Sri Ramana Gita
ரமண கீதை - அத்தியாயம் 1 - சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்

திரு ரமண கீதை – அறிமுகம்

 

சாதாரணமாக மௌனத்தில் தான் பகவான் திரு ரமண மகரிஷி தமது பக்தர்களுடன் உரையாடினார். ஆனால், சில அரிய சமயங்களில், அவர் அவர்களுடன் வாய்மொழியில் பேசினார். சில சமயங்களில், தேவைப் பட்டபோது, அவர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிர்ஷ்டவசமாக, இந்த விதமான பல உரையாடல்களும் அறிவுரைகளும் பதிவு செய்யப்பட்டன. அவை,  மன அமைதி, முக்தி, விமோசனம், ஆன்ம ஞானம், இறுதியில் சாந்திப் பூர்வமான ஆன்மாவில் உறைதல் – இவற்றை நாடும் மனித குலத்திற்கு அளிக்கப் பட்டன.

சில சீடர்கள் – இவற்றில் சிலர் சம்பிரதாய வழியில் ஆன்ம ஞானம் பெற்றவர்கள், சிலர் ஆன்மீக பயிற்சிகளில் மிகவும் மேம்பட்டவர்கள், சிலர் பகவானின் பக்தர்கள் – இவர்கள் எல்லாம் சில புதிரான, சிக்கலான கேள்விகளுக்கு பதில்களை நாடினர். இது 1913 லிருந்து 1917 வரையில் நிகழ்ந்து வந்தது. இந்த விஷயங்கள், அவரது பிரதம சீடரான திரு வசிஷ்ட கணபதி முனியால், அவரது பண்டைய இலக்கிய சமஸ்கிருத வரிகளில், பகவத் கீதையின் உருப்படிவத்தில் எழுதப்பட்டு, பதிவு செய்யப் பட்டன. ஏனெனில், இங்கும் கூட, பகவத் கீதையைப் போல், ஆசான் ஒரு தெய்வீக உத்வேகத்தில் பேசினார்; கேள்வி கேட்டவர்கள் மனித குலத்தின் பிரநிதிகளாவர்; பேசப்பட்ட விஷயமும் வாழ்வில் இருப்பதற்குள் மிகவும் முக்கியமான அம்சமான, மிக்க உயர்வான மெய்மையான ஆன்மாவில் உறைதலாகும்.

ரமண கீதையென்னும் இந்த மேன்மையான படைப்பு, 300 வரிசைகள் கொண்ட 18 அத்தியாயங்களாகும். பல மொழிகளில் பல மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. முதல் வருஷங்களில் திரு ரமண மகரிஷிக்கு அருகில் இருந்து அவரது அறிவுரைகளைப் பெற்று வந்த திரு கபாலி சாஸ்திரியார்களால், ரமண கீதைக்கு சமஸ்கிருதத்தில் விளக்கவுரை அளிக்கப் பட்டது. இதை அவர் மூன்று வாரங்களில் அளித்தார். பிறகு, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பும் விளக்கவுரையும் திரு ஏ. நடராஜனால் அளிக்கப்பட்டது. 

ரமண கீதையில் மகரிஷியின் போதனையின் வேதாந்த விஷயம் மட்டும் இல்லை, ஒருவர் தனது குறிக்கோளை அடைய, அல்லது தனது சுய சொருபத்தைப் பற்றிய உண்மையை உணர, அவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகளும், செயல்முறைகளும் கூட கொடுக்கப் பட்டுள்ளன. மேலும், பல சமயங்களில் தவறாக புரிந்துக் கொள்ளப் பட்டுள்ள சில சொற்றொடர்கள், கருத்துக்கள், இவைகளின் துல்லியமான உட்பொருளும் தாத்பர்யமும் அளிக்கப் பட்டுள்ளன. அதோடு, பழங்கால சமூக மரபுகள் சரியாக செய்யப்பட வேண்டிய வழிமுறைகள், சமூகம், பெண்களின் நிலைப்பாடு, “சக்தி” என்பது என்ன, இவற்றைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல்களும் அளிக்கப் பட்டுள்ளன. கடைசியாக, ஆன்ம ஞானத்தைப் பொறுத்த வரையில், உபநிடதங்கள் அளித்துள்ள பிரம்ம வித்யாவிற்கும், மகரிஷி வெளிப்படுத்தி, தமது அனுபவத்தால் உறுதி செய்து, அதைத் தாங்களே பயிற்சி செய்து உறுதிப் படுத்த உலக மனிதர்களுக்கு தரப்பட்ட ஆத்ம வித்யாவிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி பல தெளிவாக்கல்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

ஆன்ம சுய சொரூபத்தை உணர்ந்த ஒரு ஞானியின் அனுபவத்தால் உறுதிப்படுத்தப் பட்டுள்ள உண்மையான அறிவையும் செயல்முறை உத்திகளையும் விரும்பும் பக்தர்களுக்கும், ஆன்மீக உண்மையை நாடுபவர்களுக்கும், ரமண கீதை மிகவும் சிறந்த உதவியாகும்.

நேர்மையான பக்தர்களின் கேள்விகளுக்கு, தமது ஞானம், அனுபவம், இவற்றின் அதிகாரத்துடன் திரு ரமண மகரிஷி அளித்த பதில்கள் கொண்ட தெய்வீகமான, ஆழ்ந்த அறிவுரைகள் கொண்டது இந்த ரமண கீதை.  நிலையான சந்தோஷம், முக்தி, விமோசனம், நிரந்தரமான உள்ளமை, பேரானந்தமான உயர்ந்த மெய்மையில் உறைதல் – இவற்றையெல்லாம் விரும்பும் ஒரு ஆன்மீக பக்தருக்கு, ரமண கீதை மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது மிகவும் நிச்சயம்.

வசுந்தரா

 

ரமண கீதை - அத்தியாயம் 1 - சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்

திரு ரமண கீதை – அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!