Why do you say you are a sinner
31. மோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணாகதி, பிரச்சனை தீர்வு
29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன

“நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்


திரு நடேச அய்யர்,
தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், மகரிஷியைக் கேட்டார்: “ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, அவர்களது புனித க்ஷேத்திரங்களான கைலாசம், வைகுண்டம், இவையெல்லாம் மெய்யானவையா? 

மகரிஷி.: நீங்கள் இந்த உடலில் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை. 

பக்தர்.: என் உடல் போல், அவர்களுக்கு ஒரு நிகழ்வு சார்ந்த, வியவகார உள்ளமை இருக்கிறதா? அல்லது அவர்கள் முயலின் கொம்பு போல் கட்டுக்கதையா?

மகரிஷி.: அவர்கள் உள்ளனர்.

பக்தர்.: அப்படியானால், அவர்கள் எங்கோ இருக்க வேண்டும். எங்கே இருக்கின்றனர்? 

மகரிஷி.: அவர்களை பார்த்தவர்கள் அவர்கள் எங்கோ இருப்பதாகச் சொல்கின்றனர். எனவே நாம் அவர்களது சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பக்தர்.: அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

மகரிஷி.: உமக்குள்.

பக்தர்.: அப்படியானால், அது நான் ஏற்படுத்தி கட்டுப்படுத்தக்கூடும் ஒரு கருத்து தானா?

மகரிஷி.: எல்லாமே அது போல் தான் உள்ளது.

பக்தர்.: முயலின் கொம்பு, அல்லது பாலைவனத்தைப் போல பாதி உண்மையானவை, இவை போன்ற வெறும் கட்டுகதைகளை நான் உண்டாக்கலாம்; ஆனாலும் என் கற்பனையை விட்டு அகன்று உண்மைகளும் உள்ளன. ஈஸ்வரரும் விஷ்ணுவும் அது போல் உள்ளனரா? 

மகரிஷி.: ஆமாம்.

பக்தர்.: அவர்கள் பிரளயத்திற்கு, பிரபஞ்ச கலைப்பிற்கு உட்பட்டவர்களா? 

மகரிஷி.: ஏன்? ஒரு மனிதர், ஆன்மாவை உணர்ந்து, பிரளயத்தைக் கடந்து, முக்தியடைகிறார். அவரை விட எல்லையற்ற அறிவும், விவேகமும், சக்தியும் உள்ள ஈஸ்வரர் ஏன் அப்படி செய்ய முடியாது?  

பக்தர்.: அதே போல், தேவர்களும், பேய் பிசாசுகளும் கூட இருக்கின்றனவா? 

மகரிஷி.: ஆமாம்.

பக்தர்.: சைதன்ய பிரம்மனை, மிக்க உயர்வான சொரூபத்தை மனதில் கருதுவது எப்படி? 

மகரிஷி.: “எது உள்ளதோ அது”, என்ற விதத்தில்.

பக்தர்.: அது சுயப் பிரகாசம் என்று நினைக்கப்பட வேண்டுமா? 

மகரிஷி.: அது வெளிச்சத்தையும், இருட்டையும் கடந்ததாகும். ஒரு தனிப்பட்ட ஜீவன் இரண்டையும் பார்க்கிறது. ஒரு ஜீவன் வெளிச்சத்தையும் இருட்டையும் பார்க்க ஆன்மா தெளிவூட்டுகிறது. 

பக்தர்.: “நான் உடல் இல்லை, காரியஸ்த்தரும் இல்லை, அனுபவிப்பவரும் இல்லை” என்று அது உணரப்பட வேண்டுமா? 

மகரிஷி.: ஏன் இந்த எண்ணங்கள்?  “நாம் மனிதர்கள்” என்று இப்போது நாம் யோசிக்கிறோமா என்ன? அப்படி யோசிக்காமல் இருந்தால், நாம் மனிதர்களாக இல்லாமல் போகிறோமா என்ன? 

பக்தர்.: பின், மறை நூல் வாக்கியத்தின் படி, “இங்கு வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை” என்று ஒருவர் உணர வேண்டுமா?

மகரிஷி.: அது கூட ஏன்? 

பக்தர்.: “நான் தான் மெய்” என்று நினைத்தால் அது போதுமா?

மகரிஷி.: எல்லா எண்ணங்களும் சொரூப ஞானத்திற்கு ஒவ்வாதது. நம்மைப் பற்றிய எண்ணங்களையும், மற்ற எண்ணங்களையும் விலக்கி வைப்பது தான் சரியான நிலை. எண்ணம் என்பது ஒன்று, ஆன்ம சொரூப ஞானம் என்பது வேறொன்று.

பக்தர்.: ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தில் உடலைக் கண்ணுக்குத் தெரியாமல் மறையச் செய்வது அவசியம் இல்லையா? அல்லது அனுகூலமாவது இருக்கும், இல்லையா?

மகரிஷி.: ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன, உடலா? 

பக்தர்.: இல்லை. ஆனால் மேம்பட்ட ஆன்மீகம் உடலில் ஒரு மாறுதலை உண்டாக்க வேண்டும், இல்லையா? 
மகரிஷி.: உடலில் என்ன மாறுதல் விரும்புகிறீர்கள்? ஏன் விரும்புகிறீர்கள்? 

பக்தர்.: கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து இருப்பது உயர்தரமான ஞானத்திற்கு சான்று இல்லையா? 

மகரிஷி.: அப்படியானால், மற்றவர்களின் கண்களுக்குப் புலப்பட்டவாறு, பேசியும், எழுதியும் தங்கள் வாழ்வை கடத்தியும் சென்றவர்கள் எல்லாம் ஞானமற்றவர்கள், அஞ்ஞானிகள் என்று கருதப்பட வேண்டும்! 

பக்தர்.: ஆனால், வசிஷ்ட முனிவரிடமும், வால்மீகி முனிவரிடமும் இத்தகைய சித்திக்கள் இருந்ததே?

மகரிஷி.: அவர்களது ஞானத்துடன் கூடவே இத்தகைய சித்திக்களையும் வளரச் செய்திருப்பது அவர்களுடைய பிராரப்தம் அல்லது விதியாக இருந்திருக்கலாம். எது முக்கியமில்லையோ, எது ஞானத்திற்குத் தடங்கலாக இருக்கிறதோ, அதை ஏன் நீங்கள் குறிக்கோளாக கொள்ள வேண்டும்?  தனது உடல் மற்றவரின் கண்ணுக்குப் புலப்படுவதால், ஒரு ஞானி ஒடுக்கப்படுவதாக உணர்கிறாரா? 

பக்தர்.: இல்லை. 

மகரிஷி.: ஒரு  மந்திரவாதி அல்லது ஹிம்னடைஸ் செய்பவர் தன்னை மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் செய்துக் காட்ட முடியும். அதனால் அவர் ஒரு ஞானி ஆவாரா?

பக்தர்.: இல்லை.

மகரிஷி.: கண்ணுக்குத் தெரிவதும், தெரியாமல் மறைவதும் “காண்பவர்” ஒருவரைக் குறிப்பிடுகிறது. அந்தக் “காண்பவர்” யார்? அதற்கு முதலில் விடை காணுங்கள். மற்ற விஷயங்கள் முக்கியமில்லை. 

பக்தர்.: பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாட்டைப் பற்றி வேதங்களில் முரண்பட்ட விஷயங்கள் உள்ளன. ஒரு இடத்தில் விண்வெளி தான் முதலில் உருவானது என்று சொல்லப்படுகிறது. இன்னொரு இடத்தில் பிராணன் அல்லது முக்கிய சக்தி என்றும், மற்றொரு இடத்தில் தண்ணீர் என்றும், மேலும் வேறு ஒரு இடத்தில் இவை இல்லாமல் ஏதோ இன்னொன்று என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இவற்றை எல்லாம் சமரசப் படுத்துவது எப்படி? இவை வேதங்களின் நம்பகத்தன்மைக்குக் கெடுதல் விளைவிப்பதில்லையா? 

மகரிஷி.: வெவ்வேறு ஞானிகள், உண்மைகளின் வெவ்வேறு அம்சங்களை, வெவ்வேறு சமயங்களில் கண்டார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை உறுதிப்படுத்தினார்கள். அவர்களின் முரண்பட்ட அறிக்கைகளைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? அழிக்க முடியாத ஆன்மாவின் தன்மையைப் பற்றிக் கற்பித்து, நாம் “அது” தான் என்று சுட்டிக்காட்டுவது தான் வேதத்தின் மிகவும் முக்கியமான குறிக்கோள். 

பக்தர்.: அந்தப் பகுதியில் எனக்கு திருப்தி உள்ளது. 

மகரிஷி.: பின், மற்றவற்றை எல்லாம், “அர்த்த வாதம்”, அதாவது சகாயமான வாதங்கள் என்று நடத்துங்கள். அல்லது, பொருள்கள், விஷயங்கள், இவற்றின் தொடக்கத்தைத் தடம்பின்பற்றிப் பார்க்க விரும்பும் அறியாமையுள்ள மக்களுக்காக உள்ள விளக்கங்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். 

பக்தர்.: நான் ஒரு பாவி. நான் மத வழிபாடுகள், சடங்குகள், ஹோமங்கள் போன்ற எதுவும் செய்வதில்லை. இதன் காரணமாக எனக்கு துன்பம் நிறைந்த மறுபிறப்புகள் இருக்குமா? கருணை காட்டி என்னைக் காப்பாற்றுங்கள்! 

மகரிஷி.: “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்? கடவுளின் மீதுள்ள உங்கள் நம்பிக்கை, உங்களை மறுபிறவிகளிலிருந்து  காக்க போதுமானது. எல்லா சுமையையும் கடவுள் மேல் போட்டு விடுங்கள். 

திருவாசகத்தில் சொல்லப் படுகிறது : “நான் ஒரு நாயை விட மோசமாக இருந்தாலும், நீங்கள் அருள்கூர்ந்து என்னைக் காப்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.  இந்த பிறப்பு இறப்பு என்னும் மாயத் தோற்றம் உங்களால் தான் பராமரிக்கப் படுகிறது. மேலும், சலித்து எடுப்பதற்கும், மதிப்பிடுவதற்கும் நான் யார்? நானா இங்கு கடவுள்? ஓ மஹேஸ்வரா! பல உடல்களில், பிறப்பு இறப்புகளில் என்னை உருட்டுவதோ, அல்லது உனது சரணத்தில் என்னை நிலை நாட்டி வைத்துக் கொள்வதோ, உனது ஆக்ஞை தான்.”

மகரிஷி தொடர்ந்து சொன்னார்: எனவே, நம்பிக்கை வைத்துக் கொள்ளுங்கள், அது உங்களைக் காக்கும். 

பக்தர்.: ஐயா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், சில கஷ்டங்கள் எதிர்படுகின்றன. நான் ஒருமுக சிந்தனை செய்தபின், பலவீனமும், மயக்கமும் அல்லல் படுத்துகின்றன. 

மகரிஷி.: மூச்சுக் கட்டுப்பாடு, பிராணாயாமம் சரியான முறையில் செய்யப்பட்டால், அது ஒருவரின் வலிமையைப் பெருக்கும். 

பக்தர்.: எனக்கு என்னுடைய தொழில் பணிகள் உள்ளன. இருந்தாலும் நான் இடைவிடாத தியானத்தில் இருக்க விரும்புகிறேன். இவை இரண்டும் முரண்படுமா? 

மகரிஷி.: முரண்பாடு ஒன்றும் இருக்காது. இரண்டையும் செய்தவாறு, உங்கள் சக்திகளை வளர்க்கும் போது, இரண்டையும் கவனிக்க உங்களால் இயலும். உங்கள் வியவாகரத்தை நீங்கள் ஒரு கனவு போல் நோக்கத் தொடங்குவீர்கள்.

பகவத் கீதை சொல்கிறது : எது எல்லா உயிர்களுக்கும் இரவாக உள்ளதோ, அது ஒரு ஒழுக்கமான மனிதருக்கு விழிப்பு நேரமாகும். மற்ற எல்லா உயிர்களும் விழித்திருக்கும் போது, மெய்மையைக் காணும் ஞானிக்கு அது இரவாகும்.  (11:69.)

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 30.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

31. மோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணாகதி, பிரச்சனை தீர்வு
29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன
30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!