Sri Ramana Maharshi
அருணாசலத்திற்கு பயணம்
திரு ரமண மகரிஷியின் இளமை காலம்

Sri Ramana - the young Sage

மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்

 

வெங்கடராமனின் வாழ்வின் திருப்பம் எதிர்பாராத விதத்தில் தன்னியல்பாகவே வந்தது. ஒரு நாள் பகலில், ஒரு காரணமும் இன்றி, இளைஞருக்கு திடீரென்று மரணத்தின் கொடுமையான பயம் தோன்றியது. பல வருடங்களுக்குப் பிறகு, திரு ரமணர் தமது அனுபவத்தை பின் வருமாறு உறைத்தார்.

மதுரையை விட்டு அறவே அகன்று செல்வதற்கு சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னால், என் வாழ்வில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. அது திடீரென்று தோன்றியது. நான் வீட்டின் ஒரு அறையில் அமர்ந்திருந்தேன். எப்போதுமே என் உடல்நிலையில் நோய் ஒன்றும் இருப்பதில்லை. அன்றும் என் உடல்நலத்தில் ஒரு தவறும் இல்லை. ஆனால், திடீரென்று மரணத்தின் கொடிய பயம் என்னை ஆட்கொண்டது. இதற்கு காரணமாக சுட்டிக் காட்ட என் உடல்நிலையில் ஒன்றும் இல்லை. மேலும், பயத்துக்குக் காரணம் என்னவென்றோ அல்லது என்னவாக இருக்கக் கூடும் என்றோ அறிய நான் முயற்சி செய்யவில்லை. எனக்கு இப்போது முடிவு வந்து விட்டது என்று தோன்றியது, அவ்வளவு தான். இதைப் பற்றி என்ன செய்வது என்று யோசனை செய்ய ஆரம்பித்தேன். மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவோ அல்லது பெரியோர்கள், நண்பர்களை நாடவோ தோன்றவில்லை. நானே, இப்போதே, இங்கேயே இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என்று தீர்மானம் செய்தேன்.

மரண பயத்தின் அதிர்ச்சி என் மனதை உட்புறமாக திருப்பியது. நான் சொற்களை அமைத்துச் சொல்லாமல், என் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் : ‘இப்போது வாழ்வின் முடிவு வந்து விட்டது. இதன் பொருள் என்ன? சாவது எது? இந்த உடல் தான். இப்படி நினைத்தவாறு, உடனே இறப்பின் அனுபவத்தை நாடகக் காட்சி போல் அமைத்து உருவகம் செய்தேன். இறந்த உடல் போல் நடித்து, என்னுடைய விசாரணைக்கு மேலும் மெய்மையும் உண்மைத்தன்மையும் கொடுத்தேன். மூச்சை உள்ளடக்கி, ஒரு ஓசையும் வெளிவராதபடி, ‘நான்’ என்னும் சொல்லோ அல்லது வேறு சொற்களோ சொல்ல முடியாதபடி, வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டேன். சரி, இப்போது உடல் இறந்து விட்டது. உடல் சிறிது நேரத்தில் சாம்பலாகி விடப்போகிறது. ஆனாலும், இந்த உடலின் இறப்பினால், நான் இறந்து விட்டேனா? இந்த உடலா ‘நான்’? இந்த சடலம், பேசாமல், உணர்வின்றி இருக்கிறது. ஆனால் நானோ என்னுடைய முழு தன்மையையும், தன்னிலையையும் நன்றாக வலுவாக உணர்கிறேன். என்னுடைய ‘நான்’ என்னும் குரலைக் கூட, உடலை விட்டு தனியாக உணர்கிறேன். எனவே நான் உடலைக் கடந்த ஆன்மா, இறைபொருள்.

உடல் இறக்கிறது. ஆனால் இந்த உடலைக் கடந்து உய்யும் ஆன்மாவை மரணத்தால் தொட முடியாது. இதன் பொருள் என்னவென்றால், நான் இறப்பில்லாத ஆன்மா. இதெல்லாம் எனக்கு உயிரற்ற எண்ணங்களாக வரவில்லை. பெரும்பாலும் எண்ணமே இல்லாமல், இது என்னுள் மிக தெளிவான உண்மையாக புரிந்தது. ‘நான்’ மிகவும் மெய். இந்த ‘நான்’ ஒன்று தான் என்னைப் பற்றிய எல்லா நிலைகளிலும் உண்மையான நிலை. மற்ற எல்லாவித நடவடிக்கைகளுக்கும் இந்த ‘நான்’ தான் மத்தியம். அந்த கணத்திலிருந்து இந்த ‘நான்’, ஒரு அபூர்வ கவர்ச்சியுடன், தன் மீதே ஆழ்ந்த கவனம் செலுத்தி வந்தது.

அதன் பிறகு மரண பயம் அறவே நீங்கி விட்டது. அந்த சமயத்திலிருந்து, அகத்தினுள் உறையும் ஆன்மாவின் மீது இடைவிடாது எப்போதும் ஆழ்ந்த கவனம் இருந்து வந்தது. மற்ற எண்ணங்கள், பலவித இசைப் பண்களைப் போல வந்து போய்க் கொண்டிருந்தன. ஆனால், இந்த ‘நான்’, எல்லா இசைப் பண்களுடன் கலந்திருப்பதுடன், அவற்றுக்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருக்கும் ஸ்ருதியை போல இடைவிடாது தொடர்ந்து இருந்து வந்தது. பேசுவதிலோ, படிப்பதிலோ, அல்லது வேறு எந்த நடவடிக்கைகளிலோ உடம்பு ஈடுபட்டாலும், ‘நான்’ என்பது அந்த ஆன்மாவான ‘நான்’ என்ற உணர்வில் ஒன்றிணைந்திருந்தது. இந்த நெருக்கடிக்கு முன்னால், எனக்கு எனது மெய்யான தன்னிலையைப் பற்றி ஒரு தெளிவான அறிவு இல்லை. அதன் மேல் மிகுந்த கவனம் இல்லை; நேரடியான கவர்ச்சி எதுவும் நான் உணரவில்லை. மேலும், எப்போதும் அந்த நிலையிலேயெ உறையும் ஆவலும் இல்லை.

இவ்வாறு ரமணர் தமது அனுபவத்தை உறைத்தார். இந்த மரணத்தைக் கடந்த அனுபவம்,  வெங்கடராமனின் உலக ஆசைகளிலும், நோக்கங்களிமும், மிகுந்த மாறுதலை உண்டாக்கியது. அவரது மனோபாவம் மிகவும் எளிமையாகவும், பணிவாகவும் மாறியது. மற்றவர்கள் அவரை நேர்மையற்ற முறையில் நடத்தியபோதும், அவர் அதைப் பற்றி பதிலுக்கு வாதமும் செய்யவில்லை, குறை சொல்லவும் இல்லை. இந்த நிலையைப் பற்றி அவரே பல காலம் கழித்து பின்வருமாறு சொன்னார்:

“என்னுடைய புதிய நிலையின் ஒரு சிறப்பியல்பு, மீனாட்சி கோவிலின் மீது தோன்றிய எனது மாறிய மனப்பான்மையாகும். முன்பெல்லாம், நான் எப்போதாவது எனது நண்பர்களுடன், தெய்வ உருவங்களைப் பார்க்கவும், விபூதி குங்குமம் அணியவும் சென்று வருவேன். பொதுவாக இதெல்லாம் என்னை ஒரு தனிவகையில் பாதிக்காது. ஆனால், எனக்கு ஏற்பட்ட விழிப்புணர்வுக்குப் பிறகு, நான் குறைந்த பட்சம் தினமும், மாலையில் கோவிலுக்கு சென்று வந்தேன். நான் தனியாக போய், சிவபெருமான், தேவி மீனாட்சி, நடராஜ பெருமான், அல்லது அறுபத்து மூவரின் உருவங்களுக்கு முன்னால் அசைவின்றி நீண்ட காலத்திற்கு நிற்பேன். அப்படி நின்ற போது, அலையலையாக தெய்வீக உணர்ச்சி வேகங்கள் என்னை ஆட்கொண்டன.”

அருணாசலத்திற்கு பயணம்
திரு ரமண மகரிஷியின் இளமை காலம்
மரணத்தைக் கடந்த நிலையின் அனுபவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!