திரு ரமண கீதை - அத்தியாயம் 7 - சுய விசாரணை
திரு ரமண கீதை - அத்தியாயம் 8 - வாழ்வின் நிலைகள்
ரமண கீதை - அத்தியாயம் 6 - மனக் கட்டுப்பாடு

திரு ரமண கீதை – அத்தியாயம் 7 – சுய விசாரணை

வரிசை 1 :

இந்த ஏழாவது அத்தியாயம் பரத்வாஜ முனியின் வழியில் வந்த திரு கார்ஷிணிக்கும் ஆசான் ரமணருக்கும் இடையில் நிகழ்ந்த பிரமாதமான உரையாடலை பதிவு செய்கிறது.

வரிசை 2 :

பக்தர் :

ஆன்ம சுய விசாரணையின் தன்மை என்ன? அதன் குறிக்கோள் என்ன? மற்ற வழிகளின் மூலமாக இதை விட மிக அதிகமான நல்ல விளைவுகள் கிடைக்குமா?

வரிசை 3 :

ரமணர் :

 எல்லா எண்ணங்களின் மொத்த எண்ணிக்கை, ‘நான்’ என்னும் எண்ணம், என்று சொல்லப் படுகிறது. இந்த “நான்” என்ற எண்ணத்தின் மூலாதாரத்தை உள்முகமாக விசாரணை செய்யுங்கள்.

வரிசை 4 :

ரமணர் :

இப்படி செய்வது தான் ஆன்ம சுய விசாரணையே தவிர மறை நூல்களை ஆராய்ந்து படிப்பது அல்ல. தான்மையின் மூலாதாரம் தேடப்படும் போது, தான்மை மூலாதாரத்தில் ஒன்று சேர்ந்து விடுகிறது.

வரிசை 5 :

ரமணர் :

மெய்யான சொரூபத்தின் பிரதிபலிப்பான தான்மையானது, மெய்யான சொரூபத்தில் ஒன்று சேரும் போது, மெய்யான சொரூபம் மட்டுமே, தனது எல்லா பூரணத்துவத்திலும் முழுமையிலும் விளங்குகிறது.

வரிசை 6 :

ரமணர் :

ஆன்ம சுய விசாரணை தான் எல்லா துன்பங்களுக்கும் சிகிச்சையும் மருந்துமாகும்.  அது தான் எல்லா விளைவுகளையும் பலன்களையும் விட மிகவும் உயர்ந்த பயனும் விளைவுமாகும். அதை விட சிறந்தது வேறெதுவுமே கிடையாது.

வரிசை 7 :

ரமணர் :

ஆன்ம சுய விசாரணையை தவிர உள்ள வேறு பயிற்சிகளால் அற்புதமான அமானுஷ்ய சக்திகள் பெற இயலும். ஆனால், இத்தகைய சக்திகளை ஒருவர் பெற்றாலும், சுய விசாரணை மட்டும் தான் முக்தியையும் விமோசனத்தையும் அளிக்கும். 

வரிசை 8 :

பக்தர் :

சுய விசாரணை செய்வதற்க்கு யார் தகுதியுள்ளவர்? ஒருவர் தமது தகுதியை தானே தெரிந்துக் கொள்ள முடியுமா?

வரிசை 9 :

ரமணர் :

எந்த ஒருவருக்கு ஆன்மீகப் பயிற்சிகளால் மனம் தூய்மையாக்கப் பட்டிருக்கிறதோ, அல்லது அவருக்கு முன்பிறவிகளில் புண்ணியம் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறதோ, எந்த ஒருவருக்கு உடலைப் பற்றியும்,  புலன் சார்ந்த பொருட்களைப் பற்றியும் விருப்பமின்மை இருக்கிறதோ, அவருக்குத் தான் ஆன்ம சுய விசாரணை செய்ய தகுதி இருக்கிறது.

வரிசை 10 :

ரமணர் :

எந்த ஒருவருக்கு புலன் சார்ந்த பொருட்களிடையே நடமாட முற்றிலும் விருப்பமில்லாமல் இருக்கிறதோ, எந்த ஒருவர் உடலின் நிலையற்ற தன்மையை உணர்கிறாரோ, அவரே சுய விசாரணை செய்ய தகுதி வாய்ந்தவர் என்று சொல்லப் படுகிறது.

வரிசை 11 :

ரமணர் :

உடலின் நிலையாமையை உணர்வதாலும், புலன் சார்ந்த பொருட்களில் பற்றுதல் இல்லாமல் இருப்பதாலும், இந்தக் குறிகளால், ஒருவருக்கு சுய விசாரண செய்வதற்கு தகுதி இருக்கிறதா என்று அறிந்துக் கொள்ள முடியும்.

வரிசை 12, 13 :

பக்தர் :

மெய்யைப் பொய்யிலிருந்து வேறுபடுத்தி அறிந்துக் கொண்டும், பற்றுதல் இல்லாமல் இருந்தும், சுய விசாரணைக்கு மிகவும் தயாராக உள்ள ஒருவருக்கு, புனிதக் குளியல்கள், குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடுகள், ஆழ்நிலை தியானம், புனித அக்கினி வழிபாடு, கடவுள் வழிபாடு, தெய்வீகப் பாடல்கள் பாடுவது, புனித யாத்திரை, விருப்புகளைத் தியாகம் செய்வது, தானம் செய்வது, கடுமையான பழக்க வழக்கங்கள், இவையெல்லாம் உபயோகம் அளிக்குமா, அல்லது இவையெல்லாம் வெறும் நேரத்தை வீணாக்கும் நடவடிக்கைகளா?

வரிசை 14 :

ரமணர் :

ஆரம்ப நிலையில் உள்ள, தகுதிவாய்ந்த, பற்றுதல்கள் குறைந்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, இந்தச் செயல்கள் எல்லாம் மனதை மேலும் மேலும் தூய்மையாக்கும். 

வரிசை 15 :

ரமணர் :

உடல், வாக்கு, மனம் – இவற்றின் நற்குணமுள்ள செயல்கள், இந்த செயல்களுக்கு எதிராக உடல், வாக்கு, மனம் மூலமாகச் செய்யப்படும் தீய செயல்களை அழித்து விடும்.

வரிசை 16 :

ரமணர் :

முற்றிலும் தூய்மையான மனங்களை உடைய, ஞானத்தில் முதிர்ந்த ஆசான்களின் செயல்கள் உலகம் முழுவதற்கும் நன்மை அளிக்கும்.

வரிசை 17 :

ரமணர் :

ஞானத்தில் முதிர்ந்த ஆசான்கள் மறை நூல்களின் கட்டளைகளுக்கு பயந்து செயல்களில் ஈடுபடுவதில்லை. அவர்களது செயல்கள் மற்றவர்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு மட்டுமே தான் செய்யப் படுகின்றன.

வரிசை 18 :

ரமணர் :

பற்றுதலும் இணைப்பும் இல்லாமலும், எதைச் செய்கிறோம் என்ற வித்தியாச உணர்வு இல்லாமலும் செய்யும் நற்குணமான புண்ணிய செயல்கள் செய்வது, சுய விசாரணையைத் தடை செய்யாது.

வரிசை 19 :

ரமணர் :

குறிப்பிட்ட செயல்களை செய்யாமல் இருப்பது, ஞானமுள்ளோர்க்கு  பாவமானதில்லை.  ஏனெனில், ஆன்ம சுய விசாரணையே எல்லாவற்றையும் விட மிக புண்ணியாமானதும், தூய்மையாக்குவதுமான செயலாகும். 

வரிசை 20 :

ரமணர் :

ஞானியர்களில் இரண்டு வகைகள் உள்ளன.  ஒரு வகை, தனிமையில் ஆன்மீக விசாரணை செய்பவர்கள். இன்னொரு வகை, மற்றவர்களின் நன்மைக்காக செயல்களில் ஈடுபடுபவர்கள்.

வரிசை 21 :

பக்தர் :

பகவான், சுய விசாரணையைத் தவிர முக்திக்காக வேறு பாதைகள் உள்ளனவா? அவை ஒன்றே தானா, அல்லது விதவிதமானவையா?

வரிசை 22 :

ரமணர் :

மற்ற பாதைகள் ஏதோ ஒன்றை அடைய முயல்கின்றன. சுய விசாரணையானது யார் எத்தனம் செய்கிறாரோ அவரையே தேடுகிறது. மற்ற பாதைகளின் விளைவுக்கு அதிக காலம் தேவைப் படும்.  ஆனால், இறுதியில் ஆன்ம ஞானம் கிடைக்கும்.

வரிசை 23 :

ரமணர் :

ஒரே ஒரு எண்ணத்தின் மீது ஆழ்நிலை தியானம் செய்வது, மனதை ஒருமுகமாக்குகிறது. இத்தகைய ஒரு முக மன நிலை ஆன்மாவில் உறைவதற்கு வழி காட்டுகிறது.

வரிசை 24 :

ரமணர் :

ஆன்மாவின் மீது ஆழ்நிலை தியானம் செய்பவர், ஆன்மாவை அடைவதை அறியாமல் ஆன்மாவை அடைகிறார். சுய விசாரணை செய்பவர் முழு உணர்வுடன் அறிந்துக் கொண்டு தன்னையே ஆன்மாவில் இழந்து ஒன்று சேர்ந்து விடுகிறார்.

வரிசை 25 :

ரமணர் :

தியானம் செய்யப்படும் சிறந்த விஷயம், அது கடவுளானாலும் வேறொரு புனிதமான ஒன்றானாலும், அது கடைசியில் மாபெரும் அக்கினியான ஆன்மாவில் ஒன்று சேர்ந்து விடுகிறது.

வரிசை 26 :

ரமணர் :

ஆழ்நிலை தியானத்துக்கும் சுய விசாரணைக்கும் குறிக்கோள் ஒன்று தான். ஆழ்நிலை தியானம், ஆழ்ந்த தியானத்தின் மூலமாக பரிபூரண அமைதியை அடைகிறது. சுய விசாரணை, ஞான மூலமாக பரிபூரண அமைதியை அடைகிறது.

 

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு : வசுந்தரா

திரு ரமண கீதை - அத்தியாயம் 8 - வாழ்வின் நிலைகள்
ரமண கீதை - அத்தியாயம் 6 - மனக் கட்டுப்பாடு

திரு ரமண கீதை – அத்தியாயம் 7 – சுய விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!