மோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணாகதி, பிரச்சனை தீர்வு
ஒரு பக்தர் கேட்டார்: மோட்சம் அடைவது எப்படி?
மகரிஷி.: மோட்சம் என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள்.
பக்தர்: நான் அதற்காக உபாசனை செய்ய வேண்டுமா?
மகரிஷி: உபாசனை மனக் கட்டுப்பாட்டிற்காகவும் ஒரு முக கவனத்திற்காகவும் செய்யப்படுகிறது.
பக்தர்: நான் மூர்த்தி தியானம், அதாவது ஒரு கடவுளின் உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா?
மகரிஷி: நீங்கள் ஒரு உடல் என்று நினைக்கும் வரையில் தீங்கு இல்லை.
பக்தர்: பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி?
மகரிஷி: அதன் பொருள் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள்.
பக்தர்: நான் என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா?
மகரிஷி: அவர்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்கிறார்கள்? முதலில் நீங்கள் யார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.
பக்தர்: ஒருவர் தனது சம்சாரத்தை – அதாவது மனைவி, செல்வம், இல்லம், இவை எல்லாம் விட்டு விட வேண்டாமா?
மகரிஷி: சம்சாரம் என்றால் என்ன என்று முதலில் அறிந்துக் கொள்ளுங்கள். இவையெல்லாமா சம்சாரம்? இவற்றின் நடுவே இருந்துக் கொண்டே ஆன்ம ஞானம் பெற்றவர்கள் இல்லையா?
பக்தர்: அதற்கான நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன?
மகரிஷி: அது ஞானத்தை நாடுபவரின் தகுதிகளைப் பொறுத்திருக்கிறது.
பக்தர்: நான் கடவுள் உருவச் சிலை வழிபாடு செய்கிறேன்.
மகரிஷி: செய்துக் கொண்டே இருங்கள். அது மனதின் ஒருமுக கவனத்திற்கு வழிகாட்டும். மனதை ஒருமுகமாக்குங்கள். எல்லாம் சரியாக ஆகி விடும். மோட்சம் என்பது எங்கோ ஓரிடத்தில் உள்ளதென்றும், அதைத் தேட வேண்டும் என்றும் ஜனங்கள் நினைக்கிறார்கள். அவர்களின் நோக்கம் தவறு. முக்தி அல்லது மோட்சம் என்பது ஆன்மாவை உங்களுக்குள் அறிந்து உணர்ந்துக் கொள்வதாகும். ஒருமுகமாக கவனம் செலுத்துங்கள்; உங்களுக்கு அது கிடைக்கும். உங்கள் மனம் தான் பிறப்பு இறப்பு சுழற்சி.
பக்தர்: என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது?
மகரிஷி: ஏதாவது ஒரு பொருளின் மேல் உங்கள் கவனத்தைப் பொருத்துங்கள்; அதை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்க முயலுங்கள். எல்லாம் சரியாக ஆகி விடும்.
பக்தர்: ஒருமுக கவனம் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
மகரிஷி: பயிற்சி செய்துக் கொண்டே இருங்கள். உங்கள் ஆழ்ந்த கவனம் உங்கள் மூச்சு போல எளிதாகி விடும். அதுவே உங்கள் சாதனைகளில் எல்லாவற்றிலும் கிரீடமாக ஆகி விடும்.
பக்தர்: புலன் சம்பந்தமானவையிலிருந்து தவிர்ப்பு, சுத்த உணவு இவை உபயோகமாக இருக்காதா?
மகரிஷி: ஆமாம். இவையெல்லாம் நல்லது தான். (பிறகு மகரிஷி ஆழ்ந்த கவனத்துடன் மௌனமாக வெற்றிடத்தை கூர்ந்து கவனிக்கிறார். இவ்வாறு பக்தருக்கு ஒரு உதாரணம் அளித்துக் காட்டுகிறார்.)
பக்தர்: எனக்கு யோக மார்க்கம் தேவையில்லையா?
மகரிஷி: ஒருமுக கவனத்திற்கு வழிகாட்டுவதையன்றி அது வேறென்ன ?
பக்தர்: ஒருமுக கவனத்திற்கு உதவ ஏதாவது சகாயங்கள் உள்ளதா?
மகரிஷி: மூச்சுக் கட்டுப்பாடு முதலியவை இத்தகைய சகாயங்கள்.
பக்தர்: கடவுளின் தரிசனம் கிடைக்க முடியாதா?
மகரிஷி: ஆமாம். நீங்கள் இதை அதைப் பார்க்கிறீர்கள். கடவுளை ஏன் பார்க்கக் கூடாது? ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் கடவுள் என்றால் என்ன என்று நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் எப்போதும் கடவுளையே தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதை அறிவதில்லை. நீங்கள் கடவுள் என்றால் என்ன என்று கண்டு பிடியுங்கள். ஜனங்கள் பார்க்கிறார்கள், எனினும் பார்ப்பதில்லை; ஏனெனில் அவர்கள் கடவுளை அறிவதில்லை.
பக்தர்: புனிதமான சொற்கள், மந்திர ஜபங்கள், அதாவது ராமர் அல்லது கிருஷ்ணரின் பெயர், இவற்றை, நான் கடவுள் உருவங்களை வழிபடும்போது சொல்லிக் கொண்டே இருக்கலாமா?
மகரிஷி: மனதில் ஜபிப்பது மிகவும் நல்லது. அது ஆழ்நிலை தியானத்திற்கு உதுவும். மீண்டும் மீண்டும் ஜபிப்பதால், மனம் அதனுடன் இணைந்து போய் விடுகிறது. அதன் பிறகு உண்மையில் பூஜை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிய வருகிறது. அது என்னவென்றால், ஒருவரின் தனித்தன்மையை வழிபடும் ஒன்றில் இழந்து விடுவதாகும்.
பக்தர்: பரமாத்மா எப்போதும் நம்மை விட வேறுபட்டவரா?
மகரிஷி: அது தான் பொதுவான கருத்து. ஆனால் அது பொய். உங்களை விட வித்தியாசமில்லாதவர் என்று அவரை நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் ஆன்மாவும், கடவுளும் ஒன்றாவதை அடைவீர்கள்.
பக்தர்: அத்வைதம் என்ற சித்தாந்தம் கடவுளுடன் ஒன்றாக ஆவதற்கு ஒரு வழியில்லையா?
மகரிஷி: ஆவது என்பது எங்கிருக்கிறது? யோசிப்பவர் எல்லா சமயத்திலும் “மெய்மையே” தான். அவர் கடைசியில் இந்த உண்மையை உணருகிறார். சில சமயங்களில், தூக்கத்திலும், கனவிலும், நமது தனித்தன்மையை மறந்து விடுகிறோம். ஆனால் கடவுள் முடிவில்லாத, நிலையான பிரஞ்னை உணர்வு.
பக்தர்: கடவுள் உருவ வழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா?
மகரிஷி: அறிவுரை இல்லாமல் எப்படித் தொடங்கினீர்கள்?
பக்தர்: புராணங்களிலிருந்து.
மகரிஷி: ஆமாம். யாரோ கடவுளைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறார்கள்; அல்லது பகவானே ஒருவருக்குச் சொல்கிறார். இரண்டாவது விதத்தில், கடவுளே ஒருவரின் குரு ஆவார். குரு யாராயிருந்தால் என்ன? நாம் உண்மையில் குரு அல்லது பகவானுடன் இணைந்துள்ளோம். குரு கடவுள் தான். இதை இறுதியில் ஒருவர் கண்டு பிடித்துக் கொள்கிறார். மனித-குருவுக்கும் கடவுள்-குருவுக்கும் வித்தியாசம் கிடையாது.
பக்தர்: நாம் புண்ணியம் செய்திருந்தால் அது நம்மை விட்டு விலகாது என்று நம்புகிறேன்.
மகரிஷி: இந்த விதத்தில் உங்கள் பிராரப்தம் நிறைவேறும்.
பக்தர்: வழி காட்டுவதற்கு ஒரு விவேகமான குரு ஒரு பெரும் உதவி இல்லையா?
மகரிஷி: ஆமாம். இப்போது கிடைத்துள்ள ஒளியை உபயோகித்துக் கொண்டு நீங்கள் எத்தனம் செய்துக் கொண்டே போனால், நீங்கள் உங்கள் குருவை சந்திப்பீர்கள். ஏனெனில் அவரே உங்களைத் தேடிக் கொண்டிருப்பார்.
பக்தர்: ப்ரபத்தி அல்லது சுய சரணாகதிக்கும், ஞானிகளின் யோக மார்க்கத்திற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
மகரிஷி: ஞான மார்க்கமும், ப்ரபத்தி அல்லது சுய சரணாகதியும் ஒன்றே தான். சுய விசாரணையைப் போலவே சுய சரணகதியும் ஆன்ம சுய சொரூப ஞானத்திற்கு வழி காட்டுகிறது. பூரண சுய சரணகதி என்றால், அதற்குப் பிறகு உங்களுக்கு “நான்” என்னும் எண்ணமே இருக்காது. பிறகு உங்கள் ஆழ்ந்த மனப்போக்குகள் எல்லாம் சுத்தமாக நீக்கப்படும்; நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள். இந்த இரண்டு வித மார்க்கத்திலும், இறுதியில் நீங்கள் ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்கக் கூடாது.
பக்தர்: நம்முடைய செயல்களினால் நாம் சொர்க்கத்திற்குப் போவதில்லையா?
மகரிஷி: அதுவும் இப்போதுள்ள உள்ளமை போல் தான். ஆனால், நாம் யார் என்று சுய விசாரணை செய்து, ஆன்ம சுய சொரூபத்தை கண்டுப் பிடித்துக் கொண்டால், சொர்க்கம் போன்றவற்றைப் பற்றி நினைப்பதற்கு என்ன அவசியம்?
பக்தர்: மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நான் முயலக் கூடாதா?
மகரிஷி: ஆமாம். யார் பிறந்திருக்கிறார், உள்ளமையைப் பற்றி யாருக்கு இப்போது இன்னல் உள்ளது என்று கண்டு பிடியுங்கள். நீங்கள் தூங்கும்போது, தற்போதைய உள்ளமை, அல்லது மறுபிறப்புகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்கிறீர்களா? எனவே எங்கிருந்து தற்போதைய இன்னல் ஏற்படுகிறது என்று கண்டுபிடியுங்கள்; அங்கு தான் பிரச்சனைக்கு தீர்வும் உள்ளது. பிறகு பிறப்பு, தற்போதைய இன்னல், துன்பம், போன்றவையெல்லாம் இல்லை என்று நீங்கள் கண்டு அறிவீர்கள். எல்லாம் பூரண பேரானந்தம் தான். உண்மையில் நாம் மறுபிறப்பிலிருந்து விடுதலை அடைந்தவர்கள் தான். பின் ஏன் மறுபிறப்பைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்?
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 31.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா