Solitude, Silence, Powers
21. திடமான ஞானம்
19. நினைவும் மறதியும்

தனிமை, மௌனம், சித்திக்கள்

ஜனவரி 29, 1935

திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது?
மகரிஷி: மனதில் (சித்தம்).

ஜனவரி  30, 1935

திரு எவன்ஸ் வென்ட்ஸ்: ஒரு ஞானிக்கு தனிமை அவசியமா?
மகரிஷி.: தனிமை மனிதனின் மனதில் உள்ளது.  ஒருவர் அடர்ந்த உலகில் இருந்துக்கொண்டே மனதில் அமைதியை நிலை நிறுத்தி வைக்கலாம்; இப்படிப்பட்டவர் தனிமையில் உள்ளார். மற்றொருவர் காட்டில் வசிக்கலாம், இருப்பினும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். இவர் தனிமையில் உள்ளார் என்று சொல்ல முடியாது. தனிமை மனதின் ஒரு செயல்பாடு. இச்சைகளுடன் பற்று கொண்டுள்ள மனிதர் எங்கு இருந்தாலும் தனிமை பெற முடியாது; பற்றற்று இருக்கும் மனிதர் எப்போதும் தனிமையில் தான் உள்ளார். 

பக்தர்.: எனவே, ஒருவர் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், இச்சைகளை விட்டு அகன்று, தனிமையை கடைபிடிக்க முடியும். இது உண்மை தானே? 
மகரிஷி.: ஆமாம். பற்றுதலோடு செய்யும் வேலை ஒரு விலங்கு; ஆனால் பற்றுதலின்றி செய்யப்படும் வேலை, வேலை செய்பவரை பாதிக்காது. அவர் வேலையில் ஈடுபட்டுள்ள போதும், தனிமையில் தான் உள்ளார். 

பக்தர்.: திபெத்தில் உள்ள பல முனிவர்கள், தனிமையில் வாழ்ந்தாலும் உலகத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது எப்படி முடியும்?  
மகரிஷி.: முடியும். ஆன்ம ஞானம் பெறுவது தான் மனித குலத்திற்கு வழங்கப்படும் உதவிகளிலெல்லாம் மிகவும் சிறந்ததாகும்.  எனவே  தான், முனிவர்கள் காடுகளில் வாழ்ந்தாலும், பயன் தருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தனிமை காடுகளில் மட்டுமே இல்லை என்பது மறக்கப்படக் கூடாது. அதை உலக நடிவடிக்கைகளில் ஆழ்ந்தவாறே, நகரங்களிலும் கூட பெறலாம்.

பக்தர்.: ஞானிகள் மக்களுடன் கலந்துக் கொண்டு அவர்களுக்கு உதவியளிப்பது அவசியமில்லையா? 
மகரிஷி.: ஆன்மா மட்டுமே உண்மை; உலகமும் மற்றவையும் இல்லை. ஞானி தன்னை உலகத்தை விட வேறாகக் காண்பதில்லை. 

பக்தர்.: எனவே, ஒரு ஞானியின் ஆன்ம தன்னிலை உணர்தல், மனித குலத்துக்குத் தெரியாமலே, மனித குலத்தின் உயர்வுக்கு வழிவகுக்கிறது. இது உண்மையா?
மகரிஷி.: ஆமாம். புலப்படாமல் இருப்பினும், உதவி உள்ளது. ஒரு ஞானி மனித இனத்திற்குத் தெரியாமலே, மனித இனம் முழுவதற்கும்  உதவுகிறார்.

பக்தர்.: அவர் மற்றவர்களுடன் கலந்து பழகினால் மிக நல்லதில்லையா? 
மகரிஷி.: கலந்துக் கொள்வதற்கு மற்றவர்கள் யாரும் இல்லை. ஆன்மா மட்டுமே ஒரே ஒரு சத்தியப் பொருள். 

பக்தர்.: ஒரு நூறு ஆன்ம ஞானம் பெற்ற மனிதர்கள் இருந்தால், அது உலகத்திற்கு மேம்பட்ட பயனுள்ளதாக இருக்காது? 
மகரிஷி.: ‘ஆன்மா’ என்று சொல்லும்போது, எல்லையற்றதைக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால், அதோடு ‘மனிதர்கள்’ என்ற சொல்லைச்  சேர்க்கும்போது, அதன் பொருளைச் சுருக்குகிறீர்கள்.  ஒரே ஒரு எல்லையற்ற, வரம்பில்லாத ஆன்மா மட்டுமே உள்ளது. 

பக்தர்.: ஆமாம், ஆமாம். எனக்குப் புரிகிறது! கீதையில் திரு கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார், “வேலைகள் பற்றுதல் இல்லாமல் செய்யப்பட வேண்டும், இத்தகைய வேலை சோம்பேறித்தனத்தை விட மேம்பட்டது,” என்று. இது தான் கர்ம யோகா என்பதா? 
மகரிஷி.: என்ன சொல்லப்பட்டுள்ளதோ அது கேட்பவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தும்படி வழங்கப்பட்டுள்ளது. 

பக்தர்.: ஐரோப்பாவில் ஜனங்களால், தனிமையில் உள்ள ஒரு மனிதர் பயனுள்ளவராக இருக்க முடியும் என்று புரிந்துக் கொள்ளப்படவில்லை. அவர்கள், உலகில் வேலைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே உபயோகமாக இருக்க முடியும், என்று கற்பனை செய்கிறார்கள். இந்த குழப்பம் எப்போது முடிவுறும்? ஐரோப்பிய மனம் இப்படிப்பட்ட சேற்றில் தொடர்ந்து உழன்றுக் கொண்டே தான் இருக்குமா? அல்லது அது உண்மையை உணர்ந்துக் கொள்ளுமா?  
மகரிஷி.: ஐரோப்பா அல்லது அமெரிக்கா, இதெல்லாம் பற்றி கவலப்பட வேண்டாம். அவை உங்கள் மனதில் இல்லாமல் வேறு எங்கே உள்ளன? உங்கள் ஆன்மாவை அறிந்து உணர்ந்துக் கொள்ளுங்கள், பிறகு எல்லாம் அறிந்துக் கொள்ளப்படும்.
நீங்கள் கனவில் பல மனிதர்களைக் காண்பதாக கனவு கண்டுவிட்டு, பிறகு விழித்துக் கொண்டபின் கனவை மீண்டும் நினைவூட்டும்போது, கனவு படைப்பில் கண்ட மனிதர்களெல்லாம் கூட விழித்துக் கொண்டு விட்டார்களா என்று உறுதி படுத்துகிறீர்களா? 

பக்தர்.: உலக முழுதளாவிய மாயையைப் பற்றி மகரிஷி என்ன நினைக்கிறார்?
மகரிஷி.: மாயை என்றால் என்ன? அது உண்மையான சத்தியப்பொருள் தான். 

பக்தர்.: மாயை பொய் தோற்றமில்லையா? 
மகரிஷி.: மாயை என்பது மெய்ப்பொருளின் வெளிப்பாடுகளைக் குறிப்பிட உபயோகப்படுத்தப் படுகிறது. எனவே, மாயை மெய்ப்பொருளே தான். 

பக்தர்.: திரு சங்கராச்சாரியார் அறிவாளி மட்டுமே தான், ஆன்ம ஞானம் பெறவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா?
மகரிஷி.: சங்கராச்சாரியாரைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? உங்கள் ஆன்மாவை அறிந்து உணர்ந்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் தாமே தம்மை கவனித்துக் கொள்வார்கள். 

பக்தர்.: யேசு கிருஸ்து ஜனங்களின் வியாதிகளை குணமாக்கினார். அது என்ன, ஒரு சித்தி தானா? 
மகரிஷி.: யேசு கிருஸ்து மனிதர்களின் வியாதிகளை குணப்படுத்திய போது, அவர் குணப்படுத்தியதாக உணர்ந்தாரா? தமது  சித்திக்களைப் பற்றி அவருக்கு உணர்வு இருந்திருக்காது.
பின்கண்டவாறு ஒரு கதை சொல்லப்படுகிறது. யேசு ஒரு கண்பார்வையின்றி இருந்த மனிதனின் குருட்டுத்தன்மையை குணமாக்கியிருந்தார். காலப்போக்கில், அந்த மனிதன் தீயவனாக மாறி விட்டான். சில வருடங்களுக்குப் பிறகு, யேசு அவனது தீய குணத்தைக் கண்டு விட்டு, அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்று அவனைக் கேட்டார். குருடனாக இருந்தபோது தான் பாவம் ஒன்றும் செய்யவில்லை என்றும்,  ஆனால் யேசு தன்னை குணமாக்கியபின் தான் தீயவனாக மாறியதாகவும், அதனால் அவனது தீய குணங்களுக்கு யேசு தான் காரணம் என்றும், அந்த கொடிய மனிதன் பதில் சொன்னான். 

பக்தர்.: யேசு சித்திக்களைக் கொண்ட ஒரு பரிபூரண ஆத்மா இல்லையா? 
மகரிஷி.: அவர் தமது சித்திக்களை அறிந்திருந்திருக்க முடியாது. 

பக்தர்.: தொலைவில் உணர்தல் போன்றவற்றை முயன்று பெறுவது நல்லதில்லையா?
மகரிஷி.: தொலைவில் உணர்தல் அல்லது வானொலி, ஒருவரை வெகு தூரத்திலிருப்பதைப் பார்க்கவோ அல்லது கேட்கவோ உதவுகிறது. கேட்பது, பார்ப்பது எல்லாம் ஒன்றே தான். ஒருவர் அருகிலிருந்து கேட்டாலும், வெகு தூரத்திலிருந்து கேட்டாலும், கேட்பதில் ஒரு வித்தியாசமும் இல்லை. அடிப்படையான காரணி, கேட்பவர் தான், நபர் தான். கேட்பவர் அல்லது பார்ப்பவரின்றி, கேட்பதும் பார்ப்பதும் இருக்க முடியாது. கேட்பதும் பார்ப்பதும் மனதின் செயல்பாடுகள். எனவே, சித்திக்கள் மனதில் தான் உள்ளன. அவை ஆன்மாவுக்கு இயல்பானது இல்லை. இயல்பாக இல்லாமல், முயன்று பெறுவது நிரந்தரமாக இருக்க முடியாது; எனவே அவற்றை நாடி, போராடுவதில் தகுதியேதும் இல்லை.  

அவை நீட்டிக்கப்பட்ட சக்திகளைக் குறிப்பிடுகின்றன.  ஒரு மனிதர் குறுகிய சக்திகள் கொண்டே துயர்மிகுந்து இருக்கிறார்; சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர் தனது சக்திகளை மேலும் விரிவாக்க விரும்புகிறார். ஆனால், அப்படி இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். குறுகிய புலக்காட்சிகளுடனேயே ஒருவர் இவ்வளவு துன்புற்று இருந்தால், விரிவான புலக்காட்சிகளால், துன்பம் அதற்கு விகிதப்படியாக அதிகரிக்கத் தான் வேண்டும். சித்திக்கள் எவருக்கும் சந்தோஷம் கொண்டு வராது; அதற்கு மாறாக, அவை ஒருவரை இன்னும் அதிகமாக துயரப்பட வைக்கும்!  

மேலும், எதற்காக இந்த சக்திகள்? சித்தராக ஆகப் போகிறவர், மற்றவர்கள் அவரை பாராட்டுவதற்காக, தமது சித்திக்களை வெளிக்காட்டுகிறார். அவர் சித்திக்களைப் பற்றி பாராட்டல் நாடுகிறார். அது கிடைக்கவில்லையென்றால், அவர் சந்தோஷப் பட மாட்டார். பாராட்ட மற்றவர்கள் இருக்க வேண்டும். அவர் இதை விட இன்னும் மேன்மையான சக்திகள் கொண்டவர் ஒருவரையும் காணலாம். இது பொறாமையை உண்டாக்கும்; அதனால் துன்பம் ஏற்படும். அந்த மேன்மையான சித்தர், அதை விட உயர்ந்த சித்தரைச் சந்திக்கலாம். இப்படியே மேலும் மேலும் செல்லும். கடைசியில் எல்லவற்றையும் ஒரு கணத்தில் தகர்த்து அழிக்கும் சித்தர் வருவார். இப்படிப்பட்ட உச்ச உயர்வான சித்தர் கடவுள் அல்லது ஆன்மா ஆவார்.  

உண்மையான சக்தி என்ன? அது செல்வாக்கு அதிகரிப்பதா, அல்லது மனதுக்கு அமைதி கொண்டு வருவதா? எது மன அமைதி தருகிறதோ, அது தான் எல்லாவற்றையும் விட உயர்ந்த பரிபூரணம் (சித்தி). 

பக்தர்.: ஆனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதாரண மக்கள் இத்தகைய மனோபாவத்தை பாராட்ட மாட்டார்கள். அவர்கள் சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக சக்திகளையும், போதனைகளையும் வெளிக்காட்ட விரும்புவார்கள். 
மகரிஷி.: சொற்பொழிவுகள் மனிதர்களை முன்னேறச் செய்யாமல், சில மணி நேரங்களுக்கு மகிழ்விக்கலாம். அதற்கு மாறாக, மௌனம் நிரந்தரமானது. அது முழு மனித குலத்துக்கே பயனளிக்கும்.  

பக்தர்.: ஆனால் மௌனம் புரிந்துக் கொள்ளப் படுவதில்லை.
மகரிஷி.: பரவாயில்லை. மௌனத்தால், சரளமான சொல்வன்மை குறிப்பிடப் படுகிறது. வாய் மொழி விரிவுரைகள் மௌனத்தைப் போல சொல்திறமிக்க இல்லை.  மௌனம் இடைவிடாத சொல்வன்மை. பண்டைய ஆசான், தக்ஷிணாமூர்த்தி, சீர்மையான லட்சியம். அவர் தமது ரிஷி சீடர்களுக்கு மௌனத்தால் கற்பித்தார். 

பக்தர்.: ஆனால் அவருக்கு சீடர்கள் இருந்தார்கள். அதனால் சரியாக இருந்தது. இப்போது வேறு விதம். சீடர்கள் நாடப்பட்டு உதவப்பட வேண்டும். 
மகரிஷி.: இது அறியாமையின் அறிகுறி. உங்களை உருவாக்கியிருக்கும் சக்தி உலகத்தையும் உருவாக்கியுள்ளது. அந்த சக்தி உங்களை கவனித்துக் கொள்ள முடிந்தால், அதே போல் உலகத்தையும் கவனித்துக் கொள்ள முடியும்.

பக்தர்.: யேசு கிறிஸ்து குறிப்பிட்டுள்ள “தொலைந்து போன ஆன்மா” என்பதைப் பற்றி பகவான் என்ன நினைக்கிறார்? 
மகரிஷி.: தொலைந்து போக என்ன இருக்கிறது என்று யோசனை செய்யுங்கள். தொலைக்க ஏதாவது இருக்கிறதா? எது இயல்பாக உள்ளதோ அது ஒன்று தான் முக்கியமானது. இத்தகைய ஒன்று நிலையானதாக இருக்க வேண்டும்; அது அனுபவத்தில் உணர முடியாது.  எது பிறந்துள்ளதோ, அது இறக்கத் தான் வேண்டும். எது முயன்று பெறப்பட்டுள்ளதோ, அது தொலைந்து போகத் தான் வேண்டும். நீங்கள் பிறந்தீர்களா? நீங்கள் எப்போதும் உள்ளீர்கள். ஆன்மா என்றும் தொலைந்து போக முடியாது. 

பக்தர்.: புத்தர், யாரும் வழிதெரியாமல் அலைவதைத் தவிர்க்க, எட்டு-வித பாதை தான் சிறந்தது என்று அறிவுரை கூறுகிறார். 
மகரிஷி.: ஆமாம். இதை இந்துக்கள் ராஜ யோகா என்று சொல்கின்றனர்.

பக்தர்.: ஆன்மீகத்தை நாடுபவர்  யோகா செய்வது நல்லதா? 
மகரிஷி.: யோகா மனதைக் கட்டுப் படுத்த உதவுகிறது.

பக்தர்.: ஆனால் அது ஆபத்தானவை என்று சொல்லப்படும் சித்திக்கள் வழியாக போக வைக்காதா?
மகரிஷி.: ஆனால், நீங்கள் உங்கள் கேள்வியில் “ஆன்மீகத்தை நாடுபவர்” என்று குறிப்பிட்டீர்களே. நீங்கள் சித்திக்களை நாடுபவர் என்று குறிப்பிடவில்லை. 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 29-30, 1935
உரையாடல் 19-20.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

21. திடமான ஞானம்
19. நினைவும் மறதியும்
20. தனிமை, மௌனம், சித்திக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!