What is Surrender? How to do it?
மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்
சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும்

சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?

உரையாடல் 503.

ஒரு அமெரிக்க பக்தர் மகரிஷியிடம் கேட்டார் : நான் குருவாகிய தங்களிடமிருந்து அகன்று இருக்கும்போது செயல்படுவதற்காக ஒரு உபதேசம் வேண்டுகிறேன்.

மகரிஷி அவரிடம் சொன்னார் : நீங்கள் கற்பனை செய்துக் கொண்டிருப்பது போல், குரு உங்களுக்கு வெளியில் இல்லை. அவர் உங்களுக்குள் இருக்கிறார். உண்மையில் அவர் ஆன்மாவே தான். இந்த உண்மையை உணருங்கள். அவரை உங்களுக்குள் நாடி அவரை அங்கு கண்டுபிடியுங்கள். பிறகு நீங்கள் எப்போதும் இடைவிடாமல் அவருடன் ஆன்மீக தொடர்பு கொள்வீர்கள். உபதேசம் எப்போதும் உள்ளது. அது இல்லாமல் இருப்பதே இல்லை. அது எப்போதும் உங்களை கைவிடாது. மேலும் நீங்கள் குருவை விட்டு அகன்று இருக்கவே முடியாது. 

பக்தர்: நான் ஒரு பொறியியல் நிறுவனத்தில் பங்குதாரர். ஆனால் அது எனக்கு மிகுந்த கவலையில்லை. நான் என்னுடைய நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் ஆன்மீகக் கொள்கைகளை கொண்டு வர முயல்கிறேன்.

மகரிஷி: அது நல்லது. உயர்ந்த சக்தியிடம் உங்களை சரணடைந்துக் கொண்டு விட்டால் எல்லாம் நன்மை தான். அந்த சக்தி உங்கள் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும். வினைகளைச் செய்பவர் நீங்கள் தான் என்று நினைத்துக்கொள்ளும் வரையில், உங்களது செயல்களின் விளைவுகளை நீங்கள்  அடைய வேண்டி வரும். அதற்கு மாறாக, நீங்கள் உங்களை சரணடைந்துக் கொண்டு, உங்களது தனிப்பட்ட ஜீவனை உயர்ந்த சக்தியின் ஒரு கருவி என்று உணர்ந்துக் கொண்டால், அந்த சக்தி உங்களது செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும். அதற்கு பிறகு நீங்கள் அவற்றால் பாதிக்கப் பட மாட்டீர்கள். உங்கள் பணிகளும் தடைகள் இல்லாமல் நிகழும்.

நீங்கள் அந்த சக்தியை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நடக்கப் போகும் நிகழ்வுகளின் திட்டம் மாறப்போவதில்லை. ஆனால் உங்கள் மனப்போக்கில் ஒரு மாறுதல் உண்டாகும். ஒரு ரயிலில் பிரயாணம் செய்யும் போது, பயணச் சுமையை ஏன் உங்கள் தலை மீது வைத்துக் கொள்ள வேண்டும்? சுமை உங்கள் தலை மீது இருந்தாலும், ரயிலின் தரை மீது இருந்தாலும், அது உங்களையும், உங்கள் பயணச் சுமையையும் தாங்கிக் கொண்டு செல்கிறது. சுமையை உங்கள் தலை மீது வைத்துக் கொள்வதால், ரயிலின் சுமையை நீங்கள் குறைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக நீங்கள் உங்களை அநாவசியமாக சிரமப் படுத்திக் கொள்வீர்கள்.  தாமே எல்லாவற்றையும் செய்பவராக இந்த உலகத்தில் நினைக்கும் நபர்களும் இதே போலத் தான். 

உரையாடல் 63.

உயர்ந்த சக்தியிடம்  சரணடைவதைப் பற்றி ஒரு பக்தருக்கு மகரிஷி விளக்கினார்.  

தற்போதைய கஷ்டம் என்னவென்றால் ஒரு மனிதர், தானே செயல்களைச் செய்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அது  தவறு. உயர்ந்த சக்தி தான் எல்லாவற்றையும் செய்கிறது. மனிதர் ஒரு கருவி தான். இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டால்,  அவர் இன்னல்களிலிருந்து விடுபட்டு இருக்கிறார். இல்லையெனில் அவர் இன்னல்களை ஈர்க்கிறார்.  இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கோயில் கோபுரத்தில் ஒரு உருவம் இருக்கிறது. அங்கு அது கோபுரத்தின் சுமையை தன் தோளில் தாங்கிக் கொண்டிருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உடல் அமைப்பும் தோற்றமும் அது கோபுரத்தின் பெரும் சுமையை அதிக சிரமத்துடன் தாங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள். கோபுரம் பூமியின் மேல் கட்டப்பட்டுள்ளது. அது அடிவாரத்தின் மேல் திடமாக அமர்ந்துள்ளது. அந்த உருவம் கோபுரத்தைச் சேர்ந்த ஒரு பகுதி தான். ஆனாலும், அது கோபுரத்தையே தாங்கிக் கொண்டிருப்பது போல் தோன்ற வைக்கப் பட்டிருக்கிறது. இது வேடிக்கையாக இல்லை? செயல்கள் செய்வதை தானே செய்வதாக நினக்கும் மனிதரும் இதே போல் தான்.  

உரையாடல் 398.

இன்னொரு உரையாடலில் ஒரு பக்தருக்கு சரணாகதி என்றால் என்ன என்பதைப் பற்றி மகரிஷி விளக்கினார். 

தூக்கத்தில் நீங்கள் உள்ளுக்குள் பொருந்தி இருக்கிறீர்கள். விழித்தவுடனேயே உங்கள் மனம் இதையும் அதையும், மற்ற வேறு எல்லாவற்றையும் நினைத்தவாறு வெளியே பாய்ந்து ஓடுகிறது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது உள்ளிலும் வெளியிலும்  செயல்பட முடியும் ஒரு சக்தியால் தான் செய்ய முடியும். இத்தகைய சக்தியை ஒரு உடலுடன் இணைத்து வைக்க முடியுமா?

நாம் இந்த உலகத்தையே  நம்முடைய எத்தனங்களால் வெல்ல முடியும் என்று  நினைக்கிறோம்.  அது முடியாமல் போகும்போது, நாம் சலிப்புற்று ஏமாற்றமடைந்து மனதின் உட்புறம் துரத்தப்படுகிறாம். அப்போது நாம், “ஓ, மனிதரை விட உயர்ந்த சக்தி ஒன்று உள்ளது” என்று உணர்கிறோம். ஒரு உயர்ந்த சக்தி உள்ளது என்பது ஒப்புக் கொள்ளப் பட்டு அறிந்துக் கொள்ளப் பட வேண்டும். 

தான்மை என்பது ஒரு மிக வலிமையான யானையாகும். அதை ஒரு சிங்கத்தைத் தவிர வேறு எதாலும் கட்டுப்படுத்த முடியாது. சிங்கத்தைப் பார்த்ததுமே யானை நடுங்கி மரித்து விடும். இந்த உதாரணத்தில், குரு சிங்கத்தைப் போன்றவர். நமது தான்மை மறையும் நிலையில் தான் நமது மகிமை இருக்கிறது என்று நாளைடைவில் நாம் அறிந்துக் கொள்வோம். அந்த நிலையை அடைவதற்கு, ஒருவர் “குருபரனே! நீங்களே என் கதி, புகலிடம், அடைக்கலம்!” என்று சொன்னவாறு சரணடைய வேண்டும். பிறகு குருவானவர், “இந்த மனிதர் அறிவுரை பெற தகுதியுள்ள நிலையில் இருக்கிறார்” என்று கண்டு கொண்டு, அவருக்கு வழி காட்டுகிறார்.

பக்தர்: சுய சரணாகதி என்றால் என்ன?

மகரிஷி: அதுவும் சுய கட்டுப்பாடும் ஒன்றே தான்.  தான்மை இயங்குவதற்குக் காரணமாக இருக்கும் ஆழ்ந்த மனப்போக்குகளை நீக்குவது, மனக் கட்டுப்பாட்டினால் அடையப் படுகிறது. உயர்ந்த சக்தியை உணர்ந்துக்கொண்டால் தான், தான்மை என்னும் அகங்காரம் அடங்குகிறது. இத்தகைய அறிவு அல்லது உணர்வு தான் சரணாகதி அல்லது சுய கட்டுப்பாடு. இல்லையெனில், கோபுரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு உருவம், தானே சிரமத்துடன் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் விதத்தில்  காட்சி அளிப்பது போல், தான்மை அகங்காரத்துடன் தோற்றமளிக்கிறது. உயர்ந்த சக்தி இல்லாமல் தான்மையினால் இயங்க முடியாது. ஆனாலும், தன்னாலேயே இயங்குவதாக தான்மை நினத்துக் கொள்கிறது.

பக்தர்: புரட்சி செய்து முரண்டடிக்கும் மனதைக் கட்டுப் படுத்துவது எப்படி?

மகரிஷி: அதன் மூலம் எங்கிருக்கிறது என்று தேடி அதை மறைந்து போகச் செய்யுங்கள். அல்லது சரணடைந்து, அதை அடக்கப்பட விடுங்கள்.

பக்தர்: ஆனால் மனம் எங்கள் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி விடுகிறதே.

மகரிஷி: இருக்கட்டும். உங்களுக்கு நினைவு வந்தவுடன் மறுபடியும் அதை உட்புறம் திருப்புங்கள். அது போதும். 

யாரும் எத்தனம் இல்லாமல் வெற்றி அடைவதில்லை. மனக் கட்டுப்பாடு ஒருவரின் பிறப்புரிமை இல்லை. சிலர் மட்டுமே தங்கள் விடா முயற்சியினால் வெற்றி பெறுகிறார்கள்.    

ரயிலில் பயணம் செய்யும் ஒரு பிரயாணி, தன்னுடைய முட்டாள்தனத்தினால் பயணச் சுமையை தன் தலையின் மீது வைத்துக் கொள்கிறார். அதை அவர் கீழே வைக்கட்டும். அதற்குப் பிறகும் அந்தச் சுமை தானாகவே சேருமிடத்தை அடைகிறது என்று அவர்அறிந்துக் கொள்வார். அதே போல், நாம் தான் செயல்களைச் செய்பவர் என்று வேஷம் போட வேண்டாம். அதற்கு மாறாக நமக்கு வழிகாட்டும் சக்தியிடம் நம்மை சமர்ப்பித்துக் கொள்வோம்.

உரையாடல் 201.

ஒரு பக்தர் திரு அரபிந்தோவின் சரணாகதிக் கொள்கைகளைப் பற்றி கேட்டார்.

மகரிஷி: அரபிந்தோ முழுமையான சரணாகதியை அறிவுறுத்துகிறார். நாம் முதலில் அதைச் செய்து விட்டு, பிறகு தேவையானல், மற்ற விஷயங்களைப் பற்றி விவாத்திப்போம், இப்போது வேண்டாம். தமது குறைபாடுகள் நீங்காமல் இருப்பவர்கள், மனதைக் கடந்த அனுபவங்களைப் பற்றி விவாதிப்பதில் பயனேதும் இல்லை.

முதலில் சரணாகதி என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள். அது தான்மை அகங்காரத்தை அதன் மூலாதாரத்தில் ஒன்று சேர வைப்பதாகும். இந்த நிலையில் எப்போதும் விளங்கும் சுய சொரூபத்திடம் தான்மை சரணடைகிறது. எல்லாம் நாம் விரும்புவதாக இருப்பதற்குக் காரணம் நமது சுய சொரூபத்திடம் நமக்கு உள்ள அன்பினால் தான். 

மிகவும் உயர்ந்த சக்தியான, மெய்யான ஆன்மாவிடம் தான், நமது தான்மையை சரணடைகிறோம்; அந்த சக்தி எது விரும்புகிறதோ அதைச் செய்ய விடுகிறோம். ஏற்கனவே தான்மை ஆன்மாவினுடையது தான். உள்ளபடியே, நமக்கு தான்மையின் மீது எந்த உரிமையும் கிடையாது. இருந்தாலும், ஒருவேளை அப்படி உரிமைகள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவற்றை நாம் சரணடைந்து விட வேண்டும்.  

ஆன்ம ஞானம் என்பது, எப்போதும் எங்கும் விளங்கும் மெய்யான ஒன்றை உணர்வதற்கு தடங்கலாக உள்ள தடைகளை நீக்குவதே ஆகும். 

Talk 521.

பாரத நாடு சுதந்திரத்திற்காக அல்லல் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், சிலர் அதைப் பற்றி மகரிஷியைக் கேட்டனர்.

மகரிஷி: காந்திஜி தம்மை தெய்வத்திடம் சரணடைந்துக் கொண்டு, தன்னலமில்லாமல் செயல்படுகிறார். அவர் விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல், அவை எப்படி வருகிறதோ அப்படியே ஏற்றுக் கொள்கிறார். அது தான் நாட்டிற்காக சேவை செய்பவர்களின் மனப்பாங்காக இருக்க வேண்டும். 

பகதர்: காரியங்கள் வெற்றி அடையுமா?

மகரிஷி: கேள்வி கேட்பவர் தன்னை சரணடைந்துக் கொள்ளாததால், இந்தக் கேள்வி எழுகிறது. முதலில் சரணடையுங்கள். சரணாகதி இல்லாததால் இந்த சந்தேகம் எழுகிறது. சரணாகதியின் மூலமாக வலிமை பெறுங்கள். பிறகு நீங்கள் எவ்வளவு வலிமை அடைகிறீர்களோ, அதற்கேற்றார்போல், அந்த அளவில் உங்களது சுற்றுப்புறங்களும் சூழ்நிலைகளும் மேம்படும்.

உரையாடல் 135.

மூன்று ஐரோப்பிய பெண்கள் மகரிஷியைக் காண வந்தனர். அவர்கள் கேள்விகள் கேட்டனர்.

பக்தர்: உலகின் முழு திட்டம் உண்மையிலேயே நல்லதா? அல்லது அது ஒரு பிழையா? அதாவது, அது நாம் முடிந்தவரை ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு தவறான திட்டமா?

மகரிஷி: திட்டம் நல்லதே தான். தவறு நம்மில் உள்ளது. அந்தத் தவறை நாம் சரிப்படுத்திக் கொண்டால், முழு திட்டமும் சரியாகி விடும்.

பக்தர்: உலக துன்பத்தை மாற்றுவதற்கு நாங்கள் எப்படி உதவ முடியும்? 

மகரிஷி: மெய்யான சுய சொரூபத்தை உணருங்கள். அது மட்டுமே தான் தேவை. 

பக்தர்: உலகத்திற்கு சேவை செய்வதற்காக நமது ஆன்ம ஞானத்தை விரைவில் பெற முடியுமா? அப்படியானால், எப்படி?  

மகரிஷி: நம்மையே நம்மால் உதவிக் கொள்ள முடியாததால், நாம் உயர்ந்த சக்தியிடம் முற்றிலும் சரணடைந்து விட வேண்டும். பிறகு அது நம்மையும் உலகத்தையும் கவனித்துக் கொள்ளும்.

உரையாடல் 295.

பக்தர்: என்னால் என்னுடைய சந்தோஷமான சுய தன்மையை உணர முடியவில்லை.

மகரிஷி: ஏனெனில், நீங்கள் சுய தன்மையாக இல்லாததுடன் இணைந்துக் கொண்டிருக்கிறீர்கள். சுய தன்மையாக இல்லாதது கூட சுய தன்மையை விட்டு அகன்று இல்லை. ஆனாலும், உடல் அகன்று இருக்கிறது என்ற தவறான கருத்து இருக்கிறது. அதனால், சுய தன்மை உடலுடன் குழப்பிக் கொள்ளப்பட்டுள்ளது. சந்தோஷம் வெளிப்படுவதற்கு இந்த தவறான இணைப்பு நீங்க வேண்டும்.

பக்தர்: ஆனால் என்னால் அது முடியவில்லை.

அப்போது வெறொரு பக்தர், ஒரு பொறியாளர், மகரிஷியிடம் சரணடையும்படி ஆலோசனை அளித்தார். 

பக்தர்: ஒப்புக் கொள்கிறேன்.

மகரிஷி: உங்கள் உண்மைத் தன்மை சந்தோஷம். அது தெரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் உண்மைத் தன்மையை தடை செய்வது என்ன என்று பாருங்கள். உங்களது தவறான கருத்து தான் தடை என்று சொல்லப்படுகிறது. தவறை விலக்குங்கள். ஒரு நோயாளி, தனது நோயை குணப்படுத்த, மருத்தவர் கொடுத்த மருந்தை, தானே தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பக்தர்: நோயாளி தன்னை உதவிக் கொள்ள முடியாமல் மிகவும் பலவீனமாக இருக்கிறார். அதனால் அவர் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் மருத்துவரின் கையில் தன்னை ஒப்படைக்கிறார்.

மகரிஷி: அப்படியானால், மருத்துவருக்கு முழு சுதந்திரம் தர வேண்டும். நோயாளியும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். அது போல், அமைதியாக இருங்கள். அது தான் சரணாகதி. அது எத்தனமில்லாமல் இருப்பதாகும்.

பக்தர்: அது தான் சிறந்த மருந்தும் கூட.

உரையாடல் 244.

பக்தர்: எனக்கு மன அமைதி இல்லை…ஏதோ ஒன்று அதைத் தடுக்கிறது. ஒருவேளை என் தலைவிதி…”

சில நிமிடங்களுக்கு அமைதி நிலவியது. 

மகரிஷி.: தலைவிதி என்ன? சரணடையுங்கள், எல்லாம் சரியாகி விடும். எல்லா பொறுப்பையும் கடவுளின் மீது போட்டு விடுங்கள். சுமையை நீங்களே தாங்கிக் கொள்ளாதீர்கள். பிறகு தலைவிதி உங்களுக்கு என்ன செய்ய முடியும்?

பக்தர்.: சரணாகதி முடியாத காரியம்.  
மகரிஷி.: சரி. முழுமையான சரணாகதி முதலில் முடியாதது தான். ஆனால் ஓரளவிற்கு, ஒரு பகுதியான சரணாகதி கட்டாயம் எல்லோராலும் செய்ய முடியும். கூடிய காலத்தில், அது முழு சரணாகதிக்கு வழி காட்டும். சரணகதி செய்ய முடியவில்லை என்றால், என்ன செய்வது? மன அமைதி இல்லையே. அதை அடைய உங்களால் முடியவில்லையே. அது சரணாகதியால் தான் பெற முடியும். 

பக்தர்.: பாதி சரணாகதி…அது தலைவிதியின் முற்செயலை நீக்க முடியுமா? 
மகரிஷி.: ஆமாம், நிச்சயமாக. அதால் நீக்க முடியும். 

பக்தர்.: தலைவிதி என்பது முந்தைய கர்மாவினால், பழவினையினால் இல்லையா? (Karma)
மகரிஷி.: ஒருவர் கடவுளிடம் சரணடைந்து விட்டால், கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார். 

பக்தர்.: தலைவிதி  கடவுளால் வகுக்கப்பட்டு வழங்கப்படுவதால், கடவுளே அதை எப்படி நீக்க முடியும்? 
மகரிஷி.: எல்லாம் கடவுளில் தான் உள்ளது.

உரையாடல் 450. 

மகரிஷி:

“நான் உள்ளேன்” என்ற மெய்யான உணர்வு தான் கடவுள். எனவே “நான் யார்?” என்று சுய விசாரணை செய்யுங்கள்.  மனதுள் ஆழ்ந்து மூழ்கி, மெய்யான சுய சொரூபமாக விளங்குங்கள். அது தான் மெய்யான உள்ளமையாக விளங்கும் கடவுள்.

அந்தக் கடவுளிடம் சரணடைந்து விடுங்கள். நீங்கள் விரும்புவதைச் செய்யும்படி கேட்டால், பிறகு அது சரணகதி இல்லை; அதற்கு பதிலாக அது அவருக்கு அளிக்கும் கட்டளையாகும். அவரை உங்களுக்குக் கீழ்படிய வைத்து விட்டு, நீங்கள் சரணடைந்து விட்டதாக நினைத்துக் கொள்ள முடியாது. எது மிகச் சிறந்தது, அதை எப்போது எப்படி செய்வது என்று அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் முற்றிலும், முழுமையாக அவரிடம் விட்டு விடுங்கள். சுமை அவருடையது. உங்களுக்கு இனிமேல் கவலைகள் எதுவுமே கிடையாது. உங்கள் கவலைகள் எல்லாம் அவருடைய கவலைகள். இதுவே சரணாகதி.

தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

 

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்
சரணாகதி என்பது தனது சொந்த மூலமுதலான சொரூபத்திற்கு செய்வதாகும்
சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!