Can a householder attain self-realization ?
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்

கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா

பக்தர்: மோட்சத்திற்காக உள்ள திட்டத்தில் கிருகஸ்தர் எப்படி செயல்பட வேண்டும்? விமோசனம் பெற அவர் ஒரு சந்நியாசி ஆகத்தான் வேண்டுமா? 

மகரிஷி: நீங்கள் ஒரு கிருகஸ்தர் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் வேளியேறி சந்நியாசியாக ஆனால், சந்நியாசி என்ற எண்ணங்கள் இதே போல உங்களை தொல்லைப்படுத்தும். நீங்கள் தொடர்ந்து இல்லத்தில் வசித்தாலும், அல்லது அதைத் துறந்து காட்டுக்குப் போனாலும், உங்கள் மனம் உங்களைத் தொந்தரவு செய்யும். எண்ணங்களின் மூலம் ‘தான்மை’ (ego).  அது உடலையும், உலகையும் உருவாக்கி, உங்களை கிருகஸ்தராக இருப்பதாக நினைக்க வைக்கிறது. 

நீங்கள் துறவியானால், அது கிருகஸ்தர் என்ற எண்ணத்திற்கு பதிலாக சந்நியாசி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வைக்கும்; இல்லத்தின் சூழ்நிலைகளை காட்டின் சூழ்நிலைகளாக மாற்றி வைக்கும். ஆனால், மனதின் தடங்கல்கள் எப்போதும் உங்களுக்கு இருக்கிறது. அவை புதிய சுற்றுப்புறங்களில் இன்னும் மிகுதியாக அதிகரிக்கவும் செய்யும்.  சுற்றுப்புறத்தை மாற்றுவதால் ஒரு பயனும் இல்லை. ஒரே ஒரு தடை தான் உள்ளது, அது மனம். வீட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், மனத்திலிருந்து மீள வேண்டும். காட்டில் உங்களால் செய்ய முடிந்தால், வீட்டில் அதை ஏன் செய்யக் கூடாது? எனவே, எதற்காக சுற்றுப்புறத்தை மாற்ற வேண்டும்? எந்த சுற்றுப்புறமாக இருந்தாலும், உங்களுடைய முயற்சிகள் இப்போது கூட செய்யப்படலாம். 

பக்தர்: உலக வேலைகளில் ஈடுபட்டவாறே ‘பரிபூரண மோன நிலை’ அனுபவிக்க முடியுமா? 

மகரிஷி: ‘நான் வேலை செய்கிறேன்’ என்ற உணர்ச்சி தான் தடங்கல். உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: ‘வேலை செய்வது யார்?’. நீங்கள் யார் என்று நினவு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு வேலை உங்களைப் பிணிக்காது; அது தன்னியக்கமாகவே நடைபெற்று செல்லும்.  வேலை செய்வதற்கோ, அல்லது துறப்பதற்கோ முயற்சி செய்யாதீர்கள்; உங்கள் முயற்சி தான் பிணைப்பு.  

எது நடக்கவேண்டுமென்று தலைவிதியால் நியமிக்கப் பட்டுள்ளதோ, அது நடந்தே தீரும். நீங்கள் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று தலைவிதியால் நியமிக்கப்பட்டிருந்தால், நீங்கள் தீர்மானமாக தேடினால் கூட வேலை கிடைக்க முடியாது. நீங்கள் தொழிலில் ஈடுபடவேண்டும் என்று தலைவிதியால் நியமிக்கப்பட்டிருந்தால், உங்களால் அதை தவிர்க்க முடியாது; அதில் ஈடுபட நிர்ப்பந்தப் படுத்தப் படுவீர்கள். எனவே, இதை ‘உயர்ந்த சக்தியிடம்’ விட்டு விடுங்கள்; உங்கள் இஷ்டப்படி  துறக்கவோ அல்லது தக்க வைத்துக் கொள்ளவோ இயலாது. 

(Maharshi’s Gospel)
மகரிஷியின் போதனை
வேலையும் துறவும்
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்
கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!