Ramana Maharshi

ஆன்ம சொரூபத்தின் முகம்

ஆன்ம சொரூபம் சச்சிதானந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு பக்தருக்கு, வழிகாட்டுதலுக்காகவும், ஊக்கம் அளிப்பதற்காகவும், ஆன்ம சொருபத்தை அறிந்து உணர்ந்தவரும், ஆழ்ந்த அமைதியில் உறைபவருமான ஒரு குருவின் அருள், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.  மேலும், ஆழ்நிலை ஆன்மாவை ஒரு கீர்த்தி பொருந்திய பிரகாசமான முகத்துடன் இணைக்கும்போது, அது மிகுந்த உதவி அளிக்கிறது. திரு ரமண மகரிஷியின் முகம், இத்தகைய புனிதமான முகம். அது ஆன்ம சொரூபத்தின் முகம்.   

கடவுள், குரு, ஆன்மா – இவைகளுக்குள் ஒரு வித்தியாசமும் கிடையாது என்று ரமண மகரிஷி பல முறை சொல்லியிருக்கிறார். கடவுள் அன்பான பக்தரின் மீது பரிவு கொண்டு, தம்மை பக்தரின் தகுதிக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்துகிறார் என்று அவர் சொன்னார். கடவுள் ஒரு குருவின் ரூபத்தை எடுத்துக் கொண்டு பக்தருக்கு தோன்றுவதாகவும், மனதை உட்புறம் திருப்ப வெளிப்புறத்திலிருந்து தள்ளியும், உட்புறத்திலிருந்து மனதை ஆன்மாவின் புறத்தில் இழுத்தும், மனம் அமைதி அடைய உதவுகிறார், என்று மகரிஷி விளக்கினார். அதோடு கடவுள் குருவின் வடிவில், பக்தர்கள் தங்கள் நடைமுறைகளின் குறைகளை அறிய உதவுகிறார்; மேலும் அவர்கள் தம் ஆன்ம சொரூபத்தை அறியும் வரை, அவர்களை சரியான பாதையில் செல்ல வழி காட்டுகிறார்,  என்றும் மகரிஷி தெரிவித்தார். 

எனவே, மாபெரும் குருவானவர், உள்ளுக்குள் உறைவதுடன், வெளிப்புறமும் தொன்றி, அறியாமையை அகற்றவும், மாய உலகுடன் உள்ள பிணைப்பிலிருந்து முக்தி தரவும், ஆழ்ந்த அமைதி கொண்ட ஆன்ம சொருபத்தை உணரவும், நமக்கு அளவில்லா உதவியும், தீவிரமான வழிகாட்டுதலும் தந்து அருள் பொழிகிறார். பகவான் திரு ரமண மகரிஷி இத்தகைய கருணையான, அன்பான குருவும் ஆசானும் ஆவார். எனவே, அவரது முகம், ஆன்ம சொரூபத்தின் முகம்.  

ரமண மகரிஷியின் புகழ் வாய்ந்த பக்தர், திரு பால் ப்ரன்ட்டன், ரமண மகரிஷியைப் பற்றியும், அவரது கூர்ந்த நோக்கைப் பற்றியும், அவரிடமிருந்து வந்த சக்திவாய்ந்த ஆழ்ந்த உணர்வுகளைப் பற்றியும், தமது அனுபவங்களையும், உணர்ச்சிகளையும் எழுதியுள்ளார். “ரகசிய இந்தியாவில் தேடுதல்” என்ற அவரது நூலில் அவர் எழுதிய சொற்கள், ரமண மகரிஷி அவர் மீது ஏற்படுத்திய, அதிசயமானதும், அமைதி தருவதும், வாழ்க்கையையே மாற்றும் விதமான  விளைவுகளை தெளிவாக்குகின்றன. இதுவரை அவர் சந்தித்த எல்லா ஆன்மீக ஆசான்களிலும், திரு ரமண மகரிஷி எப்படி தனித்து நின்றார் என்பதை பற்றி அவர் எழுதியதிலிருந்து, சில பகுதிகளை மட்டும் இங்கு வழங்க விரும்புகிறேன்.

திரு பால் ப்ரன்ட்டன் இவ்வாறு எழுதுகிறார். 

பால் ப்ரன்ட்டன் சொல்கிறார்… ஆரம்பம் ~~~~~~~~~~~~~~

“சில நாட்களுக்குள், எனது கப்பல் ஐரோப்பாவிற்கு கிளம்பி விடும். கப்பலில் ஏறியதும், தத்துவத்திற்கு விடை கொடுப்பேன், என்னுடைய கிழக்கு திசையின் விசாரணையை கும்மிருட்டெனும் தண்ணீரில் தூக்கி எறிந்து விடுவேன்.  

ஆனால்,  என் மனக்குரல், அதனிடமிருந்து தப்ப முடியாமல் என்னை விடாப்பிடியாக தொல்லைப் படுத்துகிறது. 

“முட்டாளே!” என்று மனக்குரல் இகழ்ச்சியுடன் என்னிடம் வீசுகிறது.  “இது தான் உன்னுடைய வருஷக்கணக்கான விசாரணைக்கும் பேரார்வத்திற்கும் கிடைக்கும் காலியான விளைவா?  நீயும் மற்ற மனிதரைப் போல, கற்றதையெல்லாம் மறந்து விட்டு, உன்னுடய நல்லுணர்வுகளையெல்லாம், ஆழ்ந்த தான்மை அகங்காரத்திலும், சிற்றின்பத்திலும் மூழ்கடிக்கப் போகிறாயா? “

தோல்வியினால் ஏற்பட்ட திக்கற்ற நிலையை வாதித்து, நான் இந்த கருணையற்ற உள்முகக் குரலிடம் என்னை பாதுகாத்துக் கொள்ள விழைகிறேன். 

குரல் பதிலளிக்கிறது : “நீ இந்தியாவில் இதுவரை சந்தித்த மனிதர்களில் யாருமே நீ நாடும் ஆசானாக இருக்க முடியாது என்று உனக்கு உறுதியாகத் தெரியுமா?”

என் மனதின் கண்ணில், பலவித முகங்களால் அமைந்த ஒரு நீண்ட கலைக் காட்சி தொகுப்பு கடந்து செல்கிறது… நட்பார்ந்த தோழமையான முகங்கள், முட்டாள்தனமான முகங்கள், அறிவுமிக்க முகங்கள், பயங்கரமான முகங்கள், தீய முகங்கள், புரிந்துக் கொள்ள கடினமான முகங்கள்.

இவற்றில், ஒரு தனிப்பட்ட முகம், தன்னை ஊர்வலத்திலிருந்து தனியாக விடுவித்துக் கொண்டு, அதன் கண்கள் அமைதியாக என் கண்களுக்குள் கூர்ந்து நோக்கியவாறு, விடாப்பிடியாக என் முன்னால் வட்டமிடுகிறது.  அது, அமைதியான, அசையாமல் நிலையாக நிற்கும் சிலை போல உள்ள மகரிஷியின் முகத்தோற்றம் தான். இவர் தன் வாழ்க்கையை, தெற்கில் உள்ள தெய்வீக கலங்கரை விளக்கைக் கொண்ட மலையின் மீது கழித்த ஞானி. நான் அவரை மறக்கவே இல்லை… 

கும்மிருட்டான வெற்றிடத்தில் ஒரு ஒளியாக வந்து பின்பு மறைந்து விடும் ஒரு நட்சத்திரம் போல், அவர் என் வாழ்வில் கடந்து சென்றதை இப்போது நான் உணர்கிறேன். என் உள்முக கேள்வியாளருக்கு பதில் தந்து நான் ஒத்துக் கொள்கிறேன் – உலகத்தில் கிழக்கிலும் மேற்கிலும் நான் இதுவரை சந்தித்தவர்களில் எல்லாம், மகரிஷி தான் என்னை மிகவும் கவர்ந்து என் மனதில் பதிந்துள்ளார். ஆனால், அவர் ஒட்டாமல் பற்றற்று இருப்பது போலவும், ஐரோப்பிய மனப்போக்குக்கு வெகு தூரத்திலும், நான் அவரது மாணவனாக ஆவேனா இல்லையா என்பதைப் பற்றி அலட்சியமாக இருப்பது போலவும் தோன்றினார்.  

என் மௌனக் குரல் இப்போது மிகத் தீவிரமாக என்னைப் பிடித்துக் கொள்கிறது. 

மௌனக் குரல்: “அவர் அலட்சியமாக இருந்தார் என்று நீ எப்படி உறுதியாக இருக்க முடியும்? நீ ரொம்ப நாள் தங்கவில்லை; அவசரமாக அகன்று விட்டாய்.”

ப்ரன்ட்டன்: நான் பலவீனமாக ஒத்துக் கொண்டேன். ‘ஆமாம். நான் நானே எனக்காக முடிவு செய்த திட்டத்தை செயல்படுத்த வேண்டியிருந்தது. நான் வேறு என்ன செய்திருக்க முடியும்?’ 

மௌனக் குரல்: “இப்போது நீ ஒன்று செய்ய முடியும். அவரிடம் திரும்பிப் போ.”

ப்ரன்ட்டன்: “நான் எப்படி என்னை அவர் மீது பலவந்தமாக திணித்துக் கொள்ள முடியும்?”

மௌனக் குரல்: “உன்னுடைய சொந்த உணர்ச்சிகள், ஆன்ம விசாரணையின் வெற்றியை விட குறைவான முக்கியத்துவம் உள்ளவை. மகரிஷியிடம் திரும்பிப் போ.”

ப்ரன்ட்டன்: “அவர் இந்தியாவின் மறு கோடியில் உள்ளார். நானோ மறுபடியும் இங்கும் அங்கும் அலைவதைத் தொடங்குவதற்கு  முடியாமல் மிகவும் நோயுற்றுள்ளேன். “

மௌனக் குரல்: “அதனால் என்ன? உனக்கு ஒரு குரு தேவைப்பட்டால் அதற்கான விலையை கொடுத்துத்தானாக வேண்டும்.”

ப்ரன்ட்டன்: “ஒரு குரு வேண்டுமா என்று இப்போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், எதை வேண்டுவதற்கும் நான் மிகவும் களைப்படைந்திருக்கிறேன். மேலும், நான் நீராவி கப்பலுக்கு ஏற்கனவே ஒரு படுக்கை இடம் ஏற்பாடு செய்து விட்டேன்.  இன்னும் மூன்று நாட்களில் கடல் பயணத்தில் செல்ல வேண்டும். ஏற்பாடுகளை மாற்றுவதற்கு இப்போது மிகுந்த நேரம் கடந்து விட்டது. “

ப்ரன்ட்டன்: மௌனக் குரல் என்னை இகழ்ச்சி செய்கிறது.

மௌனக் குரல்: “ஓ, மிகவும் தாமதமாகி விட்டதா? உன்னுடைய நற்பண்பு  உணர்வுகளுக்கு என்ன ஆயிற்று? நீ சந்தித்தவர்களுக்குள் மகரிஷி தான் சிறந்தவர், மேன்மையானவர் என்று ஒப்புக் கொள்கிறாய். ஆனால், அவரை சிறிதளவும் அறிந்துக் கொள்வதற்கு முன்னால், அவரை விட்டு விட்டு ஓடிச் செல்ல விரும்புகிறாய். அவரிடம் திரும்பிச் செல்.”

ப்ரன்ட்டன்: நான் கடுகடுப்புடனும், பிடிவாதமாகவும் இருக்கிறேன். மூளை “ஆமாம்” என்கிறது. ஆனால், ரத்தம் “இல்லை” என்கிறது. 

மேலும் ஒரு முறை மௌனக் குரல் என்னை தூண்டுகிறது :

மௌனக் குரல்: “உன்னுடைய திட்டங்களை மாற்று. நீ கட்டாயம் மகரிஷியிடம் திரும்பிப் போகத்தான் வேண்டும்.”

ப்ரன்ட்டன்: பிறகு, என்னுள் ஆழத்திலிருந்து ஏதோ ஒன்று பொங்கி எழுகிறது. அது விவரிக்க முடியாத மௌனக் குரலின் கட்டளையை உடனே பின்பற்றும்படி அதிகாரப் பூர்வமாக ஆணையிடுகிறது. அது என்னை மூழ்கடிக்கிறது. என்னுடைய பலவீனமான உடலின் அறிவு சார்ந்த ஆட்சேபணைகளையும் எதிர்ப்புகளையும் அது மிகவும் பலமாக ஆட்கொள்வதால், நான் அதன் கையில் ஒரு குழந்தை போல ஆகிறேன்.  திடீரென்று எழுந்த இந்த ஆட்கொள்ளும் அவசர சக்தி, இப்படி இந்த கணமே மகரிஷியிடம் திரும்பும்படி விண்ணப்பித்துக் கொண்டிருந்த  போதெல்லாம்,  நான் அவருடைய கவர்ந்திழுக்கும் தவிர்க்க முடியாத கண்கள் என்னை அழைப்பதை மிக தெளிவாகப் பார்க்கிறேன்.  

அதற்குப் பிறகு உட்புறக் குரலுடன் எல்லா வாதங்களையும் நிறுத்துகிறேன். ஏனெனில், அதன் கையில் நான் இப்போது உதவியற்று இருப்பதை அறிகிறேன். நான் உடனே மகரிஷியிடம் செல்ல பிரயாணம் செய்வேன். அவர் என்னை ஏற்றுக் கொண்டால், அவரது பாதுகாப்பில், போஷணையில், என்னை அடைக்கலம் செய்து ஒப்படைத்துக் கொள்வேன். அவருடைய ஜொலிக்கும் நக்ஷத்திரத்தில் எனது வண்டியை இணைத்துக் கொள்வேன். பகடையை எறிந்தாகிவிட்டது. அது என்னவென்று எனக்குப் புரியாவிட்டாலும், அந்த ஏதோ ஒன்று என்னை வென்று விட்டது.

நான்  எனது விடுதிக்கு திரும்புகிறேன். நெற்றியில் வேர்வையைத் துடைத்துக்கொண்டு, வெதுவெதுப்பான தேநீரைக் குடிக்கிறேன்.   அதைக் குடித்தவாறே, நான் ஒரு மாறி விட்ட மனிதன் என்று உணர்கிறேன். என்னுடைய பரிதாபமான இருள்மிகுந்த பாரமும் சந்தேகமும், என் தோள்களிலிருந்து வீழ்வதை உணர்கிறேன். 

அடுத்த நாள் காலை, பம்பாயிலிருந்து திரும்பி வந்த பிறகு இப்போது தான் நான் முதல் முதலாக புன்சிரிப்பதை உணர்ந்தவாறு, நான் காலை உணவுக்கு இறங்கி வருகிறேன்.  பிரகாசிக்கும் வெள்ளை நிற ஜாக்கெட்டும், பொன்னிர இடையணியும், வெள்ளை நிற காற்சட்டையும் அணிந்த, தாடி வைத்துக் கொண்டிருந்த  உயரமான சீக்கிய பணியாள், எனது நாற்காலியின் பின்னால் கைகட்டி நின்றவாறு, பதிலுக்கு என்னைப் பார்த்து புன்சிரிக்கிறார்.  பிறகு அவர் சொல்கிறார் :

“உங்களுக்கு ஒரு கடிதம் இருக்கிறது, ஸார்.”

நான் கடிதத்தின் உறையைப் பார்க்கிறேன். அது இரண்டு முறை வெவ்வேறு முகவரி எழுதப்பட்டு, நான் போன ஒவ்வோரிடத்திலும் என்னை பின் தொடர்ந்து வந்திருக்கிறது.  நான் உட்கார்ந்தவாறு அதை திறந்தேன். 

எனக்கு களிப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. ஏனெனில், அது தெற்கில் உள்ள தெய்வீக கலங்கரை விளக்கைக் கொண்ட மலையின் அடிவாரத்தில் இருந்த ஆஸ்ரமத்திலிருந்து எழுதப்பட்டிருப்பதை கண்டு கொள்கிறேன். அதை எழுதியவர்… மகரிஷியின் சீடராக ஆகிவிட்டிருந்தார்; அவர் சில சமயங்களில் மகரிஷியை சந்தித்து வந்தார். நான் அவரை சந்தித்திருக்கிறேன். அவ்வப்போது எங்களுக்குள் கடிதப் போக்குவரத்து இருந்தது. 

கடிதம் முழுவதும் ஊக்கமளிக்கும் எண்ணங்கள் இருந்தன. நான் மீண்டும் ஆஸ்ரமத்திற்கு வர விரும்பினால், எனக்கு அங்கே நல்வரவு கிடைக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. நான் அதைப் படித்து முடித்த பிறகு, அதிலிருந்து ஒரு வாக்கியம், மற்ற எல்லாவற்றையும் துடைத்து அழித்து விட்டு, என் நினைவில் ஒளிர்ந்தது.

ஒரு உண்மையான ஆசானை சந்திக்க உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்துள்ளது“, என்பது தான் அந்த வாக்கியம். மகரிஷியிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற என்னுடைய புதிதாகப் பிறந்துள்ள தீர்மானத்திற்கு இது ஒரு நல்ல சகுனம் என்று கருதுகிறேன்.

பம்பாய்க்கு விடைகொடுத்து விட்டு, என் புதிய திட்டத்தை செயலாற்ற அதிக காலம் ஆகவில்லை…ரயில் என்னுடைய ஆர்வத்திற்கு தகுந்தபடி வேகமாக ஓடவில்லை.  தண்டவாளங்கள் மீது அது பறந்து சென்ற போது, நான் ஆன்மீக ஞானோதயமும், மிகவும் புதிரான தன்மையுள்ள ஒருவரை சந்திப்பதுமான ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு, மிக விரைவாக செல்வது போல் உணர்கிறேன். ஏனெனில், நான் எனது தனியறையின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது, ஒரு மகரிஷியை, ஒரு ஆன்மீக மாமனிதரை கண்டுபிடிப்பதற்கு தூங்கி வழிந்துக் கொண்டிருந்த என்னுடைய நம்பிக்கைகள், மீண்டும் ஒரு முறை விழிக்கின்றன.  

இரண்டாவது நாளன்று, ஆயிரம் மயில்களுக்கு மேல் கடந்து விட்டோம்; பிறகு ஆங்காங்கே இருந்த சில சிவப்பு நிற குன்றுகளுடன் இருந்த  அமைதியான தெற்கு நிலத்தோற்றங்களில்  நுழைய ஆரம்பித்த போது, நான் ஒரு விசித்திரமான சந்தோஷத்தை உணர்கிறேன்… 

தெற்கு இந்திய ரயில் நிலையத்திற்கு மாறிச் செல்ல, நான் சிதறி பரவி இருந்த நகரத்தை கடந்துச் செல்ல வேண்டியிருக்கிறது.  நடுவில் சில மணி நேரம் மிச்சம் இருப்பதால், இந்த நேரத்தை, இந்திய நூலாசிரியர் வெங்கடரமணியுடன், ஒரு அவசர சம்பாஷணை செய்வதற்காக உபயோகிக்கிறேன். வெங்கடரமணி தான் என்னை, தமிழ் நாட்டின் ஆன்மீகத் தலைவரும், புனிதமான மகானுமான திரு அருள்மிக்க சங்கராச்சாரியாருக்கு என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். 

வெங்கடரமணி என்னை மிகவும் அன்புடன் வரவேற்கிறார். நான் மகரிஷியை பார்க்கும் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறேன் என்று நான் அவருக்கு தெரிவித்த போது, அவர் குரலெழுப்புகிறார் :

“இதனால் நான் வியப்படைய வில்லை! இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். ”

நான் அதிர்ச்சி அடைகிறேன்; ஆனால் அவரைக் கேட்கிறேன், “ஏன் அப்படி சொல்கிறீர்கள்?”

அவர் புன்சிரிக்கிறார். “என் நண்பரே, நாம் செங்கல்பட்டில், புனித திரு சங்கரரிடமிருந்து எப்படி பிரிந்து சென்றோம் என்று உங்களுக்கு நினைவில்லையா? நாம் அங்கிருந்து அகன்றுச் செல்வதற்கு  முன், அடுத்த அறையில் அவர் என் காதில் ரகசியமாக பேசியதை நீங்கள் காணவில்லையா? “

நான் சொன்னேன், “ஆமாம்! இப்போது நீங்கள் சொல்வதால், நிச்சயமாக எனக்கு அது ஞாபகம் வருகிறது. “

எழுத்தாளரின் மெல்லிய, சீர்மையான முகத்தில் இன்னும் புன்சிரிப்பு விளங்குகிறது.  

“இது தான் தெய்வீகமே உருவான திரு சங்கரர் என்னிடம் சொன்னார்.”

‘உங்கள் நண்பர் இந்தியா முழுவதும் பயணம் செய்வார். அவர் பல யோகிகளைச் சந்திப்பார், பல ஆசான்களின் சொற்களைக் கேட்பார். ஆனால், முடிவில் அவர் மகரிஷியிடம் தான் திரும்ப வேண்டியிருக்கும். ஏனெனில் அவருக்கு மகரிஷி தான் சரியான ஆசான்.’

நான் திரும்பி வந்த நாளின் மாலையில் கேட்ட இந்த சொற்கள் என் மனதை ஆழ்ந்து ஈர்க்கின்றன. திரு சங்கராச்சாரியாரின், எதிர்காலத்தை கண்டுரைக்கும் தீர்க்கதரிசன சக்தியை, அவை வெளிப்படுத்துகின்றன. அதோடு அவை, நான் சரியான மார்க்கத்தில் தான் செல்கிறேன் என்று ஒருவித உறுதியும் அளிக்கின்றன. 

என்னுடைய நட்சத்திரங்கள் என் மேல் திணித்துள்ள அலைவுகள் எல்லாம் எவ்வளவு விசித்திரம் !

சில மறக்க முடியாத கணங்கள், பொன் குறிப்புக்களாக  நமது வருஷங்களின் பஞ்சாங்கத்தில் பதிந்துள்ளன. இப்போது மகரிஷியின் கூடத்தினுள் நடந்து செல்லும் போது,  இத்தகைய ஒரு கணம்  எனக்கு வருகிறது. 

நீளமான கூடத்தில், ஒரு ஊசி கீழே விழுந்தால் கூட கேட்கப்பட முடிவது போன்ற ஆழ்ந்த அமைதி நிலவியது. ஞானி, அசையாமல், பூரணமாக அசைவே இல்லாமல், நாங்கள் வந்ததால் சிறிதும் கலவரப்படாமல் விளங்கினார். 

சிறிய உலோக துண்டுகள் காந்தத்தால் கவரப்படுவது போல, என் கவனத்தை பிடித்து வைத்துக் கொள்ள, இந்த மனிதரில் ஏதோ இருக்கிறது. என்னால் என் நோக்கை அவரிடமிருந்து திருப்ப முடியவில்லை…

ஒரு மௌனமான, தடுக்க முடியாத மாறுதல் என் மனதில் நடைப் பெற்றுக் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன்…

நான் ரயிலில் மிகவும் கவனத்துடன், துல்லியமான திட்பநுட்பத்துடன் தயார் செய்த என் கேள்விகள் எல்லாம், ஒன்று ஒன்றாக விழுந்து விடுகின்றன

எனக்கு அருகில் ஒரு நிலையான மௌன நதி ஓடுவதையும், ஒரு பெரும் அமைதி என் ஆழ்ந்த மனதுள்  ஊடுருவி பாய்ந்து செல்வதையும், எண்ணங்களால் வதைக்கப்பட்ட என் மூளையில் கொஞ்சம் ஓய்வு தோன்றுவதையும் மட்டுமே அறிகிறேன். 

சீராக சிறிது சிறிதாக அதிகரித்தவாறு ஆழ்ந்து செல்லும் அமைதியிடம் நான் சரணடைகிறேன். இரண்டு மணி நேரம் கடந்து செல்கிறது. நேரம் கடப்பது இப்போது எரிச்சல்  தூண்டவில்லை. ஏனெனில், மனதால் உண்டாக்கப்பட்ட பிரச்சனைகளின் சங்கிலிகள் உடைக்கப்பட்டு வீசி எறியப்பட்டது போல உணர்கிறேன்…

பால் ப்ரன்ட்டன்… முடிவு ~~~~~~~~~~~~~~

இவ்வாறு பால் ப்ரன்ட்டன் மகரிஷியின் முன்னிலையில் ஏற்பட்ட தனது அனுபவங்களையும், அவரது அருள்மிகுந்த கூர்ந்த பார்வையினால் தனது மனதில் உண்டான விளைவுகளையும் பற்றி விவரிக்கிறார்.

இப்படிப்பட்டது தான் ஆன்ம சொருப முகத்தின் அழகு.  ஒரு மனிதரின் ஜீவனுள் ஊடுருவி சென்று அதை அதன் எல்லா துயரங்களிலிருந்தும் விடுவித்து, நிலையான முடிவற்ற சச்சினாந்தத்தில் உறைய வைக்கும் சிறப்பான புகழ் வாய்ந்த கண்களைக் கொண்ட முகம். கீர்த்திப் பொருந்திய, மேன்மை வாய்ந்த, ஒளிரும் பிரகாசமான முகம். இதுவே ஆன்ம சொரூபத்தின் முகம். 

வசுந்தரா

ஆன்ம சொரூபத்தின் முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!