்தே யமல வசல வகமுருவ மாகு மறிவே தகத்தை யகற்றிடுவ தாலவ் வகமா மறிவே யகவீ டளிப்ப தறி.

பொருள்:
இதயத் தாமரையில் நிர்மலமாகவும், சலனமற்றதாகவும் நான் என்னும் மெய்ப்போத வடிவமாகவுள்ள அறிவு எதுவோ அதுவே, சரீரமே நான் என்னும் தேகாத்ம பாவத்தை அழித்து மோக்ஷவீட்டை அளிக்குமென்று அறிவாயாக. (பார்க்க: தேவிகாலோத்ர 46)

(விருத்தம்)

10.
தேகங் கடநிகர் சடமிதற் ககமெனுந் திகழ்விலதா னாகஞ் சடலமி றுயிலினி றினமுறு நமதியலாற் கோகங் கரனெவ ணுளனுணர்ந் துளருளக் குகையுள்ளே சோகம் புரணவ ருணகிரி சிவவிபு சுயமொளிர்வான்.

பொருள்:
சரீரம் மண் பானையைப் போன்று ஜடத்தன்மை வாய்ந்ததால் நான் என்னும் அறிவுப் பிரகாசம் இல்லாதது. சரீரப் ப்ரக்ஞையற்ற தூக்கத்தில் நாம் இருக்கின்ற நித்திய அனுபவத்தாலும், தேகம் ஆத்மா அல்ல, ஆயினும் தேகத்தில் நானென்று கிளம்புகிறவன் யார்? அவனிருக்கும் இடம் எது? என்று ஆராய்ந்து இதயக் குகையுள்ளே (ஸோகம்) அஹம் ஸ்புரணமாக எங்கும் வியாபித்துள்ள அருணாசல சிவன் சுயமாகப் பிரகாசிப்பான்.

(வெண்பா)

11.
பிறந்த தெவன்றன் பிரம்மமூ லத்தே பிறந்ததெவ ணானென்று பேணிப் பிறந்தா னவனே பிறந்தா னவனிதமு னீச னவனவன வன்றினமு நாடு.

பொருள்:
தனக்குள்ளே, தான் பிறந்ததெங்கே என்று விசாரித்துத் தன் இருப்பிடமாகிய பிரம்ம மூலத்தில் எவன் பிறக்கிறானோ அவனே உண்மையில் பிறந்தவனாவான். அவன் பிறப்பே நித்தியமானதாகும். அவனே முனீந்திரனுமாவான். அவன் எந்நாளும் புதுமைக்கெல்லாம் புதுமையாக ஒளிர்வான்.

12.
இழிவுடல்யா னென்ன லிகந்திடுக வென்று மொழிவிலின் பாந்தன்னை யோர்க வழியு முடலோம்ப லோடுதனை யோரவுனல் யாறு கடக்கக் கராப்புணைகொண் டற்று.

பொருள்:
இழிவான சரீரத்தை நான் என்று எண்ணுவதை (தேகாத்ம புத்தியை) விட்டுவிட்டு, எப்பொழுதும் இன்ப மயமான ஆத்ம நான் என்று அறிக. அவ்வாறில்லாமல், அழியும் உடலை, தான் என்று எண்ணிக்கொண்டு (தேகாத்ம புத்தியோடு) தன்னை (பிரமமென) அறிய முயல்வது, ஆற்றைக் கடந்து அக்கரை சேருவதற்கு முதலையைப் படகாக்கிக் கொண்டது போன்றதாகும்.

13.
தானந் தவம்வேள்வி தன்மம்யோ கம்பத்தி வானம் பொருள்சாந்தி வாய்மையருள் மோனநிலை சாகாமற் சாவறிவு சார்துறவு வீடின்பந் தேகான்ம பாவமற றேர்.

பொருள்:
(ஜீவர்கள் புனிதமடைய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தானம், தவம் போன்ற அனைத்தும் தேகம் நான் என்ற உணர்விலிருந்து விடுபடுதலேயாகும்). தானம், யக்ஞம், தவம், தர்மம் (ஒழுக்கம்) யோகம், பக்தி, சுவர்க்கம், திரவியம், சாந்தி, சத்தியம், அருள், மௌனம், முக்திநிலை, ஞானம், தூய்மையான சந்நியாசம், மோட்சம், ஆனந்தம் இவையனைத்தும் தேகான்ம பாவமற்று இருப்பதேயாகும்.

14.
வினையும் விபத்தி வியோகமஞ் ஞான மினையவையார்க் கென்றாய்ந் திடலே வினைபத்தி யோகமுணர் வாய்ந்திடநா னின்றியவை யென்றுமிறா னாகமன லேயுண்மை யாம்.

பொருள்:
கர்மம், கடவுள்; ஆத்மாக்களினின்று வேறாக இருத்தல், அஞ்ஞானம் என்ற இவைகள் யாருக்கென்று விசாரித்துத் தன்னை நாடுதலே கர்மம், பக்தி, யோகம், ஞானம் என்னும் மார்க்கங்களாகும். தன்னை விசாரிப்பதால் அகந்தை அழிவுறும். பிறகு வினைமுதலான நான்கும், அதை நீக்க அப்யாசிக்கும் மார்க்கங்களும் தேவையற்றுத் தானாகத் திகழும். ஆத்மாவாக இருத்தலே உண்மை நிலையாகும்.

15.
சத்தியினாற் றாமியங்குந் தன்மையுண ராதகில சித்திகணாஞ் சேர்வமெனச் சேட்டிக்கும் பித்தர்கூத் தென்னை யெழுப்பிவிடி னெம்மட்டித் தெவ்வரெனச் சொன்னமுட வன்கதையின் சோடு.

பொருள்:
ஈச்வர சக்தியினால், தான் இயக்கப்பட்டு தொழிற்படுகிறோமென்ற உண்மையை உணராமல் அகிலமா சித்திகளையும் நாம் அடைவோமென்று முயற்சி செய்யும் பித்தர்களின் செய்கை. என்னை எழுப்பிவிட்டீர்களானால், இந்தச் சத்ருக்களெல்லாம் எனக்கு எம்மாத்திரம்? என்று வீராப்புப் பேசும் முடவனின் கதைக்கு நிகராகும்.

16.
சித்தத்தின் சாந்தியதே சித்தமா முத்தியெனிற் சித்தத்தின் செய்கையின்றிச் சித்தியாச் சித்திகளிற் சித்தஞ்சேர் வாரெங்ஙன் சித்தக் கலக்கந்தீர் முத்திசுகந் தோய்வார் மொழி.

பொருள்:
சலனமற்ற சாந்தி நிலையே சித்தமாய் விளங்கும் முக்தி நிலை என்று கூறப்படுவதால் மனதின் பிரயத்தனமின்றிப் பெறமுடியாத சித்திகளில் ஆசையுற்று அவைகளை அடைய வேண்டுமென்ற விருப்பங்கொண்ட அவிவேகிகள் எப்படி மனக்கலக்கம் தீர்ந்து முக்தி சுகத்தை அனுபவிப்பது? நீயே சொல்வாயாக.

17.
பூபரந் தாங்கவிறை போலியுயிர் தாங்கலது கோபுரந் தாங்கியுருக் கோரணிகாண் மாபரங்கொள் வண்டிசெலு வான்சுமையை வண்டிவை யாதுதலை கொண்டுநலி கொண்டதெவர் கோது.

பொருள்:
அனைத்துயிர்களின் பாரத்தை இறைவன் தாங்கிக் கொண்டிருக்கும்போது இருப்பில்லாத போலி ஜீவன் அதைத் தான் தாங்குவதாக எண்ணுவது, கோபுரத்தைத் தாங்குவது போல (அந்தக் கோபுரத்தில்) அமைக்கப்பட்டிருக்கும் பொம்மையின் கேலிக்கூத்தைப்போல் பரிகாசத்திற்கு இடமாகும். பெருத்த பாரத்தை இழுத்துச் செல்லும் வண்டியில் பயணம் செய்யும் ஒருவன் தன்னுடைய சுமையையும் அந்த வண்டியில் வைக்காமல் தன் தலையின் மேலே சுமந்து கொண்டு கஷ்டப்படுவது யாருடைய குற்றம்.

(விருத்தம்)

18.
இருமுலை நடுமார் படிவயி றிதன்மே லிருமுப் பொருளுள நிறம்பல விவற்று ளொருபொரு ளாம்பல ரும்பென வுள்ளே யிருவிரல் வலத்தே யிருப்பது மிதயம்.

பொருள்:
மார்பகங்களுக்கு நடுவில், வயிற்றுக்கு மேலாக (இந்த இரண்டிற்கும் மத்தியிலுள்ள இடத்தில்) பல நிறங்களுடைய ஆறு பொருள்கள் இருக்கின்றன. இவற்றுக்குள் ஆம்பல் அரும்பைப் போன்ற ஒருபொருள், ஒரு மார்புக்கு வலதுபுறம் இரண்டுவிரல் தள்ளி இருப்பது இதுவே இதயமாகும்.

19.
அதன்முக மிகலுள தகமுள சிறுதுளை யதனிலா சாதியொ டமர்ந்துள திருந்தம மதனையா சிரித்துள வகிலமா நாடிக ளதுவளி மனதொளி யவற்றின திருப்பிடம்.

பொருள்:
அந்த இதயத்தின் வாய் மூடியிருக்கிறது. அதன் உள்ளே உள்ள சிறிய துளையில் ஆசை முதலாகிய வாசனைகளடங்கிய அடர்ந்த இருள் இருக்கிறது. அந்த இருளை (அக்ஞானத்தை) ஆச்ரயித்து உடலின் அனைத்துப் பெரிய நாடிகளும் இணைந்துள்ளன. அதுதான் பிராணன், மனம், அறிவின் பிரகாசம் இவைகளின் இருப்பிடமாகும்.

(வேறு)

20.
இதயமலர்க் குகையகமா யிலகிறையே குகேசனென வேத்தப் பட்டோ னிதமனைய குகேசன்யா னெனுஞ்சோகம் பாவனைதா னின்னு டம்பிற் றிதமுறுநா னெனுந்திடம்போ லப்பியாச பலத்தாலத் தேவாய் நிற்கிற் சிதையுடனா னெனுமவித்தை செங்கதிரோ னெதிரிருள்போற் சிதையு மன்றே.

பொருள்:
இதய குகையே வீடாகக் கொண்டு எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கும் இறைவனே குகேசன் என்று துதிக்கப் பட்டவனாவான். அந்தக் குகேசனே நானென்னும் இடைவிடா ஸோஹம் பாவனையானது திடமாக இருக்கும் நானென்னும் தேகாத்ம பாவனையின் உறுதியைப்போல அப்யாச பலத்தினால் நன்கு திடம் பெற்று, அந்தத் தேவனாகவே நின்றால், சிதைந்து மடிந்து போகும் தேகமே நானென்ற அஞ்ஞானமானது சூரியப் பிரகாசித்தின் எதிரில் இருளைப் போன்று அழிந்துவிடும்.

21.
எப்பெருங்கண் ணாடியின்கண் ணிவையாவு நிழலாக வெதிரே தோன்று மிப்பிரபஞ் சத்துயிர்கட் கெல்லாமவ் விதயமென விசைப்ப தேதோ செப்புதியென் றேவினவு மிராமனுக்கு வசிட்டமுனி செப்பு கின்றா னிப்புவியி னுயிர்க்கெல்லா மிதயமிரு விதமாகு மெண்ணுங் காலே.

பொருள்:
எந்த ஒரு பெரிய கண்ணாடியினிடத்தில் இந்த உலகமெல்லாம் நிழலாக எதிரே தோன்றுமோ, இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களுக்கெல்லாம் இதயமென்று கூறப்படுவது எதுவோ அதுபற்றி எனக்குத் தயையுடன் விளக்கி அருளுவீர் என்று கேட்ட இராமபிரானுக்கு, வசிட்டமுனி சொல்லத் தொடங்கினார். ஆராய்ந்தறியும் போது இந்த உலகில் தோன்றிய உயிர்களுக்கெல்லாம் இதயம் என்பது இருவிதமாகும்.

22.
கொளத்தக்க துந்தள்ளத் தக்கதுமா மிவ்விரண்டின் கூறு கேளா யளத்தற்கா முடம்பின்மார் பகத்தொரிடத் திதயமென வமைந்த வங்கந் தளத்தக்க தோரறிவா காரவித யங்கொள்ளத் தக்க தாமென் றுளத்துட்கொள் ளஃதுள்ளும் புறமுமுள துள்வெளியி லுள்ள தன்றாம்.

பொருள்:
கொள்ளத்தக்கதும், தள்ளத்தக்கதுமான இந்த இரண்டு இதயங்களின் இயல்பைக் கேட்பாயாக. அளவைக்கு உட்பட்டதான உடம்பின் இடப்பக்க மார்பகத்தில் இதயமென்று அமைந்துள்ள அங்கமானது தள்ளத் தக்கது. ஒப்புயர்வற்ற அறிவின் வடிவமான இதயத்தைக் கொள்ளக்கூடிய தாமென்று உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள அந்த இதயம் உள்ளேயும் வெளியேயும் உள்ளதாய், அது உள்-வெளி அற்றதாய் விளங்குகிறது.

23.
அதுவேமுக் கியவிதய மதன்கண்ணிவ் வகிலமுமே யமர்ந்தி ருக்கு மதுவாடி யெப்பொருட்கு மெல்லாச்செல் வங்கட்கு மதுவே யில்ல மதனாலே யனைத்துயிர்க்கு மறிவதுவே யிதயமென வறைய லாகுஞ் சிதையாநிற் குங்கற்போற் சடவுடலி னவயவத்தோர் சிறுகூ றன்றால்.

பொருள்:
அறிவே வடிவான அதுவே முக்கிய இதயமாகும். அதனிடத்தில் இந்தச் சராசரப் பிரபஞ்சங்களும் இருப்பாக அமர்ந்திருக்கும். அதுதான் எல்லாப் பொருள்களையும் தனக்குள் கொண்டிருக்கும் கண்ணாடியாகும். அதுவே சகல ஐஸ்வர்யங்களுக்கும் இருப்பிடமாகவுள்ள வீடாகும். ஆகையால் உயிர்களுக்கு அறிவாகிய அதுவே இதயமென்று கூறப்படும். அறிவற்று அழியக்கூடிய கல்லைப் போன்று நிற்கும் ஜடமான உடலின் உறுப்புகளில் ஒரு சிறிய பகுதி (மாம்ச மயமான இதயம்) உண்மை இதயமல்ல.

(வேறு)

24.
ஆதலினா லறிவுமய மாஞ்சுத்த விதயத்தே யகத்தைச் சேர்க்குஞ் சாதனையால் வாதனைக ளொடுவாயு வொடுக்கமுமே சாருந் தானே.

பொருள்:
ஆகையால் அறிவே வடிவமான தூய பரிசுத்த இதயத்தில் மனதைச் சேர்ப்பிக்கும் சாதனத்தினால் ஆசா பாசங்களாகிய வாசனைகளின் அழிவுறும் பிராணவாயுவின் ஒடுக்கமும் தானாகவே சித்திக்கும்.

(வெண்பா)

25.
அகில வுபாதி யகன்ற வறிவே தகமச் சிவமென் றனிச மகத்தே யகலாத் தியான மதனா லகத்தி னகிலவா சத்தி யகற்று.

பொருள்:
அனைத்துக் கற்பனைத் தோற்றங்களும் நீங்கி, சுயமாக ஒளிரும் அறிவானது எதுவோ, அந்த அறிவாகிய சிவத்தை அந்தச் சிவமே நான் என்று எப்போதும் உள்ளத்தில் சற்றும் மாறாது தியானித்து ஆசா பாசப் பற்றுக்கள் அனைத்தையும் அகற்றி விடுவாயாக.

(விருத்தம்)

26.
விதவிதமா நிலைகளெலாம் விசாரஞ் செய்து மிச்சையறு பரமபதம் யாதொன் றுண்டோ வதனையே திடமாக வகத்தாற் பற்றி யனவரத முலகில்விளை யாடு வீரா வெதுசகல விதமான தோற்றங் கட்கு மெதார்த்தமதா யகத்துளதோ வதைய றிந்தா யதனாலப் பார்வையினை யகலா தென்று மாசைபோ லுலகில்விளை யாடு வீரா

பொருள்:
பல்வேறு விதமாகத் தோன்றக்கூடிய நிலைகளை எல்லாம் விசாரம் செய்து அஞ்ஞானத்தை அழித்தெழுந்த மெய்ப் பொருளாய் நின்று, பர சொரூப நிலை எது வொன்றுளதோ அந்த நிலையை உறுதியாக உள்ளத்தில் பற்றி நழுவாமல் பிடித்துக் கொண்டு, வீரனே! உலக விவகாரங்களை விளையாட்டைப்போல் இயற்றுவாயாக. இந்தச் சகலவிதமான தோற்றங்களுக்கும் ஆதாரமாக எதுவொன்றுள்ளதோ அதை நீ அறிந்தாய். ஆகையால் அந்தப் பரமார்த்த திருஷ்டியைக் கொஞ்சமும் நழுவ விடாமல் வீரா! உலகப் பற்றுள்ளவனைப் போல உலகத்தில் விளையாடுவாயாக.

27.
போலிமன வெழுச்சிமகிழ் வுற்றோ னாகிப் போலிமனப் பதைப்புவெறுப் புற்றோ னாகிப் போலிமுயல் வாந்தொடக்க முற்றோ னாகிப் புரையிலனா யுலகில்விளை யாடு வீரா மாலெனும்பல் கட்டுவிடு பட்டோ னாகி மன்னுசம னாகியெல்லா நிலைமைக் கண்ணும் வேலைகள்வே டத்தியைவ வெளியிற் செய்து வேண்டியவா றுலகில்விளை யாடு வீரா.

பொருள்:
சுபாவமாக இல்லாதிருப்பினும், போலியான குதூகலமும் மகிழ்ச்சியும் உள்ளவன் போலவும், மன வெறுப்பும் பதைப்பும் கொண்டவன் போலவும், ஒரு காரியத்தை முயன்று செய்யத் தொடங்குபவன் போலவும், செய்யும் இவற்றில் உயர்வோ, பெருமையோ முதலான எந்தப் பற்றுதலும் இல்லாதவனாக வீரனே! இந்த உலகில் விவகார நடையில் விளையாடுவாயாக.

28.
அறிவுண்மை நிட்டனா மான்மவித் தாவா னறிவாற் புலன்செற்றா னார்தா னறிவங்கி யாவனறி வாங்குலிசத் தான்கால காலனவன் சாவினைமாய் வீரனெனச் சாற்று.

பொருள்:
உண்மைப் பொருளான ஆத்ம நிஷ்டையிலிருப்பவன் அதில் நிலைபெற்ற ஞானியாகிறான். ஞானத்தினால் ஐம்புலன்களின் விஷய வாசனைகளை அழித்தவன் எவனோ அவனே அறிவென்னும் ஞானாக்னி ஆவான். அறிவாகிய வஜ்ராயுதத்தைக் கொண்டவனும் அவனே. காலனுக்கும் காலனாகிய சிவனேயாவான். அவனே சாவை வென்ற வீரனென்று சொல்லுவாயாக.

29.
தத்துவங் கண்டவற்குத் தாமே வளருமொளி புத்திவலு வும்வசந்தம் போந்ததுமே யித்தரையிற் றாருவழ காதி சகல குணங்களுஞ் சேர விளங்கலெனத் தேர்.

பொருள்:
வசந்தகாலம் வந்தவுடன் பூமியிலுள்ள விருட்சங்கள் அழகும் பசுமையும் தழைத்தோங்கி, பூத்துக் குலுங்கி மிளிர்வதைப் போல, தத்வ தசனங்கண்ட ஞானிகளுக்கு, ஞான தேஜஸும், புத்தியின் விகாசமும், ஆற்றலும், மற்றெல்லா ஐசுவரியங்களும் ஒன்று சேர்ந்து யாதொரு முயற்சியுமின்றியே பிரகாசித்து விருத்தியடையுமென்று தெளிவாயாக.

30.
சேய்மையுளஞ் சென்றுகதை கேட்பார்போல் வாதனைக டேய்மனஞ்செய் துஞ்செய்யா தேயவைக டோய்மனஞ்செய் தின்றேனுஞ் செய்ததே யிங்கசைவற் றுங்கனவிற் குன்றேறி வீழ்வார் குழி.

பொருள்:
மனம் வேறெங்கேயோ நினைவின்வழி சென்று இங்கே கதையைக் கேட்பது போல, உலக வாசனைகள் முற்றும் தேய்ந்தழிந்த மனம், எந்தக் காரியம் செய்தாலும் செய்யாததேயாகும். இங்கே படுக்கையில் அசைவற்றுப் படுத்துக் கிடந்தாலும் கனவில் ஒரு குன்றேறி அதன் முகட்டிலிருந்து கீழே விழுவதைப்போல், வாசனைகள் நிறைந்த மனம் எதையும் செய்யாதிருந்தும் செய்ததேயாகும்.

31.
வண்டிதுயில் வானுக்கவ் வண்டிசெல னிற்றலொடு வண்டிதனி யுற்றிடுதன் மானுமே வண்டியா மூனவுட லுள்ளே யுறங்குமெய்ஞ் ஞானிக்கு மானதொழி னிட்டையுறக் கம்.

பொருள்:
மாட்டு வண்டியில் தூங்குகிற ஒருவனுக்கு அந்த வண்டி சென்று கொண்டிருப்பது, நிற்பது, வண்டியிலிருந்து மாடுகளை அவிழ்த்து விடுவது என்ற மூன்றையும் போன்று, வண்டியைப் போன்றதான இந்த ஊன உடம்பில் தூங்கும் மெய்ஞானிக்கும் இந்த உடல் செய்யும் தொழில், நிஷ்டை, தூக்கம் என்ற மூன்றையும் உணராதவனாவான் (பாதிக்கப்படாதவன்).

32.
நனவு கனவுதுயி னாடுவார்க் கப்பா னனவு துயிற்றுரிய நாமத் தெனுமத் துரிய மதேயுளதாற் றோன்றுமூன் றின்றாற் றுரிய வதீதந் துணி.

பொருள்:
விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்கும் ஜீவனுக்கே இந்த மூன்றுக்கும், அப்பாற்பட்டதாயுள்ள ஜாக்ரத் சுஷுப்தியாகிய துரிய மென்ற பெயர் பெற்றது. துரிய மென்ற நிலையே உண்மையாய் உள்ளதால், தோன்றி மறையும் நனவு; கனவு; துயில் மூன்றும் பொய்யாகிறது. ஆதலால் அந்தத் துரியமே துரியாதீதமென்றும் சொல்லப்படுகிறது. இதை அறிவாயாக.

33.
சஞ்சிதவா காமியங்கள் சாராவா ஞானிக்கூழ் விஞ்சுமெனல் வேற்றார்கேள் விக்குவிளம் புஞ்சொல்லாம் பர்த்தாபோய்க் கைம்மையுறாப் பத்தினியெஞ் சாததுபோற் கர்த்தாபோ மூவினையுங் காண்.

பொருள்:
சஞ்சிதம், ஆகாமியமென்ற இருவினைகளும் ஞானியைத் தொடராது; பிராரப்தம் மட்டுமே மிஞ்சுமென்று சாஸ்திரங்களில் சொல்லப்படுவது, அஞ்ஞானிகளின் கேள்விகளுக்குச் சொல்லிய சமாதானமாகும். ஒருவனைக் கணவனாகக் கொண்ட பலமனைவிகள், கணவனின் மரணத்திற்குப் பிறகு அனைவரும் விதவையாவதைப் போன்று ஒரே கர்த்தாவாகிய அகந்தையைச் சார்ந்துள்ள மூன்று கர்ம வினைகளும் அந்தக் கர்த்தாவின் அழிவிற்குப்பிறகு ஒன்றுகூட மிஞ்சாது.

34.
மக்கண் மனைவிமுதன் மற்றவர்க ளற்பமதி மக்கட் கொருகுடும்ப மானவே மிக்ககல்வி யுள்ளவர்த முள்ளத்தே யொன்றலபன் னூற்குடும்ப முள்ளதுயோ கத்தடையா யோர்.

பொருள்:
சாமானிய சம்சாரிகளுக்கு, மனைவி-குழந்தைகள் முதலான ஒரு குடும்பமே உள்ளது. ஆனால் கல்வியறிவு படைத்தவர்களது உள்ளத்தில் பலதரப்பட்ட நூல்களாகிய பலநூறு குடும்பங்கள் இருக்கின்றன. இந்த நூல் குடும்பங்கள் யோகத்திற்கு, ஞானாப்யாசத்திற்கு தடையென்றே அறிவாயாக.

35.
எழுத்தறிந்த தாம்பிறந்த தெங்கேயென் றெண்ணி யெழுத்தைத் தொலைக்க வெணாதோ ரெழுத்தறிந்தென் சத்தங்கொ ளெந்திரத்தின் சால்புற்றார் சோணகிரி வித்தகனே வேறார் விளம்பு.

பொருள்:
எழுத்தறிவாகிய கல்விச் செருக்குடையோர், தாம் பிறந்ததெங்கே என்று விசாரித்துத் தலையெழுத்தாகிய விதியைத் தொலைக்க எண்ணாதவர்கள், கல்வியறிவாகிய எழுத்தறிந்து பயன் என்ன? இவர்கள் ஒலியைப் பதித்துக் கொள்ளும் இயந்திரத்தின் (Tape Recorder) தன்மையை உடையவர்களே தவிர வேறு யார்? அருணாசலேசா! நீ சொல்வாயாக.

36.
கற்று மடங்காரிற் கல்லாதா ரேயுய்ந்தார் பற்று மதப்பேயின் பாலுய்ந்தார் சுற்றுபல சிந்தைவாய் நோயுய்ந்தார் சீர்தேடி யோடலுய்ந்தா ருய்ந்ததொன் றன்றென் றுணர்.

பொருள்:
நூல்களைக் கற்றறிந்தும் அடங்காதவர்களைவிட, கல்லாதவர்களே பிழைத்தவராவர். அவர்கள் மதமென்னும் பேயின் பிடியினின்று மீண்டவராவர். எதையாவது நினைத்து அதிலேயே சுழல்கின்ற மனம், வாக்கு இந்த இரண்டின் நோயினின்றும் தப்பினார்கள். கற்ற கல்விக்கு ஏற்ற புகழையும், மதிப்பையும் தேடித் தேசமெங்கும் ஓடியலைந்து ஏங்கித் திரிவதினின்றும் தப்பினார்கள். இவ்வாறு கல்லாதவர்கள் மீண்ட சீர்கேடுகள் ஒன்றிரண்டல்ல. அவர்கள் எல்லா விதத்திலும் பிழைத்தார்களென்று உணர்வாயாக.

37.
எல்லா வுலகுந் துரும்பா யினுமறைக ளெல்லாமே கைக்கு ளிருந்தாலும் பொல்லாப் புகழ்ச்சியாம் வேசிவசம் புக்கா ரடிமை யகலவிட லம்மா வரிது.

பொருள்:
அகில உலகங்களையும் துரும்புக்குச் சமானமாக நினைத்தாலும், நான்கு வேதங்களை முழுமையாகக் கற்றுக் கைக்குள் அடக்கினாலும், புகழ்ச்சி என்னும் வேசிக்கு வசமாகும் தன்மையுள்ள அடிமைத்தனத்தை அகற்றுவது மிகவும் அரிது. அம்மா! இது ஆச்சரியம்!

38.
தானன்றி யாருண்டு தன்னையா ரென்சொலினென் றான்றன்னை வாழ்த்துகினுந் தாழ்த்துகினுந் தானென்ன தான்பிறரென் றோராமற் றன்னிலையிற் பேராமற் றானென்று நின்றிடவே தான்.

பொருள்:
தனக்கு அன்னியமாய் யார் இருக்கிறார்கள்? யார் எதைச் சொன்னால் என்ன? தன்னையே தான் வாழ்த்திக் கொண்டாலும், தாழ்த்திக் கொண்டாலும் இழிவுண்டோ? தான், பிறரென்று நினையாமல் தன் உண்மை நிலையினின்று நழுவாமல் தான் எப்போதும் திடமாக இருப்பதுதான் உண்மை நிலையாகும்.

39.
அத்துவித மென்று மகத்துறுக வோர்போது மத்துவிதஞ் செய்கையி லாற்றற்க புத்திரனே யத்துவித மூவுலகத் தாகுங் குருவினோ டத்துவித மாகா தறி.

பொருள்:
ஏகமாம் அத்வைத உண்மையை உள்ளத்தில் உணர்வாயாக. ஆயினும் அதைச் செய்கையில் காட்டாதே. புத்திரனே! மூன்று உலகத்திலும் நீ அத்துவிதமாகப் பழகினாலும் பர சொரூபமான குருவினோடு அத்துவிதம் காட்டுவது ஆகாதென்ற உண்மையை அறிவாயாக.

40.
அகிலவே தாந்தசித் தாந்தசா ரத்தை யகமுண்மை யாக வறைவ னகஞ்செத் தகமது வாகி லறிவுரு வாமவ் வகமதே மிச்ச மறி.

பொருள்:
அனைத்து வேதாந்த சித்தாந்தங்களின் முடிவான உபதேச சாரத்தை உள்ளபடி சொல்கிறேன். நான் என்னும் அகந்தை அழிந்து பிரம்ம சொரூபமே நான் என்னும் அனுபூதி உண்டானால், அறிவே வடிவமான அந்த ஆத்மாவே மிச்சமென்று (இருப்பென்று) அறிவாயாக.

உள்ளது நாற்பது
உள்ளது நாற்பது – அனுபந்தம்

One thought on “உள்ளது நாற்பது – அனுபந்தம்

  • December 8, 2022 at 8:45 am
    Permalink

    Truly a good translation and explanation. Makes things absolutely clear. Fortunate to have come across this treasure. Regards,
    Kannan

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!