Divine grace and personal effort go together
30. "நான் ஒரு பாவி" என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்
28 D. சந்தோஷம் நமது உண்மைத் தன்மை

தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

ஒரு சமயம்,
மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. ஆஸ்ரம கூடத்தின் சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். சில வருகையாளர்கள் கடலூரிலிருந்து வந்திருந்தனர்.

பக்தர்களில் ஒரு துணை நீதிபதியும், அவருடன் இருந்த இரண்டு வயதான பெண்டிரும் இருந்தனர். துணை நீதிபதி உரையாடலைத் துவங்கினார். உலகஞ்சார்ந்த பொருட்களின் நிலையாமையைப் பற்றி அவர் கேள்வி கேட்டார் : “மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றை உணர்ந்து அறிய வழிகாட்டுமா?”

மகரிஷி.: எல்லாவற்றாலும் உரைக்கப்பட்டபடி, எல்லா உண்மையான சாதகர்களாலும் உணரப்பட்டபடி, மிகவும் உயர்வான ஆன்மாவில் நிலையாக ஆழ்ந்திருப்பது மட்டுமே நம்மை அதை அறிய வைக்கும், உணர வைக்கும். அது நம்மாலும், நமக்குள்ளும் இருப்பதால், மெய்மையையும் பொய்மையையும் பற்றிய எந்த அளவு ஆராய்ச்சியும், நம்மை துறந்தவர்களாக்கி, தோன்றி மறைகின்ற வெளிப்பாடுகளை  விட்டு விடத் தூண்டி, நிலையான மெய்மையும் உள்ளமையுமானதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வைத்து, நம்மை மேலே ஒரு படி முன்னேற வழிகாட்ட மட்டும் தான் உதவ முடியும். 

அடுத்த உரையாடல் “ஈஸ்வர பிரசாதம்”, அதாவது “கடவுள் அருள்” பற்றி திரும்பியது. எங்கும் நிறைந்த சொருப சாம்ராஜ்யம் அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது, ஒரு ஜீவனின் நேர்மையான, தளர்வுறாத முயற்சிகள் மட்டுமே அந்த ஜீவனை பிறப்புக்கும் இறப்புக்கும் திரும்பாமல் உள்ள நிலையை அடைய வழிகாட்டுமா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.  

மகரிஷி, அவரது முகம் முழுவதையும் ஒளிர்வித்து, எங்கும் பரவி விளங்கி, அவரைச் சூழ்ந்திருந்த பக்தர்களின் மீது பிரகாசித்த ஒரு சொல்லொணாத புன்னகையுடன், மிகவும் உறுதியான தொனியுடனும், உண்மையின் முத்திரையுடனும் பதிலளித்தார். 

“தெய்வீக அருள் சொரூப ஞானத்திற்கு மிகவும் அவசியமானது. அது, ஒருவர் கடவுளை அறிந்து உணர வழிகாட்டுகிறது. ஆனால் இத்தகைய அருள், முக்தியின் பாதையில் இடைவிடாமல், மிகவும் கடினமாக உழைத்து முயற்சி செய்துள்ள ஒரு உண்மையான பக்தர் அல்லது யோகிக்கு மட்டுமே இணங்கி அளிக்கப்படுகிறது. 

பக்தர்.: யோக நூல்களில், 6 மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், ஜீவன் இதயத்தில் உறைவதாக சொல்லப்படுகிறது. அது தானே சரி?

மகரிஷி.: ஆமாம். ஜீவனானது ஆழ்ந்த தூக்கத்தில் இதயத்தில் இருப்பதாகவும், விழிப்பு நிலையில் மூளையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதயம் என்பதை, நான்கு அறைகளைக் கொண்டு, இரத்தத்தைச் செலுத்தும் தசைக் குழிவாக எண்ண வேண்டிய அவசியமில்லை. இந்த கருத்தை ஆதரிக்கும் வாசகங்கள் நிச்சயமாக உள்ளன. இதயம் என்பதை ஒரு நரம்புத் தொகுப்பு அல்லது அந்த இடத்தைச் சுற்றி உள்ள நரம்பு மையங்கள் என்றும் வேறு சிலர் எடுத்துக் கொள்கின்றனர். எந்த கருத்து சரியானதானாலும், அதைப் பற்றி நமக்கு அக்கறையில்லை. நம்மைத் தவிர வேறு குறைவான எதைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. நாம் நிச்சயமாக நமக்குள் இருக்கிறோம். அதைப் பற்றி சந்தேகங்களோ அல்லது விவாதங்களோ இருக்க முடியாது.  

இதயம் என்பது வேதங்களிலும், மறை நூல்களிலும், “நான்” என்னும் கருத்து எழும் இடமாக குறிப்பிட உபயோகப்படுத்தப் படுகிறது.   அது “சதைப்பிடிப்பான பந்து” ஒன்றிலிருந்தா எழுகிறது? அது நமக்குள் எங்கோ, நமது உள்ளமையின் நடுவில் தோன்றி எழுகிறது. “நான்” என்பதற்கு ஒரு இருப்பிடம் கிடையாது. எல்லாம் சுய சொரூபம் தான். அதைத் தவிர வேறொன்றுமே இல்லை. எனவே, இதயம் என்பது, நமது முழு உடம்பும், முழு பிரபஞ்சத்தின் உடம்பும், “நான்” என்று கருதப்படுகிறதென்று சொல்லப்படவேண்டும்.  ஆனால் பயிற்சி செய்யும் சாதகருக்கு உதவி அளிக்க, நாம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியையும், உடலின் ஒரு பகுதியையும் இதயம் என்று குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆனால், உண்மையில், நாம் எல்லா இடத்திலும் உள்ளோம்; இருப்பதெல்லாம் நாம் தான்; வேறு ஒன்றுமே இல்லை. 

பக்தர்.: அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை  அடைய தெய்வீக அருள் தேவை என்று சொல்லப்படுகிறது.  இது உண்மை தானா?

மகரிஷி.: நாமே கடவுள், ஈஸ்வரர் தான். ஈஸ்வர திருஷ்டி, அதாவது நம்மைக் கடவுளாகக் காண்பது, அதுவே தெய்வீக அருள் தான். எனவே கடளின் அருள் பெற நமக்கு தெய்வீக அருள் வேண்டியிருக்கிறது! மகரிஷி புன்சிரிக்கிறார். எல்லா பக்தர்களும் ஒன்றாகச் சிரிக்கின்றனர்.

பக்தர்.: ஈஸ்வர பிரசாதம், அதாவது தெய்வீக அருள்; இதிலிருந்து வேறுபட்டு ஈஸ்வர அனுக்கிரகம், அதாவது தெய்வீக தயவு என்றும் உள்ளது. இது உண்மையா? 

மகரிஷி.: கடவுளைப் பற்றி நினைப்பது தான் தெய்வீக தயவு, ஈஸ்வர அனுக்கிரகம்! கடவுள் தமது தன்மையில் அருள் தான். கடவுளின் அருளால் தான் நீங்கள் கடவுளைப் பற்றி நினைக்கிறீர்கள். 

பக்தர்.: குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா?

மகரிஷி.: அவை இரண்டுக்கும் இடையில் ஏன் வித்தியாசம் காண வேண்டும்? குரு கடவுளே தான்; கடவுளை விட்டு வேறு வித்தியாசமானவர் இல்லை.

பக்தர்.: நேர்மையான வாழ்க்கையில் ஈடுபட்டு, ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்து ஒருமுக சிந்தனை செய்ய முனையும் போது, அடிக்கடி ஒரு வீழ்ச்சி, சீர்குலைவு, முறிவு ஏற்படுகிறது. என்ன செய்வது?  

மகரிஷி.: எல்லாம் கடைசியில் சரியாக ஆகி விடும். உங்களுடைய தீர்மானத்தின் நிலையான உணர்ச்சி வேகம், ஒவ்வொரு வீழ்ச்சிக்கும், முறிவுக்கும் பிறகு உங்களை மீண்டும் தூக்கி நிற்க வைக்கும். சிறிது சிறிதாக எல்லா தடங்கல்களும் வெல்லப்படும். உங்களுடைய உணர்வோட்டம் வலிமைப்படும். எல்லாம் கடைசியில் சரியாக ஆகி விடும். நிலையான உறுதி, தீர்மானம் தான் தேவை.

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 29.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

30. "நான் ஒரு பாவி" என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்
28 D. சந்தோஷம் நமது உண்மைத் தன்மை
29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!