Guest to see Maharshi
16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது

மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி

திரு டக்லஸ் ஏன்ஸ்லி (க்ரான்ட் டப்) என்ற  70 வயதுள்ள ஆங்கிலேய கனவான், தமிழ் நாட்டின் முந்தைய ஆளுனரின் உடன்பிறந்தவரின் மகன். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இதற்கு முன்பு ஏதென்ஸ், பாரீஸ், ஹேக் முதலிய இடங்களில் இருந்த இங்கிலாந்தின் தூதர் அலுவலகத்துடன் இணைப்பு வைத்திருந்தார். அவர் சென்னையின் அரசாங்க இல்லத்தில் விருந்தாளியாக வந்திருந்தார். அவர் திரு பால் ப்ரன்ட்டன் கொடுத்த அறிமுகக் கடிதத்துடன் மகரிஷியை சந்திக்க வந்தார். அடுத்த நாள், அவர் மறுபடியும் வந்து, கூடத்தில் ஒரு மணி நேரத்திற்கு சிறிது குறைவாக அமர்ந்திருந்தார். இரண்டு நாட்களிலும், பெரும்பாலும் பேச்சு வார்த்தை நிகழவில்லை; கூர்ந்த பார்வைகள் மட்டுமே சந்தித்தன.

அவரது பழக்க வழக்கங்கள் மிதமாக இருந்தன. பகல் 1 மணி வரையில் அவர் ஒன்றுமே சாப்பிடாமல், பிறகே பகலுணவு ஏற்றுக் கொண்டார். மாலையில் காபியும்,  பிஸ்கட்களும் உண்டு, அதற்குப் பிறகு ஒரு உணவும் ஏற்காமல் ஓய்வு பெற செல்கிறார். அவர் மணமாகாதவராகவே இருந்துள்ளார். தினமும் காலி வயிற்றில் சில மைல்களுக்கு நடந்துச் சென்று வருகிறார். மிகவும் சிறிதளவு தான் பேசுகிறார். அவரது நடத்தைகளில் மிக்க நயமும்  மென்மையும் இருக்கின்றன.

அவரது குரல் மிகவும் தாழ்வாகவும் மென்மையாகவும் உள்ளது. அவரது சொற்கள் இதயத்திலிருந்து வருவதாகத் தெரிந்தது. காலமாகிய சர் ஜான் உட்ரப், சர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் கலாசாலையில் சமஸ்கிருத பேராசிரியராக இருந்த திரு தாமஸ் முதலியோர் இவரது நண்பர்களில் சிலர்.

அவர் வேதம் ஓதுவதைக் கேட்க தனது விருப்பத்தைத் தெரிவித்தார். திங்கட்கிழமை ரீகா என்னும் இடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த கேள்விகள், பிரிந்த ஆன்மாக்களின் உள்ளமையைப் பற்றியும், அவர்களுக்கு எப்படி சிறந்த முறையில் சேவை செய்வது என்பது பற்றியும் இந்த ஐரோப்பிய விருந்தாளி கேட்ட கேள்விகளை ஒத்திருந்தன.  ரீகாவிற்கு அனுப்பிய பதில் அவருக்குப் படித்துக் காட்டப் பட்டது. 

அவரது முன்னிலையில், மகரிஷியின் “உள்ளது நாற்பது” என்ற கவிதையிலிருந்து தமிழ் பாட்டுக்களும், வேத ஓதுதலும் வழங்கப்பட்டன. அவர் இந்த இன்னிசைகள் மிகவும் பிரமாதமாக இருப்பதாகக் கருதினார். அவர் அடுத்த நாள் மாலையில் வந்த போது, மற்றவர்கள் அதிசயப்படும்படி, தனக்கு முன்னிரவு நிகழ்ந்த அற்புத அனுபவத்தை மகரிஷியிடம் உரைத்தார். அது என்னவெனில், அவர் தமக்குள், வலது பக்கத்தில், இதய மையத்தில், மின்சார ஒளி போல் ஒன்றைக் கண்டார். அவர் மேலும் தமக்குள் கதிரவன் பிரகாசிப்பதைக் கண்டதாக உறைத்தார்.

மகரிஷி சிறிது புன்னகைத்து, பின் ஒருவரை விருந்தாளிக்கு “ஆத்ம வித்யா” (ஆன்ம அறிவு) என்ற நூலின் மொழிபெயர்ப்பைப் படித்துக் காட்ட வைத்தார். ஆன்ம ஞானம் என்பது, மனம் என்ற சுய உணர்வின் சித்த  விரிவாக்கத்திலிருந்து வேறுபட்ட, அகண்ட சிதாகாரமான ஆன்மாவைச் சேர்ந்தடைவதாகும் – என்று அதில் சுருக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த விளக்கம் விருந்தாளிக்கு மிகவும் பிடித்தது. 

மகரிஷி அவரைப் பற்றி பிறகு பேசியபோது, இவ்வாறு சொன்னார். ஒரு 70 வயதுள்ள முதியவர், தனது சொந்த வீட்டில், தான் சம்பாதித்த வருமானத்தில், சௌகரியமாக, அமைதியாக வாழ்வதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவரது ஆவல் எவ்வளவு ஆழ்ந்ததாகவும் தீவிரமாகவும் இருந்தால், அவர் தனது சொந்த நாட்டை விட்டு விட்டு, 6,000 மைல் கடற்பயணம் செய்யத் துணிவதுடன், ஒரு வெளிநாட்டில் ரயில் பயணங்களின் கஷ்டங்களை எதிர்கொண்டு, மொழிகள் தெரியாமல், தன்னந்தனியாக வாழும் எதிர்பாராத திருப்பங்களில் ஈடுபட்டு,  வெய்யிலின் கொடுமைக்கு இணங்கி, தனக்கு பழக்கமில்லாத ஒத்துவராத சூழ்நிலைகளில் வாழ்வார்? அவர் தனது வீட்டிலேயே சந்தோஷமாக இருந்திருக்கலாம். தனது உட்புற மன அமைதிக்காக உள்ள ஏக்கம் தான் அவரை இங்கு கொண்டு வந்துள்ளது.  

உண்மை தான்! அவர் இங்கு வந்து சேர்ந்து  நான்கு நாட்களுக்குள் அவருக்கு ஏற்பட்ட ஒளிவீசுகின்ற அனுபவங்களிலிருந்தே அவரது ஆர்வத்தின் தீவிரம் வெளிப்படுகிறது, என்று சொல்கின்றனர்.  

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 19, 1935
உரையாடல் 16.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது
16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!