Sacred mantras
9. ஞானியும் குழந்தையும்
7. மாய வித்தைகள்

புனித மந்திரங்கள்

பக்தர்: “தற்செயலாக கிடைத்த புனித மந்திரங்களை ஜபிப்பதால் எவராக இருந்தாலும் அவருக்கு  அதன் பலன் கிடைக்குமா?”

மகரிஷி: “இல்லை. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும். 

மகரிஷி இதை பின்வறும் கதையின் மூலம் விளக்கினார். 

ஒரு மன்னர் தமது மந்திரியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு மந்திரி தமது ஜபத்தில் ஈடுபட்டிருப்பதாக மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது.  மன்னர் மந்திரிக்காக காத்திருந்து, பின்பு அவரைக் கண்ட போது, ஜபத்தைப் பற்றி, அது எந்த ஜபம் என்று கேட்டார். அது எல்லாவற்றிலும் மேன்மையான புனிதமான காயத்ரி ஜபம் என்று மந்திரி சொன்னார். தமக்கு அந்த மந்திரத்தை தீக்ஷை செய்து அளிக்கும்படி மன்னர் மந்திரியைக் கேட்டார். ஆனால் மந்திரி அப்படி செய்ய தமது இயலாமையை ஒப்புக் கொண்டார்.

எனவே, மன்னர் அந்த மந்திரத்தை வேறொருவரிடமிருந்து கற்றுக்கொண்டார். பின்பு மன்னர் மந்திரியை சந்தித்தபோது, கற்றுக்கொண்ட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, அது சரியா என்று மந்திரியிடம் கேட்டார். மந்திரம் சரியானது தான், ஆனால் மன்னர் அதைச் சொல்வது சரியில்லை என்று மந்திரி பதிலளித்தார். ஏனென்று மன்னர் அதன் காரணத்தை கேட்டபோது, மந்திரி அருகிலிருந்த பணியாளரிடம் மன்னரைப் பிடித்து கைது செய்யும்படி கட்டளையிட்டார். கட்டளை கீழ்படியப் படவில்லை. மந்திரி மீண்டும் கட்டளையிட்டார். பின்பும் கட்டளைப் புறக்கணிக்கப் பட்டது. இதுபோல் பலமுறை மீண்டும் மீண்டும் மந்திரி கட்டளையிட்டார். ஆனாலும், பணியாளர் கட்டளையை சட்டை செய்யவில்லை.

இந்த கட்டளைகளால் மன்னர் மிகவும் கோபம் கொண்டார். உடனே பணியாளரிடம் மந்திரியைப் பிடித்து கைது செய்யும்படி ஆணையிட்டார். உடனே அந்த ஆணை நிறைவேற்றப் பட்டது.  இதைக் கண்டு மந்திரி சிரித்து விட்டு, இந்த நிகழ்ச்சியே மன்னர் கேட்ட கேள்விக்கு விளக்கமாகும் என்று சொன்னார்.

“அதெப்படி?” என்று மன்னர் வினவினார். மந்திரி இவ்வாறு பதிலளித்தார்: “கட்டளை ஒன்றே தான், அதைக் கடைப்பிடிக்கும் பணியாளரும் ஒருவரே தான். ஆனால் அதிகாரம் வெவ்வேறு. நான் கட்டளையிட்ட போது அதன் விளைவு ஒன்றுமே இல்லை. ஆனால் நீங்கள் ஆணையிட்ட போது, உடனடியாக விளைவு ஏற்பட்டது. அதே போலத்தான் புனித மந்திரங்களும்.”

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 8.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

9. ஞானியும் குழந்தையும்
7. மாய வித்தைகள்
8. புனித மந்திரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!