Highest Goal of Spiritual Experience
கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா

ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்

 

பக்தர்: மனிதனுக்கு ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் என்ன?
மகரிஷி: ஆன்ம சுயநிலையை அறிதல், ஆன்ம ஞானம்.

பக்தர்: மணமானவர் ஆன்ம சுயநிலையை அறிய முடியுமா? 
மகரிஷி: நிச்சயமாக! மணமானவரோ, மணமாகாதவரோ, ஒருவர் ஆன்ம சுயநிலையை அறியலாம்; ஏனெனில், ‘அது’ இங்கே, இப்போது, உள்ளது. அப்படி இல்லாமல், ஏதோ ஒரு சமயத்தில் செய்யும் முயற்சியால் அடையக்கூடியது என்றால், அதை நாடி பின்தொடர்வதில்  பிரயோஜனம் இல்லை. ஏனெனில், இயற்கையாக, இயல்பாக இல்லாதது நிரந்தரமானது அல்ல. ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், ஆன்மா இங்கே, இப்போது, தனியாக உள்ளது.

பக்தர்: கடல் நீரில் முங்கும் உப்பு பொம்மை ஒரு நீர்காப்பு கொண்ட உடையால் பாதுகாக்கப்படாது. தினமும், நாளும் பொழுதும் அதனுள் கடுமையாக உழல வேண்டியிருக்கும் இந்த உலகம் ஒரு கடல் போன்றது தான்.
மகரிஷி: ஆமாம், மனம் தான் நீர்காப்பு கொண்ட உடை. 

பக்தர்: எனவே, ஒருவர் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டே, இச்சை இன்றி, தனிமையில் உறைய முடியுமா? ஆனால், வாழ்வின் கடமைகள், உட்கார்ந்து தியானம் செய்யவோ, வழிபடக்கூடவோ நேரம் அளிப்பதில்லையே. 
மகரிஷி: ஆமாம். பற்றுதலோடு செய்யப்படும் வேலை ஒரு விலங்கு தான். ஆனால், பற்றுதல் இல்லாமல் செய்யப்படும் வேலை, செய்பவரை பாதிக்காது. அவர் வேலைச் செய்துக் கொண்டிருக்கும்போது கூட தனிமையில் தான் இருப்பார். கடமையில் ஈடுபடுவது தான் உண்மையான வணங்குதல், நமஸ்காரம். 1  கடவுளில் வாசம் செய்வது தான் உண்மையான ஆசனம். 2

பக்தர்: நான் இல்லத்தைத் துறக்க வேண்டாமா? 
மகரிஷி: அது உங்கள் விதியாக இருந்திருந்தால், இந்த கேள்வி எழுந்திருக்காது.

பக்தர்: பின் நீங்கள் ஏன் உங்கள் இளமையில் வீட்டை விட்டுச் சென்றீர்கள்? 
மகரிஷி: தெய்வீக அருள்முறை ஆக்ஞை இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. ஒருவரது வாழ்க்கையின் நடத்தை, அவரது பிராரப்தத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. 3

பக்தர்: எனது எல்லா நேரத்தையும் ஆன்மாவைத் தேடுவதற்காகவே கடத்துவது நல்லதா? அது என்னால் இயலாவிட்டால், நான் சும்மா அமைதியாக இருக்க வேண்டுமா? 
மகரிஷி: வேறு எதிலும் ஈடுபடாமல், அமைதியாக இருக்க முடிந்தால், அது மிகவும் நல்லது தான். அப்படி இருக்க முடியாவிட்டால், ஆன்ம ஞானத்தைப் பொருத்தவரை, சும்மா இருப்பதில் என்ன பிரயோஜனம்? ஒருவர் சுறுசுறுப்பாக இயங்கும் வரை, ஆன்மாவை அறிவதற்குச் செய்யும் முயற்சிகளை கைவிட வேண்டாம். 

பக்தர்: ஒருவரது செயல்கள் அடுத்த பிறவிகளில் அவரை பாதிக்குமா? 
மகரிஷி: நீங்கள் இப்போது பிறந்துள்ளீர்களா? அடுத்த பிறவிகளைப் பற்றி ஏன் நினைக்கிறீர்கள்? உண்மை என்னவெனில், பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. யார் பிறந்திருக்கிறாரோ அவர் இறப்பைப் பற்றியும் அதன் பரிகாரத்தைப் பற்றியும் கேட்கட்டும்!

பக்தர்: நீங்கள் இறந்தவர்களைக் காட்ட முடியுமா?
மகரிஷி: உங்கள் பிறப்புக்கு முன்னால், உங்களுடைய உறவினரை அறிந்தீர்களா? பின் ஏன் அவர்கள் இறந்த பிறகு அவர்களைத் தெரிந்துக்கொள்ள நாடுகிறீர்கள்? 

1 நமஸ்காரம்:  வணங்குவது, பக்தி காண்பிப்பது
namaste, namaskar
நமஸ்தே, நமஸ்காரம், வணக்கம்

 

2 ஆசனம்: தோற்ற அமைவு, தியானத்திற்காக உட்காரும் நிலை

3 பிராரப்தம்: விதி, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள வாழ்க்கை

(Maharshi’s Gospel)
மகரிஷியின் போதனை
வேலையும் துறவும்
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

 

கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா

ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!