The Self alone Is
14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது
13 A. சாந்தமான குரங்கு

ஆன்மா மட்டுமே உள்ளது

“ஆன்ம உண்மைத் தன்னிலையை உணர குரு அவசியமா ?” என்று திருமதி பிக்கட் (ஆங்கிலேய பெண்மணி) முதலில் கேட்டார்.

மகரிஷி: ஆன்மாவை உணர்தல் – அறிவுரைகள், சொற்பொழிவுகள், தியானங்கள் முதலியவற்றையெல்லாம் விட அதிகமாக, முக்கியமாக ஆசானாகிய குருவின் அருளால் தான் நிகழும். இவையெல்லாம் இரண்டாம்பட்சமான உதவிகள். ஆனால், குருவின் அருள் தான் பிரதானமான, இன்றியமையாத, மிக முக்கியமான காரணம். 

பக்தர்.: ஆன்ம தன்னிலையை உணர இடையூறு செய்யும் தடங்கல்கள் எவை?
மகரிஷி.: அவை மனதில் பதிந்துள்ள குணங்கள் (வாசனைகள்). 

பக்தர்.: மனதில் பதிந்துள்ள குணங்களை வெற்றி கொள்வது எப்படி?
மகரிஷி.: ஆன்ம தன்னிலையை உணர்வதால்.

பக்தர்.: இது ஒரு சிக்குச்சுழல்.
மகரிஷி.: தான்மை என்ற அகங்காரம் தான் இந்த சிக்கல்களை எழுப்புகிறது; தடங்கல்களை ஏற்படுத்துகிறது; பிறகு முரண்பாடுகள் போல தோன்றும் மனக்குழப்பங்களால் அவதிப்படுகிறது. இந்த விசாரணைகளைச் செய்வது யார் என்று கண்டுபிடித்தால், ஆன்ம தன்னிலை கண்டுபிடிக்கப்படும். 

பக்தர்.: ஆன்ம தன்னிலையை அறிய உதவிகள் என்ன?
மகரிஷி.: மறைநூல்களின் அறிவுரைகளும், ஆன்மதரிசனம் பெற்ற ஞானிகளின் அறிவுரைகளும்.

பக்தர்.: விவாதங்கள், சொற்பொழிவுகள், தியானங்கள் – இவை இந்த அறிவுரைகளாகுமா? 
மகரிஷி.: ஆமாம். இவையெல்லாம் இரண்டாம்பட்சமான உதவிகள். குருவின் அருள் தான் முதன்மையானது.

பக்தர்.: அது கிடைக்க எவ்வளவு காலம் வேண்டும்? 
மகரிஷி.: அதை அறிய ஏன் விரும்புகிறீர்கள்? 

பக்தர்.: எனக்கு ஒரு நம்பிக்கை தருவதற்கு தான்.
மகரிஷி.: இத்தகைய விருப்பம் கூட ஒரு தடங்கல் தான். ஆன்மா எப்போதும் உள்ளது; அது இல்லாமல் எதுவுமே இல்லை. ஆன்மாவாக உறையுங்கள்; பிறகு விருப்பங்களும், சந்தேகங்களும் மறைந்து விடும். இந்த ஆன்மா, ஆழ்ந்த உறக்கம், கனவு, விழிப்பு என்று உள்ள நிலைகளிலெல்லாம் சாக்ஷியாக விளங்குகிறது. இந்த நிலைகள் தான்மையைச் சார்ந்தவை. ஆன்மா தான்மையைக் கூட கடந்ததாகும்.

நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதில்லையா? அந்த நிலையில் இருக்கும்போது, நீங்கள் தூங்குகிறீர்கள் என்றோ, உலகத்தைக் காணவில்லை என்றோ உங்களுக்குத் தெரிந்ததா? தூக்கத்தில் ஒன்றும் தெரியாமல் இருக்கும் அனுபவத்தை, விழிப்பான நிலையில் தான் வர்ணிக்கிறீர்கள்.  எனவே, தூக்கத்தில் உள்ள சுய உணர்வும், விழித்திருக்கும் போது உள்ள சுய உணர்வும் ஒன்று தான். விழிப்பான நிலையில் உள்ள சுய உணர்வை அறிந்துக்கொண்டால், மூன்று நிலைகளிலும் சாக்ஷியாக உள்ள சுய உணர்வை அறிந்துக்கொள்வீர்கள். இந்த சுய உணர்வை, தூக்கத்தில் இருந்தது போன்ற சுய உணர்வை நாடி தேடுவதால் கண்டுபிடிக்கலாம்.  

பக்தர்.: அப்படியானால், நான் தூங்கிவிடுவேன்.
மகரிஷி.: தீங்கொன்றுமில்லை!

பக்தர்.: அது ஒரு வெறுமை.
மகரிஷி.: யாருக்கு வெறுமை? கண்டுபிடியுங்கள். உங்களின் உள்ளமையை எப்போதும் நீங்கள் மறுக்கமுடியாது. ஆன்ம சுய நிலை எப்போதும் உள்ளது, எல்லா நிலைகளிலும் தொடர்ந்து உறைகிறது. 

பக்தர்.: நான் தூக்கத்தில் இருப்பது போல் இருந்து, அதே சமயத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டுமா?  
மகரிஷி.: ஆமாம். கூர்ந்து கவனிப்பது விழிப்பான நிலை. எனவே, இத்தகைய கவனிப்பு நிலை, தூங்கும் நிலையாகாது; மாறாக தூங்காமல் தூங்கும் நிலையாகும். உங்கள் எண்ணங்களின் வழியில் போனால், அவை உங்களை எங்கெங்கோ தூக்கிச் சென்று விடும். பிறகு உங்களை ஒரு முடிவில்லாத, சிக்கலான புதிர்பாதையில் காண்பீர்கள். 

பக்தர்.: எனவே, நான் எண்ணங்களின் மூலத்தைத் தடம்பின்பற்றிச் செல்ல வேண்டும். 
மகரிஷி.: ஆமாம். இப்படி செய்வதால், எண்ணங்கள் மறையும், ஆன்மா மட்டும் உறையும். உண்மையில் ஆன்மாவுக்கு, உள்ளே என்றும், வெளியே என்றும் ஒன்றும் கிடையாது.  இவையெல்லாம் தான்மையின் காட்சிப்படுத்தல், வெளிப்புற வீழ்த்தி. ஆன்மா தூய்மையானது, பூர்த்தியானது. 

பக்தர்.: அது அறிவில் தான் புரிந்துக் கொள்ளப்படுகிறது. எனவே ஆன்மாவை உணர அறிவு உதவியில்லையா? 
மகரிஷி.: ஆமாம், ஒரு நிலை வரைக்கும். இருந்தாலும், ஆன்மா அறிவையும் கடந்து உள்ளது என்று அறிந்துக் கொள்ளுங்கள்.  ஆன்மாவைச் சேர அறிவும் மறைய வேண்டும். 

பக்தர்.: என்னுடைய ஆன்ம அனுபவம் மற்றவர்களுக்கு உதவுமா?
மகரிஷி.: ஆமாம், நிச்சயமாக. அது தான் எல்லா வித உதவிகளிலும் மிகச் சிறந்த உதவியாகும். ஆனால், உதவி செய்யப்பட மற்றவர் என்று வேறு எவரும் இல்லையே. ஏனெனில், ஒரு பொற்கொல்லர் பலவித நகைகளில் உள்ள பொன்னை  மதிப்பிடுவது போல், ஒரு ஞானி ஆன்மாவைக் காண்கிறார். உடலுடன் இணைந்துக் கொள்ளும்போது தான், உருவங்களும், வடிவங்களும் உள்ளன. உடலைக் கடந்து சென்றால், உடல் உணர்வுடன் மற்றவர்களும் மறைந்து விடுகின்றனர். 

பக்தர்.: செடிகள், மரங்கள் போன்றவற்றிலும் அப்படி தானா? 
மகரிஷி.: ஆன்மாவை விட்டு தனியாக, வேறாக அவை உறைகின்றனவா? அதைக் கண்டு பிடியுங்கள். அவற்றைக் காண்பதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். அந்த எண்ணம் ஆன்மாவிலிருந்து எழும் காட்சிப்படுத்தல். அது எங்கிருந்து எழுகிறது என்று கண்டுபிடியுங்கள். எண்ணங்கள் எழுவது நின்று விடும்; ஆன்மா மட்டுமே விளங்கும்.  

பக்தர்.: தத்துவார்த்தமாக இதை நான் புரிந்துக் கொள்கிறேன். ஆனால் அவை இன்னும் உள்ளன. 
மகரிஷி.: ஆமாம். அது ஒரு சினிமா-காட்சி போன்றது தான். திரையில் ஒளி உள்ளது; இங்கும் அங்கும் வேகமாகச் செல்லும் நிழல்கள், பார்ப்பவர்களை ஒரு நாடகம் நிகழ்ந்தது போல ஈர்க்கிறது. அந்த நாடகத்திலேயே ஒரு அவையோரும் இருப்பது போல காண்பித்தாலும், இதே போல் தான் இருக்கும். பார்ப்பவரும், பார்க்கப்படுவதும் திரை மட்டுமே தான். இதை உங்களுக்கே ஈடுபடுத்திப் பாருங்கள். நீங்கள் தான் திரை; ஆன்மா தான்மையை ஏற்படுத்தியுள்ளது; தான்மை பல எண்ணங்களைத் திரட்டி வைத்துள்ளது; அந்த எண்ணங்கள் நீங்கள் குறிப்பிடும் உலகமாகவும், மரங்கள், செடிகள் இத்தியாதி பொருட்களாகவும் காட்சியளிக்கப் படுகின்றன.  உண்மையில், இவையெல்லாம் ஆன்மாவையன்றி வேறொன்றுமில்லை. நீங்கள் ஆன்மாவைப் பார்த்தால், ஆன்மாவே எப்போதும், எங்கும், எல்லாமுமாகவே காணப்படும். ஆன்மாவைத் தவிர வேறொன்றுமே இல்லை. 

பக்தர்.: சரி. ஆனால் நான் இன்னும் தத்துவார்த்தமாக தான் புரிந்துக் கொள்கிறேன். இருப்பினும், பதில்கள் மிக எளியதாகவும், அழகாகவும், உறுதியளிப்பதாகவும் உள்ளன.
மகரிஷி.: “நான் ஆன்மாவை உணரவில்லை” என்ற எண்ணம் கூட ஒரு தடங்கல் தான். உண்மையில், ஆன்மா மட்டுமே உள்ளது. 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 7, 1935
உரையாடல் 13.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது
13 A. சாந்தமான குரங்கு
13 B. ஆன்மா மட்டுமே உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!