
தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன்
குறிப்பு : இந்த உரையாடலில் தான்மையின் தன்மையைப் பற்றியும், நடந்துக்கொள்ளும் விதத்தையும் ரமண மகரிஷி மிகவும் தெளிவாக விளக்குகிறார். அவர் பக்தர்களுக்கு நன்றாக விளங்கும் விதத்தில் உதாரணங்களும் அளிக்கிறார்.
~~~~~~~~
திரு ஜாக்ஸன் என்ற பக்தர் மகரிஷியுடன் கொண்ட உரையாடலில், இவ்வாறு பேசினார்.
நாங்கள் இதைப் பற்றியெல்லாம் படிக்கும் போது, புத்தி சார்ந்த விதத்தில் தான் படிக்கிறோம். ஆனால் இவை அறிந்துக் கொள்ள மிகவும் தொலைவில் உள்ளன. நாங்கள் உங்களை உருவத்தில் பார்க்கும் போது, மெய்மை சொரூபத்தின் சிறிதளவு அருகில் நாங்கள் கொண்டு வரப் படுகிறோம். எங்கள் அறிவை தினசரி வாழ்வில் கொண்டு வர, அது தைரியம் தருகிறது.
மேற்கு திசை நாடுகளில், ஒருவர் ஆன்ம ஞானம் பெற்று அதன்படி நடந்துக் கொண்டால், அவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் போட்டு பூட்டி விடுவார்கள்.
திரு ஜாக்ஸன் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். பிறகு மகரிஷி பதிலளித்தார்.
நீங்களே உங்களை பூட்டிக் கொள்வீர்கள். உலகம் பைத்தியமாக இருப்பதால், அது உங்களை பைத்தியம் என்று நினைக்கிறது. பைத்தியக்கார ஆஸ்பத்திரி உங்களுக்குள் இல்லாமல் வேறெங்கு உள்ளது? நீங்கள் அதற்குள் இருக்க மாட்டீர்கள், ஆனால் அது உங்களுக்குள் இருக்கும்.
மகரிஷி இவ்வாறு சொன்னதைக் கேட்டு மறுபடியும் எல்லோரும் சிரித்தனர்.
மகரிஷி தொடர்ந்து பேசினார்.
நிச்சயமின்மை, சந்தேகங்கள், பயங்கள், இவையெல்லாம் ஆன்ம ஞானம் பெறும் வரையில், எல்லோருக்கும் இயல்பானது தான். அவை “தான்மை அகங்காரத்தை” விட்டு பிரிக்க முடியாதவை. உண்மையில், அவை தான்மையே தான்.
பக்தர்: அவை விலகுவது எப்படி?
மகரிஷி: அவை தான்மை அகங்காரமே தான். தான்மை உணர்வு போனால், அதனுடன் அவையெல்லாமும் சென்று விடும். தான்மையே பொய்யானது தான்.
“தான்மை அகங்காரம் என்பது என்ன?” விசாரணை செய்யுங்கள்.
உடல் உணர்வற்றது; அதால் “நான்” என்று சொல்ல முடியாது.
ஆன்ம சொரூபம் தூய்மையான பிரக்ஞை உணர்வு, இரண்டாக இல்லாத ஒன்றே ஒன்று. அதால் “நான்” என்று சொல்ல முடியாது. தூக்கத்தில் எவரும் “நான்” என்று சொல்வதில்லை.
அப்படியானால், தான்மை அகங்காரம் என்பது என்ன? அது ஜடமான உடலுக்கும், தூய ஆன்மாவிற்கும் நடுவில் உள்ள ஏதோ ஒன்று. தன்னுடைய உள்ளமையை ஆதாரத்துடன் நிரூபிக்க அதனிடம் ஒன்றும் இல்லை. அதைத் தேடினால், அது மறைந்து போய் விடுகிறது.
இதோ பாருங்கள்! ஒரு மனிதர் தனக்கு அருகில் இருட்டில் ஏதோ இருப்பதாக கற்பனை செய்துக் கொள்கிறார். அது ஒரு இருண்ட பொருளாக இருக்கலாம். நெருங்கிப் பார்த்தால், பூதம் ஒன்றும் தெரிவதில்லை; ஆனால், அது ஒரு மரம், கம்பம் போல் ஒரு இருண்ட பொருள் என்று அவரால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நெருங்கிப் பார்க்காவிட்டால், பூதம் அந்த மனிதருள் பயங்கர கிலி ஏற்படுத்துகிறது. செய்யத் தேவையானதெல்லாம் கிட்டே சென்று நெருங்கி பார்க்க வேண்டியது தான்; பிறகு பூதம் மறைந்து விடுகிறது.
பூதம் எப்போதுமே இருக்கவில்லை. தான்மையும் அதே போல் தான். அது உடலுக்கும் தூய ஆன்ம சொரூபத்திற்கும் இடையே உள்ள ஒரு தொட்டறிய முடியாத இணைப்பு. அது மெய்யில்லை. அதை மிக அருகில் சென்று நெருங்கிப் பார்க்காத வரையில், அது நமக்கு தொல்லைக் கொடுக்கிறது. ஆனால், ஒருவர் அதைத் தேடினால், அது இல்லவே இல்லை என்று கண்டுபிடிக்கப்படுகிறது.
அதே போல், ஒரு இந்து மத திருமண விழாவில், கொண்டாட்டங்கள் 5, 6 நாட்கள் தொடரும். ஒரு முறை, ஒரு அந்நியனை மணமகனின் சிறந்த நண்பன் என்று மணமகளின் குழுவினர் நினைத்தனர். எனவே அவனை அவர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தினர். இவ்வாறு மணமகளின் குழுவினர் அந்நியனுக்கு மரியாதை தருவதைக் கண்டு, மணமகனின் குழுவினரும் அவனை மிகச் சிறந்த முறையில் நடத்தினர். இந்த பிரமாதமான உபசாரங்களை அந்நியன் மிகவும் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில், உண்மையான நிலவரம் என்ன என்றும் அவன் புரிந்துக் கொண்டிருந்தான். ஒரு சமயம், மணமகனின் குழு அவனிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி கேட்க விரும்பினர். அவனைப் பற்றி கேட்டனர். அந்நியன் உடனே தொல்லை வரப்போவதை உணர்ந்தான், அங்கிருந்து ஓடி அகன்றான்.
தான்மையும் அதே போலத்தான். அதைத் தேடினால், அது மறைந்து விடும். இல்லையென்றால், தொடர்ந்து தொல்லைகள் தந்துக் கொண்டு இருக்கும்.
எப்படி தான்மையைத் தேடுவது என்பது ஏற்கனவே இவ்வாறு அறிந்தவர்களிடமிருந்து கற்கப் படுகிறது. இந்த காரணத்திற்காகத்தான் ஒரு குரு அல்லது ஆசான் நாடப்படுகிறார்.
தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 612.