No reason to mourn
17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள்
16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி

துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை

ஐரோப்பிய விருந்தாளி பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றியும் அவர்களுக்கு சேவை செய்ய சிறந்த முறை எதுவென்றும் கேட்டார். 

பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றிய கேள்விக்கு விளக்கம் : ஒருவர் தன்னை தன் உடலோடு இணைத்திருக்கும் வரை, தோற்றங்களாக வெளிப்படுத்தப்பட்ட எண்ணம், அவருக்கு உண்மையாக இருக்கும். தன் உடல் மற்றொரு உடலிலிருந்து ஏற்பட்டதாக கற்பனை செய்துக் கொண்டிருப்பதால், தன் உடல் எவ்வளவு உண்மையாக உள்ளதோ அதே அளவுக்கு மற்றவரின் உடலும் உண்மையாக இருக்கும். சந்ததியாக உள்ளவர் இன்னும் இங்கு இருப்பதால், தான் மற்றொருவரிடமிருந்து பிறந்தவர் என்று நினைப்பதால், ஓரு சமயத்தில் உலகத்தில் இருந்து பிரிந்த மற்றவர், மரணத்தைக் கடந்து உறைவதாகத் தோன்றுகிறது. இந்த சூழ்நிலைகளில், நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களான பித்ருக்களின் மற்ற உலகம் உண்மை;  நாம் அளிக்கும் வழிபாடுகளால் அவர்கள் பயனடைவர். 

அதற்கு மாறாக, வேறு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால் : ஒரே உண்மையான உள்ளமை ஆன்மா. அதிலிருந்து, முந்தைய பிறப்புகளிலிருந்து பெற்ற ஆழ்ந்து பதிந்த மனப்போக்குகளின் விதைகளை தனக்குள்ளேயே கொண்ட நானுணர்வு எழும்பியுள்ளது. நானுணர்வையும், மனப்போக்குகளையும், இந்திரியங்களையும், ஆன்மா ஒளியூட்டுகிறது. இதனால், மனப்போக்குகள் உலகமாக, பிரபஞ்சமாக உருவாகியிருப்பது போல் இந்திரியங்களுக்குத் தோன்றுகிறது; ஆன்மாவின் பிரதிபலிப்பான நானுணர்வுக்கும் இது தெரிகிறது, உணர முடிகிறது. நானுணர்வு உடலுடன் ஐக்கியமாகிக் கொள்கிறது; ஆன்மாவின் தரிசனத்தை இழந்து விடுகிறது. இந்த கவனமற்ற பிழையின் விளைவு, ஆழ்ந்த அறியாமையும் தற்போதைய வாழ்வின் துயரமும் ஆகும்.  

நானுணர்வு ஆன்மாவிலிருந்து தனியே எழும்பி, அதை மறந்து விடுவது தான், பிறப்பு. ஒரு விதத்தில் இதை, ஒருவரின் பிறப்பு தன் அன்னையையே அழிப்பதாக  சொல்லலாம்.  தன் அன்னையை மீண்டும் பெற இப்போதுள்ள ஆசை, உண்மையில் ஆன்மாவைப் பெறும் ஆசையே ஆகும். இதுவே ஆன்மாவின் தன்னிலையை அறியும் நிலையாகும்; நானுணர்வின் அழிவாகும்.  இது தான் அன்னை எப்போதும் வாழ்வதற்காக அன்னையிடம் சரணடைவதாகும். 

பிறகு மகரிஷி யோக வசிஷ்டத்தின் தமிழ் பதிப்பிலிருந்து ஒரு கதையைப் படித்துக் காட்டினார். தீர்க்க தபசி என்பவருக்கு இரண்டு புதல்வர்கள் : புண்யம், பாவம். பெற்றோர்கள் காலமான பிறகு, இளைய புதல்வர் மிகவும் துன்புற்றார். அவரை மூத்த புதல்வர் இவ்வாறு தேற்றினார்:

“நமது பெற்றார்களின் மறைவுக்காக ஏன் துக்கம் அனுசரிக்கிறாய்? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன். அவர்கள் நம்முள்ளேயே தான் இருக்கிறார்கள்; அவர்கள் நாமே தான். ஆற்றின் நீரோட்டம், தான் செல்லும் வழியில், பல பாறைகள், பள்ளங்கள், மணல்கள், ஏற்றங்கள், இறக்கங்கள் முதலியவற்றின் மீதெல்லாம் சென்றாலும், நீரோட்டம் இவற்றால் பாதிக்கப் படுவதில்லை. அது போலவே பல எண்ணிக்கையற்ற பிறவிகளில், பிறப்புகள், இறப்புகள், இன்பங்கள், துன்பங்கள் முதலிவற்றில் எல்லாம், உயிரோட்டம் இருந்து கடந்து சென்றுள்ளது. 

மேலும், இன்பங்கள், துன்பங்கள், பிறப்புகள், இறப்புகள், இவை யாவும், நானுணர்வு என்னும் கானல்நீரில் பொய்யாகத் தெரியும் தண்ணீரின் மேற்பரப்பில் உள்ள அலைநெளிவுகள் போலவாகும். ஆன்மா ஒன்று தான் உண்மை. அதிலிருந்து  நானுணர்வு தோன்றி, எண்ணங்களின் மூலம் ஓடி செல்கிறது. எண்ணங்கள் உலகமாக, பிரபஞ்சமாக தோன்றுகின்றன. அதில், அன்னையரும், தந்தையரும், நண்பர்களும், உறவினர்களும் தோன்றி மறைகின்றனர். இவர்களெல்லாம் ஆன்மாவின் தோற்றங்கள் தான். அதனால், ஒருவரின் பெற்றோர் ஆன்மாவின் தன்னிலையை விட்டு வெளியே இல்லை. எனவே, துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை. இதைக் கற்றுக்கொள், அறிந்து உணர்ந்துக் கொள், சந்தோஷமாக இரு.”

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 19, 1935
உரையாடல் 16.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள்
16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி
16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!