
மெய்மையின் தன்மை என்ன
பக்தர்.: மெய்மையின் தன்மை என்ன?
மகரிஷி.:
(1) தொடக்கமும் முடிவும் இல்லாத, சாசுவத நித்திய உள்ளமை.
(2) முடிவற்ற, எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் உள்ளமை.
(3) எல்லா உருவங்களுக்கும், மாறுதல்களுக்கும், சக்திகளுக்கும், பொருட்களுக்கும், ஆன்மாவிற்கும் அடிப்படையான உள்ளமை.
பலவானவை மாறலாம், கடந்து செல்லலாம் (தோற்றப்பாடுகள்); ஆனால் “ஒன்று” எப்போதும் தாங்கி நிலைத்து நிற்கும் (புலன்களால் அன்றி, அக நிலையால் உணரப்படும் நிகழ்வு).
(4) அறிபவர், அறியப்படும் அறிவு, அறியப்படுபவை – இந்த மூன்றையும் கொண்ட தொகுதியை இடமாற்றும் “ஒன்று”. இந்த மும்மைத் தொகுதி (triad), காலத்திலும், இடவெளியிலும் உள்ள தோற்றப்பாடுகள் தான். ஆனால், மெய்மை (Reality) இவற்றுக்கு அப்பாலும், பின்னாலும் உறைகின்றது. அவை மெய்மையின் மீது ஒரு கானல்நீர் போல் உள்ளன. அவை தவறான நம்பிக்கைகள் கொண்ட எண்ணமயக்கத்தின் விளைவு.
பக்தர்.: “நான்” என்பதும் ஒரு மாயை என்றால், மாயையை அகற்றுவது யார்?
மகரிஷி.: “நான்” என்னும் மாயையை “நான்” அகற்றிவிட்டு, பின் “நான்” என்பதாக மிஞ்சி நிலைக்கிறது. இது தான் ஆன்ம ஞானத்தின் முரண்பாடு போல தோன்றும் மெய்யுரை (paradox). ஆன்ம ஞானி இதில் முரண்பாடு எதுவும் காண்பதில்லை. பக்தி என்னும் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் – நான் கடவுளை (ஈஸ்வரரை) அணுகி, அவருள் உட்கொள்ளப்படும்படி வேண்டுகிறேன். பிறகு நான் நம்பிக்கையுடனும், ஒருமுக சிந்தனையினாலும் சரணடைகிறேன். அதற்குப் பிறகு என்ன மிஞ்சி உள்ளது? பூரணமான சரணாகதியானது, முதலில் இருந்த “நான்” என்பதன் இடத்தில், “நான்” என்பதை இழந்த கடவுளின் மீதத்தை, விட்டு வைக்கிறது. இது தான் எல்லாவற்றிலும் உச்ச உயர்வான பக்தி (பரபக்தி), பிரபத்தி, சரணகதி அல்லது உயர்வான வைராக்கியம் ஆகும்.
நீங்கள் “என்னுடைய” உடைமைகளிலிருந்து, இதையும் அதையும் கைவிடுகிறீர்கள். அதற்கு பதிலாக, “நான்”, “என்னுடையது”, இவற்றை கைவிட்டால், எல்லாமே ஒரே வீச்சில் கைவிடப்படுகின்றன. உடைமைத் தன்மையின் விதையே இழக்கப்படுகிறது. இப்படியே, தீவினை மொட்டிலேயே கிள்ளி எறியப்படுகிறது, அல்லது முளையிலேயே நசுக்கப்படுகிறது. இதைச் செய்வதற்கு வைராக்கியம் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இதைச் செய்வதற்கு, தண்ணீரில் மூழ்கடிக்கப் பட்டிருக்கும் ஒரு மனிதருக்கு, தன் உயிரைக் காப்பதற்காக மேற்பரப்புக்கு எழ எவ்வளவு ஆவல் இருக்குமோ, அவ்வளவு ஆவல் இருக்க வேண்டும்.
பக்தர்.: இந்த தொல்லையும் கஷ்டமும், ஆசான் அல்லது விரும்பித் தொழும் கடவுள் (இஷ்ட தேவதா), இவர்களின் சகாயத்தால் குறைக்கப்பட முடியாதா? அவர்கள், நமது ஆன்மாவை உண்மையில் உள்ளபடி காணவும், நம்மை அவர்களாக மாற்றவும், நம்மை ஆன்ம சொரூப ஞானத்திற்கு அழைத்துச் செல்லவும், நமக்கு சக்தி கொடுக்க முடியாதா?
மகரிஷி.: விரும்பித் தொழும் கடவுள் அல்லது குரு (ஆசான்), சகாயங்கள் தான் – மிகவும் சக்தி வாய்ந்த சகாயங்கள் தான். ஆனால், ஒரு சகாயம் திறம்பட்டதாக இருப்பதற்கு, உங்கள் முயற்சியும், எத்தனிப்பும் கூட தேவைப்படுகிறது. உங்கள் எத்தனிப்பு தான் மிகவும் அவசியமானது. நீங்கள் தான் கதிரவனைப் பார்க்க வேண்டும். மூக்குக் கண்ணாடியும் கதிரவனும் உங்களுக்காக பார்க்க முடியுமா? உங்களுடைய உண்மைத் தன்மையை நீங்களே தான் காண வேண்டும். இதைச் செய்வதற்கு அதிக சகாயம் ஒன்றும் தேவையில்லை!
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 28.
28b
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா