
ஏகான்ம விவேகம் (பஞ்சகம்)
ரமண மகரிஷி கருணையுடன் தமிழில் அருளிய 5 வரிசைகள்
நூல்
(கலிவெண்பா)
1.
தன்னை மறந்து தனுவேதா னாவெண்ணி
யெண்ணில் பிறவி யெடுத்திறுதி தன்னை
யுணர்ந்துதா னாத லுலகசஞ் சாரக்
கனவின் விழித்தலே காண்க வனவரதம்
பொருள்:
தனதியல்பாகிய சொரூபத்தை மறந்து உடலே நான் என்று எண்ணிப் பல பிறவிகளை எடுத்து இறுதியில் தன்னை உணர்ந்து தானாக நிலைபெறுவது, கனவில் உலகம் முழுதும் சுற்றிவிட்டு இறுதியில் விழிப்பது போன்றது.
2.
தானிருந்துந் தானாகத் தன்னைத்தா னானெவன்
யானிருக்குந் தான மெதுவெனக்கேட் பானுக்கு
யானெவ னெவ்விடம் யானுள னென்றமது
பானனை யீடு பகர்சச்சித் தானந்தத்
பொருள்:
எப்போதும் ஆத்ம சொரூபமாகவே தான் இருந்தும், “நான் யார்? நான் இருக்கும் இடம் எது?” என்று தன்னைத் தானே விசாரிப்பவன், அதே கேள்விகளைக் கேட்கும் மது உண்டு மயங்கிய மனிதனுக்கு இணையாவான்.
3.
தன்னுட் டனுவிருக்கத் தானச் சடவுடலந்
தன்னு ளிருப்பதாத் தானுன்னு மன்னவன்
சித்திரத்தி னுள்ளுளதச் சித்திரத்துக் காதார
வத்திர மென்றெண்ணு வான்போல்வான் வத்துவாம்
பொருள்:
சத்-சித்-ஆனந்த ஆத்மாவாகிய தனக்குள் உடல் இருக்கவும், ஜடமான உடலுக்குள் தான் இருப்பதாக அஞ்ஞானத்தினால் நினைப்பவன், சித்திரத்திற்குள், அதற்கு ஆதாரமான திரை இருக்கிறது என்று கருதுபவனைப் போன்றவனாவான்.
4.
பொன்னுக்கு வேறாகப் பூடண முள்ளதோ
தன்னை விடுத்துத் தனுவேது தன்னைத்
தனுவென்பா னஞ்ஞானி தானாகக் கொள்வான்
றனையறிந்த ஞானி தரிப்பாய் தனதொளியால்
பொருள்:
ஆபரணங்கள் அனைத்தும் ஆதாரவஸ்துவாகிய பொன்னால் ஆனவை; அதைவிட்டு வேறாகாது. அதுபோல் ஆத்மாவாகிய சொரூபத்தைவிட்டுச் சரீரத்திற்கு இருப்பு ஏது? அஞ்ஞானி தன்னைத் தேகம் என்பான். தன்னை உணர்ந்த ஞானி அனைத்தையும் தானாக, ஆன்மாவாக உணர்வான் என்பதை உணர்.
5.
எப்போது முள்ளதவ் வேகான்ம வத்துவே
யப்போதவ் வத்துவை யாதிகுரு செப்பாது
செப்பித் தெரியுமா செய்தன ரேலெவர்
செப்பித் தெரிவிப்பர் செப்புகென விப்போதவ்
பொருள்:
உள்ளத்துள் எப்போதும் உள்ளது, ஒன்றான அந்த ஏகாத்ம வஸ்துவே. ஆதி காலத்தே குரு தக்ஷிணாமூர்த்தி அவ்வஸ்து சொரூபத்தைச் சொல்லாமல் சொல்லி (மௌன வியாக்கியானத்தால்) தெரியுமாறு செய்தார் என்றால், அதை இப்போது யாரால் கூற இயலும்!
——–
முருகனார்
ஏகான்ம வுண்மை யினைத்தெனத் தேற்றியன்பர்
தேகான்ம பாவஞ் சிதைவித்தான் ஏகான்ம
ஞான சொரூபமா நண்ணுங் குருரமணன்
றானவின்ற விப்பாவிற் றான்.
பொருள்:
ஏக ஆன்ம சொரூபமாக விளங்கும் குரு ரமணன், ஏகான்ம பஞ்சகம் என்னும் நூல் மூலம், ஏக ஆன்மாவின் இந்த உண்மை நிலையை உள்ளவாறு தெளிவித்து, தேகமே ஆன்மா என்ற அன்பர்களது தேக பாவனையை நாசமாக்கினான்.