யோகிகளும் மாய வித்தைகளும்
திரு எவன்ஸ் வென்ட்ஸ் கேட்டார்: மாய வித்தைகள் கொண்ட யோகிகள் உள்ளனர். அவர்களைப் பற்றி மகரிஷி என்ன நினைக்கிறார்?
மகரிஷி: இந்த சக்திகள் செவிவழிச் செய்தியாலோ அல்லது கண்காட்சியாலோ தெரிய வருகின்றன. எனவே அவை மனப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளன.
பக்தர்.: சென்னையில் வாழும் ஒரு யோகி, இமய மலையில் உள்ள தமது ஆசானுடன் ஆன்மீக தொடர்பு வைத்துக் கொள்வதாக திரு ப்ரன்ட்டன் சொல்கிறார்.
மகரிஷி.: இது எல்லோருக்கும் தெரிந்த ‘தொலைவிலுணர்தல்’ (telepathy) என்பதை விட மிக அற்புதமானது ஒன்றுமில்லை. தொலைவிலுணர்தல் கேட்பவரின்றி இருக்க முடியாது, தொலைக்காட்சி (television) பார்ப்பவரின்றி இருக்க முடியாது. தூரத்திலிருந்து கேட்பதற்கும் அருகிலிருந்து கேட்பதற்கும் என்ன வித்தியாசம்? கேட்பவர் தான் முக்கியம். கேட்பவரில்லாமல் கேட்பதும் இருக்க முடியாது; பார்ப்பவரில்லாமல் பார்வையும் இருக்க முடியாது.
பக்தர்.: எனவே, நான் நபரைப் பற்றி கருத வேண்டுமே தவிர பொருளைப் பற்றி கருதக்கூடாது என்று சொல்கிறீர்கள்.
மகரிஷி.: நபரும் பொருளும் மனம் எழும்பிய பின் தான் தோன்றுகின்றன. இவைகளும் மாய சக்திகளும் மனதில் தான் உள்ளன.
பக்தர்.: ஜோதி வெளிப்பாடுகள் அருணாசல மலையின் மீது தெரிய முடியுமா?
மகரிஷி.: ஆமாம்.
பக்தர்.: கைலாச மலை, காசி போன்ற புனிதமான இடங்களுக்கு செல்வதால், ஆவி ஆற்றலுடன் தொடர்பு கொண்ட (psychic) விளைவு உண்டா?
மகரிஷி.: ஆமாம்.
பக்தர்.: காசியில் இறப்பதால் ஏதாவது பயன் உண்டா?
மகரிஷி.: ஆமாம்; உண்மையான காசி எது, உண்மையான இறப்பு எது என்று புரிந்துக் கொண்டால், இதன் பொருள் தெளிவாக விளங்கும்.
பக்தர்.: அதாவது, அவை ஆன்மாவில் இருக்கின்றன என்கிறீர்களா?
மகரிஷி.: ஆமாம்.
பக்தர்.: உடலில் ஆறு மையங்கள் உள்ளன; அவற்றிற்கு ஒத்திசைவாக உலகிலும் ஆறு மையங்கள் உள்ளன.
மகரிஷி.: ஆமாம். உலகில் என்ன உள்ளதோ அது உடலிலும் உள்ளது; உடலில் என்ன உள்ளதோ அது உலகிலும் உள்ளது.
பக்தர்.: காசியின் புனிதம் ஒரு நம்பிக்கை மட்டும் தானா, அல்லது அது வெளிப்புறத்திலும் உண்மை தானா?
மகரிஷி.: இரண்டும்.
பக்தர்.: சிலர் ஒரு புனித யாத்திரை இடத்தால் ஈர்க்கப் படுகின்றனர்; மற்றோர் வேறு ஒரு இடத்தால் ஈர்க்கப் படுகின்றனர். அது அவரவர்களுடைய மனப்போக்குகளுக்கு ஒத்ததா?
மகரிஷி.: ஆமாம். நீங்கள் எல்லோரும் வெவ்வேறு இடங்களில் பிறந்தீர்கள், வேறு நிலங்களில் வசிக்கிறீர்கள், இன்று இங்கு நீங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறீர்கள்; இதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களையெல்லாம் ஈர்த்த ‘மபெரும் சக்தி’ என்ன? இது புரிந்துக் கொள்ளப்பட்டால், அந்த மற்ற சக்தியும் புரிந்துக் கொள்ளப்படும்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 26, 1935
உரையாடல் 18.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா